பின்பற்றுபவர்கள்

வியாழன், 20 பிப்ரவரி, 2025

கோலாகல கோலாலம்பூர்!!


குதூகல கொண்டாட்ட
த்  தேர்!!! . 

நண்பர்களே,

முன் பதிவில் (தாய்லாந்து மலேசிய பயணம்!)_ சொல்லியதுபோல், பயணத்திட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்திற்கிணங்க, தாய்லாந்தில் ஓரிரவு மட்டும் தங்கிவிட்டு, ஆறு நாட்கள் கழித்து மீண்டும் தாய்லாந்து வரப்போகிறோமே என்பதால் அடுத்த நாள் காலை மலேசியா வந்ததடைந்தேன்.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் காலடி எடுத்து வைத்ததும் என் மனதில் என்னென்னவோ கற்பனைகள், கட்டுக்கடங்காத எண்ணக்குவியல்கள் வண்ணக்ககோலங்களாக அந்த பகல் நேரத்திலும் என் மன வான்வெளியில் சீறிப்பாய்ந்து சிதறி தெறித்து வர்ண ஜாலம் காட்டியதான உணர்வு என் உள்ளமெல்லாம்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்த 6 நாட்கள்  நான் தங்கப்போகும் விடுதிக்கும் சுமார் 60 கிலோமீட்டர் தூரம். அந்த தங்கும் விடுதி அமைந்திருக்கும் இடம்   நகரின் மையப்பகுதி மட்டுமல்லாது முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.  

51 மாடிகளை கொண்ட 5 நட்சத்திர அந்தஸ்துடன் திகழும் அந்த விடுதியில் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு எனக்கான 37ஆவது மாடியில் இருந்த அறைக்கு சென்று பயண களைப்பிலிருந்து  சற்று ஆசுவாசப்டுத்திக்கொண்டு  திரை சீலையை விலக்கி பார்க்க, ஆஹா ...

அறையில் இருந்த காபி எந்திரம் தயாரித்த நல்லதொரு காபியை  கீழிருக்கும் பரபரப்பான சாலையையும் அதன் நேர்த்தியையும் கண்டு மகிழ்ந்தவண்ணம் பருகி  முடித்துவிட்டு எனது பார்க்கவேண்டிய பட்டியலில் இருந்த முதல் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சாலை முழுக்க மக்கள் சாரை சாரையாக போய்க்கொண்டிருந்தனர். அவர்களுள் பெரும்பானமையினார் என்னைப்போன்ற வெளி நாட்டு சுற்றுலா மனிதர்கள்.

எனது விடுதியிலிருந்து சரியாக 7 நிமிடத்தில் அந்த இடம் வந்து சேர்ந்தேன்.

பேருவகையின் பெருவெள்ளம் என் உள்ளமெல்லாம் நிறைந்த ஆனந்தத்தின் வெளிப்பாடாக உடல் சிலிர்த்து கண்கள் வடித்த ஆனந்தக்கண்ணீரை துடைப்ப தால் என் கண்களை விட்டு இமைப்பொழுதினும்  அந்த காட்சி மறைய கூடாதென்றெண்ணி வடித்த கண்ணீரை துடைக்காமல் நீர்கோர்த்த கண்களுடன் அந்த அழகிய வடிவிலான காட்சியை மற்றுமொரு பரிமாணத்தோற்றத்தில்  கண்டு மகிழ்ந்தேன்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நியூயார்க் நகரின் பிரத்தியேக அடையாளமாக திகழ்ந்த உலக வர்த்தக மையத்தின்  அலுவல் கட்டிடமான  இரட்டை கோபுரம் நின்றுகொண்டிருந்த அந்த காலி இடத்தை பார்த்து சிந்திய  கண்ணீரும் அங்கே இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து அந்த கட்டிடத்தின் பிரமாண்டத்தையும் அதற்கேற்பட்ட கொடூர விபத்தையும் அதலுள்ளும் அந்த நேரத்தில்  அதன் அருகிலேயும்   இருந்த மக்களின் நிலைமையையும் எண்ணி  என் சிந்தனையும் என் எண்ண  வெளிப்பாடும் அது விளைவித்த வேதனையும் வேறு. அமர்ந்திருந்த இடத்தில் என் தொப்பியை மறந்து வைத்துவிட்டு (தொலைத்துவிட்டு) வந்தது வேறு விஷயம்.

