பின்பற்றுபவர்கள்

திங்கள், 17 மார்ச், 2025

தேன் வேண்டுமா?

 நான் வேண்டுமா?

நண்பர்களே,

கடந்த இரண்டு வாரங்கள் விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்தேன்.

எப்போதும்போல இந்தியாவிற்குள்ளேயே பல இடங்களை சுற்றிபார்க்கவோ அல்லது சில வெளிஊர்களுக்கு சென்று  வரவோ எந்த திட்டமும் இல்லை என்பதால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ஆம்பூர், ராணிப்பேட்டை  போன்ற சில இடங்களில்  இருந்த நண்பர்களை பார்க்கமட்டுமே இந்த இரண்டுவாரா விடுமுறையை பயன் படுத்திக்கொண்டேன்.

அப்படி நண்பர்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்லுகையில் கொஞ்சம் இனிப்பு காரம் பழங்கள் வாங்கி செல்லும் வகையில் ஒரு வாழைப்பழ தள்ளுவண்டி கடைக்கு சென்றேன்.

பலதரப்பட்ட வாழைப்பழங்கள் பரப்பி வைக்கப்பட்திருந்தன.

பழங்கள் என்ன விலை என்றேன்.

இந்த பழம் சீப்பு 70 ரூபாய், அந்தப்பழம் சீப்பு 60 ரூபாய் என ஒவ்வொரு பழத்தின் விலையையும்  கடைக்காரர் சொன்னார்.

சுவை எப்படி இருக்கும்? இது நான்.

ஒருவகை பழத்தை சுட்டிக்காட்டி இது, " தேன்" போல இருக்கும் என்றார்.

அந்த பழம்?

இது "ஆப்பிள்" போல இருக்கும் என்றார்.

அப்படியானால் இவற்றுள் ஒன்றுகூட வாழைப்பழம்போல்  இருக்காதா? இது நான்.

அதுவரை கீழே   குனிந்து பழங்களை பார்த்துக்கொண்டிருந்தவர் அப்போதுதான் என்னை ஏறெடுத்து பார்த்தார்.

தேன்  வேண்டுமென்றால் தேன்  விற்கும் கடைக்கு சென்று தேன்  வாங்கி இருப்பேன்  , ஆப்பிள் வேண்டுமென்றால் ஆப்பிள் விற்கும் கடைக்கு போய்  வாங்கி இருப்பேன். எனக்கு வாழைப்பழம்தான் வேண்டும் அதற்காகத்தான் உங்களிடம் வந்தேன் எனவே  வாழைப்பழ சுவையில் இருக்கும்படியான வாழைப்பழம் இருந்தால் கொடுங்கள் என கேட்க  பதிலளிக்க முடியாமல் சற்று நேரம் ஸ்தம்பித்துப்போனார் அந்த கடைக்காரர். 

இதுபோன்ற கேள்வியை இதுவரை யாரும் கேட்டதில்லை என நினைக்கின்றேன், எனவேதான்  யார் இது என பார்க்கவே தன்  தலையை நிமிர்த்தி என்னைப்பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல்  கொஞ்சம் நிதானித்து, இல்லை சார் இவை அத்தனையும் மிகுந்த சுவையாக இருக்கும் என்பதை கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லி விற்பது எனது வாடிக்கை இனி அப்படி சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக சுவை மிகுந்த பழங்கள் என சொல்லி விற்க முயல்கிறேன் என்றார்.

நானும் அவரிடம், உங்களிடம் வேடிக்கைக்காகத்தான் இதுபோன்று பேசினேன் , உங்களது வியாபார யுக்தி  எனக்கு பிடித்திருக்கிறது என சொல்லி அவரது இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தி பழங்களை பெற்றுக்கொண்டு உரிய பணத்திற்கும் மேலாக கொஞ்சம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நண்பர் வீட்டுக்கு பயணமானேன்.

இந்த நிகழ்ச்சியை நினைத்துப்பார்க்கும்போது, குழந்தை வளர்ப்பிலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, மகான்களாகவோ, ஞானிகளாகவோ, இறை தூதுவர்கள் போலவோ ஆக்க முயற்சிக்காமல், மனிதனின் அடிப்படை  பண்புகளான, அன்பு, கருணை, இரக்கம், நேர்மை, வாய்மை குணங்களோடு, ஈகை, பிறருக்கு உதவும் தன்மை, அடுத்தவர் துயரத்தில் பங்குகொள்ளும் எண்ணம் கொண்டவர்களாக, மனிதாபிமானம் மிக்கவர்களாக   வளரத்தாலே அதாவது மனிதன் மனிதாகவே எப்போதும் இருக்கும் வண்ணம் வளர்ப்பதே மனிதகுலத்தின் மேம்பாட்டுக்கு சாலச்சிறந்தது என நினைக்கத்தோன்றியது.

எனவே  வாழைப்பழத்தை தேனொடும் ஆப்பிளோடும் ஒப்பிட்டு பார்ப்பதுபோல் அல்லாமல் குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு பாராமல்,  இருக்கும்   மனிதமாண்பினை எப்படி மேம்படுத்துவது என்று சொல்லி வளர்ப்பது சிறந்தது என நினைக்கின்றேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக