பின்பற்றுபவர்கள்

புதன், 12 பிப்ரவரி, 2025

காதிலர் தினம்!

தினம்! தினம்!!

நண்பர்களே,

வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் ஒரே ஒரு தினம் மட்டும், தினம் தினம் கொண்டடப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.  இதனை  கொண்டாடுவதா அல்லது அனுசரிப்பதா?

இன்றைய உலகில் எத்தனையோ செய்திகள் சம்பவங்கள் நிகழ்வுகள் நடைபெற்றாலும் நம் கவனத்திற்கும் நமது பார்வைக்கும் நமது உணர்வுகளுக்கும் கொண்டுவரப்படும் செய்திகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே.

அவை மகிழ்ச்சிக்குரியனவாகமும் வருத்தத்திற்குரியனவாகமும் பல வேளை  நமக்கான பிரத்தியேக செய்தியாகவும்கூட  இருக்கலாம்.

அப்படி நமக்கு பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள ஊடகங்கள் வாயிலாகவும், செவி வழி  செய்திகளாகவும் அறிய வரும் செய்திகள்   எண்ணிக்கையில் மிக மிக சொற்பமாக இருந்தாலும், அந்த செய்திகள் குறித்து நம்முடைய சிந்தனைகள், செயல்பாடுகள், மகிழ்சி, வருத்தம், கவலை, முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?

சில செய்திகள்  உடனடியாக மற்றவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய  செய்திகளும் நம்பகமான செயலி அல்லது நண்பர்கள் உறவினர்கள், குழுக்கள் மூலம்  வாட்சப் தகவல்களாக   பகிரப்படும்போது அவற்றை எத்தனை துரிதமாக மற்றவர்களோடு பகிர்கிறோம்/ விவாதிக்கின்றோம்/எச்சரிக்கிறோம் ?

குறிப்பாக: அவசரமாக நம் உள்ளூரில் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட ரத்தம் தேவைப்படும் செய்தியாக இருக்கலாம்; அல்லது  நமது பகுதியில் ஏற்பட்ட ஒரு விபத்து, சாலை போக்குவரத்து துண்டிப்பு, வெள்ள  அபாய எச்சரிக்கை, மின்சார துண்டிப்பு, குடிநீர் குழாய் வெடிப்பு - குடி நீர் துண்டிப்பு, அருகில் ஏற்பட்ட தீ விபத்து  போன்று எத்தனையோ உடனடியாக பகிரப்படவேண்டிய செய்திகளை மக்கள் எப்படி வகை படுத்துகிறார்கள் எத்தனை துரிதமாக அல்லது மெத்தனமாக அவற்றை கருத்தில் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

பயண அவசரத்தில் பாஸ்போர்ட்டை தொலைத்தவருக்கு அதை கண்டுபிடித்தவர் உடனடியாக தகவல் தெரிவித்து உரியவரிடத்தில் காலதாமதமின்றி சேர்ப்பித்த நிகழ்ச்சிகளும் உண்டு அதே போல, அடுத்த நாள் பரீட்சைக்கான அனுமதி சீட்டு - ஹால் டிக்கெட்டை தொலைத்தவரின் விலாசம் அறிந்து அதை  அவரிடம் ஒப்படைத்த செய்தியும் உண்டு.

அதேபோல தகவல் அறிந்தவுடனே அதை மற்றவர்களோடு பகிர்ந்து, நடக்க இருந்த பேராபத்தை தடுத்த நிகழ்ச்சிகளும் உண்டு.

மலை உச்சிகளிலிருந்தும் ஆழ்கடலலையில் இன்றுகொண்டும் செல்ஃபீ எடுக்கவும், இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்தும் , ஓடும் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்தும், ஓடும் ரயிலின்  கதவினை திறந்து  நின்றுகொண்டு தலைகளையும் கைகளையும் கால்களையும் வெளியில் நீட்டி பலர் பாராட்டுவார்கள் என்றெண்ணி தலை, கால் கை , மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த செய்திகள் அறிந்தும் அவற்றை தொடரும் போக்கு இன்னும் தொடர்வது வேதனைக்குரியது. 

அப்படி நமக்கு அறியவரும் பல செய்திகளால்   நேரடியாக நமக்கு எந்த நன்மையையும், பாதிப்பும்  இல்லை என்றாலும் சொல்லப்படும் உண்மை செய்திகளை உள்ளத்தில்  நிறுத்திக்கொள்வதும் வாய்ப்பு ஏற்படும்போது மற்றவர்களின் நலன் கருதி அவர்களோடு பகிர்ந்துகொள்வதும்  சம்பந்தப்பட்டவருக்கோ அல்லது நமக்கோ கூட பின்னொரு சமயத்தில் பயன்படும் என்றெண்ணி அந்த செய்திகளின் வீரியத்தை உதாசீன படுத்தாமல் இருப்பது நல்லது. 