பலமுறை, அனுமதிக்கப்பட்ட உயரம் வரை ஏறி சென்று பார்த்து களித்து வியந்த பிரான்சு தேசத்தின் தலைநகரின் மையத்தில் அமைந்திருக்கும் ஈபிள் கோபுரம் கொடுத்த வியப்பும் பிரமாண்டமும்  அதனால் ஏற்பட்ட இன்ப அதிர்வுகள் வேறு.

நவீன 7 உலக அதிசயங்களுள் ஒன்றென கருதப்படும் இத்தாலி நாட்டின் பீசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் 251  சுழல்  படிகளில் செங்குத்தாக  ஏறி சென்று கோபுர உச்சியிலுள்ள 7 வெண்கல ராட்சஷ மணிகள் எழுப்பும், நம் கர்னாடக சங்கீத ராகமான சங்கரா பரணத்திற்கிணையான, 7சுரங்களை எழுப்பும் மணிகள் ஒவ்வொன்றையும் தொட்டுப்பார்த்தபோது ஏற்பட்ட இதய சுரங்கள் கொடுத்த இன்ப அதிர்வுகள்  என்பது வேறு. 

சில வருடங்களுக்கு முன் துபாய் சென்று அண்ணாந்து பார்த்துமட்டுமல்ல மின்னல் வேகத்தில் பயணிக்கும் மின்தூக்கிமூலம் அதன் அனுமதிக்கப்பட்ட உச்சிவரை சென்று அங்கே அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டே துபாய் நகரின் எல்லா இடங்களையும் , பாலைவன சோலைகளையும்  கண்டு களித்து புல்லரிப்பு பூரிப்புடன்  மகிழ்ந்த   இன்றுவரை உலகின் உயரமான கட்டிடமாக திகழும் புர்ஜ் கலீபா கொடுத்த அனுபவம் வேறு.

அதேபோல1970க்கு முன்புவரை உலகின் அதிஉயர கட்டிடமாக திகழ்ந்த எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தை பார்த்தபோது வல்லரசு  நாடுகளின் பெரிய அண்ணனாக கருதப்படும் அமெரிக்காவிலுள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிட மாக திகழ்ந்த இந்த வானுயர கட்டிடத்திலேறி பார்த்துவிட்டோம் என்ற எண்ணம் கொடுத்த அப்போதைய வண்ணம் என்பது வேறு.

எகிப்த்து தேசத்தில்  பார்த்த பிரமீடுகளின்  பிரமாண்டம் கொடுத்த பிரமிப்பு என்பது வேறு.

இப்படி பல நாடுகளுக்கு சென்று பல பிரமிப்பூட்டும் வான் தொடும் உயர கட்டிடங்களை கண்டு களித்த என் மனம், இன்று கொண்ட பேரானந்தமும் பெரும் வியப்பும் மேற் சொன்ன அத்தனை கட்டிட வியப்புகளுக்கு சற்றும் குறையாதது என்று சாதாரணமாக சொல்லி கடந்து செல்ல முடியாது.

ஏனென்றால், இன்று வரை உலகின் அதிக உயரமான இரட்டை கோபுரமாக திகழும்  ஒரே கட்டிடம் இந்த கண்கவர் மலேஷிய தலைநகரில் மையம் கொண்டிருக்கும், " பெட்ரோனாஸ் கோபுரத்தை" பார்த்துப்பார்த்து வியந்ததுபோல், நான் வேறெங்கும் இத்தகு வியப்பிற்குள்ளாகவில்லை என்பதே உண்மை.

வெளியிலிருந்து சுற்றி சுற்றி பார்த்துவிட்டு, கட்டிடத்தின் உள்ளே சென்று கீழிருந்து மேல்வரை உலகின் முன்னணி வணிக  நிறுவனங்கள் நடத்தும் அனைத்து கடைகளையும்  உலகின் பவ்வேறு வகையான உணவு கூடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு ,அந்த உணவு கூடங்களில் என் மனதிற்கு நெருக்கமாக கண்ணில்பட்ட ஒரு பெயர் பலகை பார்த்து அங்கே சென்று பிடித்தமான  உணவினை உண்ட இடம், நம்ம ஊரு  "சரவணா பவன்".