அடுத்தடுத்து வரும் ஒரே மாதிரியான செய்திகளை கேட்டும் அறிந்தும் என் மனம் அடையும் வேதனை சொல்லில் அடங்காது.

குறிப்பாக , அதிகம் வட்டி பெற்றுத்தருவதாக கூறி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நெற்றி வியர்வை, இரத்தம்   சிந்தி சம்பாதித்து சிறுக சிறுக சேர்த்த பணத்தை  தமது நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறும் அல்லது மாதா மாதம் இவ்வளவு செலுத்தி வந்தால் சில வருடங்களில்  அவை பல லட்சங்களாக திருப்பி கொடுக்கப்படும்  என்ற தேன் கலந்த பசப்பு - பொய் வாக்குறுதிகளால் தமது முழு சேமிப்பையும் இழந்து தற்கொலைவரை சென்ற செய்திகளை நான் பள்ளிக்கூடம் படித்த காலத்தில் இருந்து சமீப காலம் வரை கேட்க்கும் போதும்  செய்தி  ஊடகங்கள் மூலம் அறியும் போதும் உள்ளபடியே பெரும் வருத்தமும் வேதனையும் அடைகிறேன்.

ஒருமுறை ஒருசிலர் பட்ட அனுபவத்தை கேட்டு அறிந்தவர்களா இவர்கள்? அல்லது அறியாமல் செய்பவர்களா? 

இரவில் வீட்டை கன்னமிட்டு திருடும் கொள்ளையர்கள் அங்காங்கே நமது ஊரில் ஊடுருவி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தும் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்யாமல் அருகிலுள்ள காவல் நிலயத்திற்கும் தகவல் சொல்லாமல் வெளியூர் சென்ற வீட்டார் பறிகொடுத்த பணம் நகை ஏராளம், பின்னர் வருந்தி என்ன பயன்?

வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டவர்கள் காட்டிய கைவரிசைகள் கொலைகள் போன்றவற்றை அறிந்தும் கேட்டும் வாசித்தும் முழுவிவரம் , ஆதார் அடையாளம், அவர்களின் இருப்பிடம், அவர்களை அறிந்தவர்கள் குறித்த தகவல் , இதற்கு முன் வேலை செய்த வீட்டாரின் பரிந்துரை போன்றவற்றை சரிபார்க்காமல் , முன் பின் தெரியாதவர்களை வேலைக்கமர்த்தி பலர் படும்  பாடுகளை அறிந்து, இன்னும் ஏன் இப்படியே காலாகாலமாக மக்கள் செயல்படுகிறார்கள் எனும் கேள்வியும் எனக்குள் எழுகிறது.

முன் பின் தெரியாதவர்கள் அல்லது பேருந்து ரயில் அல்லது விமானப்பயணத்தின்போது பார்த்தவர்களிடத்தில் நமது முழு விவரம் தொடர்பு விலாசம், குடும்ப பின்னணி, குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்,   தொலைபேசி எண்கள்  பகிர்ந்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளை குறித்து அறிந்திருந்தும் இன்னமும் தமது முழு விவரம், அன்றாட செயல்பாடுகள் தமது எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக  பகிரும் நபர்களை என்னவென்பது? 

மேற்சொன்ன சில உதாரணங்கள் மிக மிக சாதாரணமாக தோன்றினாலும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அநேகம்; அவற்றால் இழந்தவற்றை, மீட்டெடுக்க முடியாதவைகளாவும்  போவதுண்டு.

அதைப்போல  வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் மோசடி செய்தவர்கள் குறித்து அறிந்து மீண்டும் மீண்டும்  இப்படி பணம் கொடுத்து ஏமாறுபவர்களை குறித்தும் எனது வேதனை மிகுகிறது.

இந்த வரிசையில், குழந்தை பாக்கியம் தருவதாகவும், தீராத நோய்களை தீர்த்து வைப்பதாகவும்,  புதையல்  எடுத்து தருவதாகவும், தோஷங்களை தீர்த்துவைப்பதாகவும, லாட்டரியில் பணம் விழும்படி செய்வதாகவும்கூறி பணம் பறித்துக்கொண்டு வாழ்வை சீரழித்த போலி சாமியார்களிடம் ஏமாந்தவர்களின்  கண்ணீர் கதைகளை கேட்டபின்னும் , இதுபோன்ற சாமியார்களின் பின் செல்லும் பக்த்த(??) கோடிகளின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டிச்செல்லும் அவலமும் அடங்கிய பாடில்லை.

உரிய படிப்பு இல்லை, உள்ளூரில் வசதி இல்லை, எப்படியாவது வெளி நாடு சென்று பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்றெண்ணி போலி முகவர்கள் என்றறியாமல் ,நண்பர்கள் , உறவினர்களுக்கும் தெரியாமல், முகவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் இவர்களது காதுகளில் தேன் பாய்ச்ச , மனைவியின் நகைகள், சொந்தமாக இருந்த சிறு நிலம் போன்றவற்றை விற்றதோடு அக்கம் பக்கம் கடன் வாங்கி ஒரு பெருந் தொகையை அந்த முகவர்களிடத்தில் கொடுத்துவிட்டு, பல மாதம் கழித்து அப்படி ஒரு முகவர் அங்கு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போன கதைகளையும்   கேட்டிருந்தும் இன்னமும் சிலர் இப்படி ஏமாந்து போவது வேதனை அளிக்கிறது.

சமீபத்தில் உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு மலையாள பட தழுவல் திரைப்படம் பார்த்து கண்கள் கலங்கினேன்.

இதுபோன்ற சம்பவங்களை கேட்டும் அறிந்தும் இன்னும் ஏன் மக்கள் இதுபோன்று ஏமாறுகிறார்கள்?

சமீபத்தில்  மனிதஉரிமை மீறலாக பலராலும் கருதப்படும், அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட  இந்தியர்களின்  பாடுகளையும் அவர்களது வெளி நாட்டு மோகம் / தாகம் , தகுதிகள்  ஏதுமில்லாம போலி முகவர்களின் ஆசை வார்த்தைகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் நம்பி , தமது நிலங்களை , நகைகளை, வீடுகளை விற்று, உரிய விசா மற்றும் குடியுரிமை  அனுமதி ஏதுமின்றி பணத்தை கொடுத்து, சவால்கள்  நிறைந்த பல இன்னல்களை கடந்து அமெரிக்க எல்லையை அடைந்தபின்னும் அங்கு தைரியமாக வாழ உரிமையின்றி   பின்னர் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு , கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டு  சொல்லொண்ணா தூரத்திற்கு ஆட்பட்டு, கை-கால்களில் விலங்கிடப்பட்டு , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத ராணுவ விமானத்தில்   ஆடு மாடுகளை போல் ஏற்றி கொண்டுவந்து இந்தியாவில் இறக்கிவிடப்பட்ட செய்தி அறிந்து ஒரு சக மனிதானாக  மட்டுமல்லாமல் ஒரு இந்தியனாக நான் பட்ட துயரமும் வேதனையும் சொல்லில் சுருக்கமுடியாது.

இப்படி இதுபோன்ற ஏமாற்று வேலைகளால் ஏமார்ந்து போகும் மனிதர்களின் அனுபவங்களை கேட்டும் அறிந்தும் இன்னமும், தினம் தினம்   இதுபோன்ற ஏமாற்று காரர்களை நம்பி பணத்தையும் காலத்தையும்  இளமையையும் வாழ்க்கையையும் இழக்க தயார் நிலையில் இருக்கும் இவர்கள்  காதுகளிருந்தும் கேளாதவராய்  - காதிலராய் கருதப்படுவர்.

காதுள்ளவன் கேட்டக்கடவன் என்றால், காதுகள் எனும் தலையி ஒட்டிக்கொண்டிருக்கும் காதுகள் உள்ளவரென்று மட்டும் அர்த்தமல்ல.

காதுகள் வழியாக , கண்கள் வழியாக, ஊடகங்கள் வழியாக சொல்லப்படும் உண்மை நிலையினை , எதார்த்த நிலைமையை, உலக நடப்புகளை , பலரது அவலமான அனுபவ பாடங்களை கருத்தில்கொண்டு தமது மற்றும் தம் சுற்றத்தினரின் பாதைகளை செவ்வை  படுத்திக்கொள்ளவும் தவிர்க்க கூடிய ஆபத்துகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தவிர்த்து போதுமென்ற மனமுடனும் , தகுதிகள், திறமைகள் இருப்பின் அவற்றை முறையோடும், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் குடியுரிமை சட்டதிட்டங்களுக்கு இணங்க , நேர்மையோடும் மனசாட்சியோடும் நடக்க முற்படுவதே, காதுள்ளவர் செய்யக்கூடிய செயலாக இருக்கும்.

அப்படி இல்லாமல் எல்லோரையும் நம்பி மண்குதிரையோடு ஆற்றில் இறங்கினால் என்ன நடக்கும் ? "காதிலர்தினம்", தினம் தினம் (கொண்டாடப்பட) அனுசரிக்கப்படவேண்டி இருக்கும்.

இந்தப்  பதிவின் ஆதங்க நோக்கம்  எனும்  சங்கு யார் காதில் ஊதப்படுகிறது என்பதையும் அதன் பலனையும்  பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில் முறையற்ற(!!??) வகையில் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் அதே சமயத்தில் அவர்கள்  அனைவருக்கு சிறப்பான மறுவாழ்வும், மன அமைதியும் , மகிழ்ச்சியும்   கிடைக்கவேண்டும்  என்று எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி ,

மீண்டும்  ச(சி)ந்திப்போம்.

கோ.

 

4 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    காதிலர் தினம் - சரியாகச் சொன்னீர்கள். பட்டறிவு கொண்ட பலர் சொன்னாலும் எவருக்கும் புரிவதில்லை. மீண்டும் மீண்டும் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் வெங்கட்.

    இந்த பக்கம் வந்து அநேக நாட்கள் ஆகி விட்டன, இடையில் கொஞ்சம் வெளிநாடு பயணங்கள் மற்றும் அலுவல் பணி சுமை.

    நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. அப்படி இல்லாமல் எல்லோரையும் நம்பி மண்குதிரையோடு ஆற்றில் இறங்கினால் என்ன நடக்கும் ? "காதிலர்தினம்", தினம் தினம் (கொண்டாடப்பட) அனுசரிக்கப்படவேண்டி இருக்கும்.//

    ரொம்ப சரி கோ ...தலைப்பு முதல்ல டக்குனு காதலர் தினம் நு வாசித்துவிட்டு அப்புறம் காதிலர்...சரியா சொல்லிருக்கீங்க...

    அப்படிப் பார்த்தா தினமுமே காதிலர் தினம் தான் கோ. நீங்க சொல்லியிருக்கும் அத்த்னை கருத்துகளையும் டிட்டோ செய்கிறேன்.

    அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டவர்களை நினைக்கும் போது மனம் கஷ்டமாகத்தான் இருந்தது கோ ஆனால் எப்படி முறையற்ற என்று சொல்ல முடியும்? அவர்கள் அப்படிச் சென்றது தவறு இல்லையா? விதிமுறைகளைப் பின் பற்றாமல் சென்றது? அங்கு சென்று எதற்குப் பயந்து வாழ வேன்டும் அப்படி வாழ்ந்தும் இப்ப எந்தப் பயனும் இல்லாமல்தானே திரும்பியிருக்காங்க. மக்களும் கொஞ்சம் யோசிக்க வேண்டும், கோ. எவ்வளவு செய்திகள் வந்தாலும் திருந்தவில்லை என்றால்? இருக்கும் பொருளை எல்லாம் விற்றுச் செல்வதற்கு அதுவும் இப்படி ஏமாந்து....இங்கேயே ஏதேனும் வேலை செய்திருக்கலாமே என்று தோன்றும் எனக்கு.

    ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அன்பிற்கினியவர்களே.

    காதிலர் தினம் பதிவை வாசித்து தா ங்களிட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்.

    ஆமாம் நீங்கள் சொன்னதுபோல் பலரும் இந்த தலைப்பை எடுத்தவுடன் சரியாக வாசித்தது புரிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லாமல்தான் போய் இருக்கும் , பதிவை தொடர்ந்து வாசிக்கையில் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

    பதிவில் சொன்னதுபோல்,அவ்வப்போது நடக்கும் இதுபோன்ற சோக நிகழ்வுகளால் மனம் ஒருகணம் வருத்தப்பட்டாலும், தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்கிணங்கள் பல செய்திகள் அன்றாடம் கேள்விப்பட்ட பிறகும் மக்கள் தானாக சென்று இதுபோன்ற கோரா வலைகளில் சிக்கி வேதனைக்குள்ளாவது ஏற்கத்தக்கதாக இல்லை.

    ஏமாறுபவர்கள் இருப்பார்கள் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் இந்த உலகம் உழலும் வரை.

    நன்றி.
    மீண்டும் ச(சி)ந்திப்போம்.

    பதிலளிநீக்கு