அந்த கட்டிடத்தின் பிரதான நினைவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலிருந்து வீட்டு காட்சி அலமாரியில் வைப்பதற்காக அந்த இரட்டை கோபுரத்தின் சிறிய வடிவிலான ஒரு நினைவு பொருளையும் , வீட்டு குளிர்சாதன பெட்டி கதவில் பொருத்திவைக்க ஒரு வடிவத்தையும் வாங்கிக்கொண்டு கட்டிடம் விட்டு வெளியில் பவந்தேன். கண்களால் பார்த்து வியக்கும் பிரமாண்டம்  இப்போது குழந்தை வடிவில் என் கைகளில்.  

கண் கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்ட வர்ண ஜாலம் காட்டி ஜொலித்துக்கொண்டிருந்த அந்த இரட்டை கோபுர  கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த CHRISTMAS அலங்காரங்களை பார்த்துவிட்டு வெளியில் அந்த இருள் கவ்வும் நேரத்தில் அமைக்கப்பட்டடிருந்த இசைக்கேற்ப நடனமாடும் வண்ண விளக்கொளியில் மின்னி துள்ளிகுதிக்கும் நீரூற்றுகளில் மனதை பறிகொடுத்துவிட்டு நேரம் போவதே தெரியாதவண்ணம் பல மணி நேரம் அங்கேயே இருந்துவிட்டு, அறைக்கு திரும்ப மனமில்லாமல் அரை மனதுடன் திரும்பி வந்தேன்.

அங்கே தங்கி இருந்த அத்தனை ஆறு நாட்களிலும் எப்படியாவது ஒருமுறையேனும் அந்த கட்டிடத்தின் அருகில் சென்றுவர தவறவில்லை.

தங்கி இருந்த விடுதியின் 52 ஆவது தளத்திற்கு சென்றால் அங்கே இருக்கும் INFINITY நீச்சல் குளத்தில் இருந்தவண்ணமும் இந்த அழகிய இரட்டை கோபுரத்தின் ஒளி உமிழும் எழிலார்ந்த உச்சியை பார்க்கமுடியும் என்பது  ஒரு கூடுதல் சிறப்பு.   

20 ஆம் நூற்றாண்டின் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக  சிறப்பு பெயர்பெற்று விளங்கிய இந்த கட்டிடம் தற்போது உலகின் 5 ஆவது உயரமான கட்டிடமாக திகழ்ந்தாலும் , இன்னமும் உலகின் அதி உயரமான இரட்டை கோபுரம் இதுமட்டுமே என்ற உயர்ந்த அந்தஸ்த்துடன் திகழ்வது மிக மிக சிறப்பு.

இந்த கோபுரம் 1242 அடிகள் கொண்ட  கட்டிடமாக இருந்தாலும் அந்த கட்டிட உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கூறிய அமைப்புகளையும் சேர்த்து அளந்துபார்த்தால்  1483 அடியை தொடுகிறதாம்.

மலேசியாவில் கால்வைத்த முதல் நாளே இத்தனை பிரமிப்புகளுக்கு ஆட்பட்ட எனக்கு இன்னமும்  பல பிரமிப்புகள் அடுத்தடுத்த நாட்களில்  காத்திருந்தன.

அவற்றை பிறகு பார்க்கலாம்.

அதுவரை.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம். 

கோ.


4 கருத்துகள்:

  1. அம்மாடி...  எவ்வளவு இடங்கள் பார்த்திருக்கிறீர்கள், பார்த்து வருகிறீர்கள்...  பிரமிப்பாய் இருக்கிறது....  37 வது மாடியிலிருந்து காட்சிகள்...  பரவசமாய் இருந்திருக்கும்.  

    இது போன்ற பகிர்வுகளுக்கு மேலும் படங்கள் சேர்த்திருக்கலாம்.  அந்த 37 வது மாடிக் காட்சிகள் உட்பட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு ஸ்ரீராம்.

      புகைப்படங்கள் மற்றும் காணொளி பதிவுகளை பதிவேற்றம் செய்வதில் சில பின்னடைவுகள்.

      அடுத்தமுறை இணைக்க முயல்கிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. பயணத்தில் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை, உணர்வு பூர்வமாகச் சொல்லிச் சென்றது சிறப்பு.

    தொடரட்டும் பயணமும் அனுபவங்களும்.

    பதிலளிநீக்கு

  3. வெங்கட் ,

    வணக்கம்.

    வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு