பின்பற்றுபவர்கள்

திங்கள், 31 ஜூலை, 2017

கவிக்கோவும் நானும்......


பொருள்பொதிந்த கவிதை!!
நண்பர்களே,

எதை எழுதினாலும் அதை கவிதை என்று நினைத்துகொள்வதும், காக்காய் உட்கார பணம்(??) பழம் விழுந்ததுபோல் எதேச்சையாக ஏற்பட்ட அங்கீகாரத்தை பயன்படுத்தி

இனி எது எழுதினாலும் அதை கவிதை என்று சொல்லி நம்மை தூக்கி கொண்டாடுவார்கள் என்ற அகங்காரத்துடன் எழுதி கொண்டு இருக்கின்றனர் பலர்.

அவர்களுக்கு மத்தியில்  பொருள் நாடா, பொருள்பொதிந்த கருத்துக்களை மரபு மற்றும் புது கவிதைகளால் படைத்து, சமூக விழிப்புணர்விற்கும் இலக்கிய சாலைகளின் உரிந்த  தோலுக்கு களிம்பு பூசி பராமரித்து பல இளைஞர்கள் அதில் தடை இன்றி பயணிக்க பழக்கியவர் , சமீபத்தில் காலமான பேராசிரியர், கவிஞர் , "கவி கோ".அப்துல் ரகுமான் அவர்கள். 

கவி ராத்திரிகள், நிலா முற்றம் , கவி அரங்கம் என பல பரிமாணங்களில் நேரடியாகவும் , எழுத்துக்கள் புத்தகங்கள் வாயிலாக மறைமுகமாகவும்  தமது கவி விருந்தை பரிமாறினவர்.

அத்தகு பேரறிவாளர், பகுத்தறிவு சிந்தனையாளர் , மனிதநேயமிக்க மா பெரும் கவிஞர்  தமது சிந்தனை சிறகுகளையும் இலக்கிய  நன் நடையையும் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழ் கலாச்சாரமும் இலக்கிய தகுதியும் சமூக அக்கறையும் நீர்த்துப்போன திரைதுறை வானிலும் , வணிக நோக்கம்கொண்ட சிகப்பு கம்பள வீதியிலும் செலுத்தாதவர்.

திரை இசை பாடல் புனைய சென்றிருக்கலாம் என்றோர்க்கு  இவர் கூறிய ஒப்புமை ஒப்பனை மிகுந்த திரைத்துறையினருக்கு எரிச்சல் மூட்டுவதாக அமைந்திருந்தது.

என்றாலும் திரை இசை பாடல்  எழுதுவது என்பது ஏறக்குறைய தமது கல்வி , இலக்கிய ஞானத்தை பணத்திற்காக அடகு வைப்பதற்கும் , பணத்திற்காக வளைந்து கொடுப்பதற்கும் சமம் என்பதாக ஒருபொருள்கொண்டாலும், திரை பாடல்களில் ஒரு சிற்பத்திற்குண்டான நேர்த்தியும் , முழுமையும் இல்லை , அந்த அளவிற்கு மட்டுமே என்னால் செய்ய முடியாது.

கற்பனை என்பதும்  கவிதை என்பதும்  கட்டாயப்படுத்தியோ வற்புறுத்தியோ பெறவேண்டியவை அல்ல.

அவை இலக்கண மரபிற்கு மட்டுமே கட்டுபட்டதாக  இருக்கவேண்டுமே தவிர "இருப்பவர்களின்-கட்டுகளின்" கட்டாயத்திற்கு கட்டப்பட்டதாக இருக்கக்கூடாது.

அதுபோதும் என்பவர்களோடு என்னை தரம் தாழ்த்திக்கொள்ளமுடியாது எனும் ஞான கர்வத்துடன் கடைசி மூச்சு உள்ளவரை வாழ்ந்து காட்டியவர்.

எத்தனை பிழைகள் இருக்கின்றனவோ அதற்கேற்ப பரிசு தொகையை குறைத்துக்கொண்டு மீதியை தாருங்கள் என திருவிளையாடல்  தருமி சொல்லும் சொல்லல்ல இவரது சொற்கள். அல்லது எத்தனை பிழையாக வேண்டுமானாலும் எழுதி தருகிறேன் , அத்தனை பிழைகளுக்கு உரிய சன்மானம் கொடுங்கள் என பேரம் பேசாத  தன்மானமுள்ள கவிஞர் அவர், 

இவரோடு எனக்கெப்படி சம்பந்தம்?

பல வருடங்களுக்கு முன் நண்பர்கள் ஒழுங்கு செய்திருந்த எனது கவிதை தொகுப்பான "நினைவலைகள்" நூல் வெளியீட்டிற்கு தலைமை தாங்க காலம் சென்ற திரு வலம்புரி ஜான் அவர்களை அழைத்துவர போவதாக பத்திரிகை நண்பர் கூறியதை, நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா இந்த சிறியவனின்  புத்தக வெளியீட்டிற்கு அவ்வளவுபெரிய ஆளுமை  வேண்டாம் என மறுத்துவிட்டேன்.

விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கத்தின் வளாகத்தின் முகப்பு வரவேற்பு வளையத்தில்  கட்டப்பட்டிருந்த பேனர்களில் கவிக்கோ புத்தக வெளியிடு என எழுத பட்டிருந்தது.

எனக்கு ஒரே ஆச்சரியம், வலம்புரி ஜானை வேண்டாம் என சொன்னதையும் மீறி இப்போது கவிக்கோவை அழைத்துவந்திருக்கின்றனரே, என ஒருபுறம் மகிழ்ந்தாலும் மறுபுறம் பெரும் அச்சமும் கூச்சமும் ஏற்பட்டது.

பிறகு என் நண்பர்களை  அழைத்து விசாரித்ததில் தெரிந்தது, என் அன்பு நண்பனும் பள்ளிதோழனும் , எங்கள் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஓவியருமான ராஜேந்திரன் என்பவர்   செய்த வேலை அது என்று.

என்மேல் இருந்த அன்பாலும் பாசத்தாலும் என் கவிதைகள்மேல் இருந்த காதலின் வீரியத்தாலும் , கோயில் பிள்ளை  அவர்களின் கவிதை நூல்  வெயீடு என்பதற்கு பதிலாக, கவிதை என்ற பெயரில் நான் எழுதுவதை கவிதை என்று ஏற்றுக்கொண்டதால் என்னை கவிஞன் என அங்கீகரித்து, கவிஞர் கோயில் பிள்ளை என எழுத முற்பட்டிருக்கின்றார்   .

அதே சமயத்தில் அவருக்கு பேனரின் அளவு இடித்ததால், கவிஞர் என்பதை "கவி" எனவும் கோயில் பிள்ளை என்பதை "கோ" எனவும் சுருக்கி "கவிக்கோ" கவிதை நூல் வெளியிடு  என எழுதியதாக சொன்னதுதான் , எனக்கும் கவிக்கோவிற்குமுள்ள தொடர்பு.

அன்று மேடையில் பேசிய சிறப்பு விருந்தினர் பலரும்கூட இதனை சுட்டிக்காட்டி  அவர்போல வரவேண்டும் என வாழ்த்திப்பேசியதும் மேடை ஓரத்தில் நின்று இருந்த  நண்பர்  ராஜேந்திரன் என்னை ஓரக்கண்ணால் பார்த்ததும் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது.  

மற்றப்படி அவர் ஏறி நிற்பது எத்தனை படி என் நிலை எப்படி என்பது எல்லோருக்கும் அத்துப்படி.

வள்ளுவனை  பார்த்ததில்லை , இளங்கோவை பார்த்ததில்லை பாரதியை பார்த்ததில்லை பாரதி தாசனை பார்த்ததில்லை.

ஆனால்  அவர்கள் வரிசையில் அமர்த்தி பார்க்கத்தகுதிவாய்ந்த கவிக்கோவை பல பத்திரிகை புகைப்படங்களிலும் ஊடகங்களிலும்  மட்டுமே  பார்த்திருக்கிறேன் என்னும் பெருமைவிட அவருக்கும் எனக்கும் வேறெந்த நேரடி பந்தமும்  தொடர்பும் இல்லை.

என்றாலும், தெரிந்தோ தெரியாமலோ அமைந்துவிட்ட என் அடையாள பெயரான "கோ"  என அடையாளப்படுத்திக்கொள்ளும்போதெல்லாம் அந்த கவி"கோ" அவர்களையும் மனதார நினைத்து போற்றுவேன்.

பொருளுக்காகவே  பொருளற்ற கவிதைகள் எழுதும் கவிஞர்கள்(??!!) மத்தியில் பொருள்பொதிந்த ஒரு கவிதையாகவே வாழ்ந்தவர் கவிக்கோ.  

எந்தத்துறை என்றாலும் அதன் வேர்வரை சென்று ஆழ கற்கும் இயல்புடையவர் என்பதால் மண்ணின் வேர் அறிய  மண்ணுக்குள் சென்றனரோ?

மண்ணடியில் புதைக்கப்பட்ட  மாபெரும் "கவிக்கோ" அவர்களின் உன்னத ஆன்மா இறைவனின் இன்னடியில் இறைவனுக்கு கவிதை பாடிக்கொண்டே இனிதே இளைப்பாறட்டும்.

வாழ்க!! கவிக்கோவின் புகழ்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ 

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.

      கோ

      நீக்கு
  2. உங்கள் தலைப்பை வாசித்ததுமே கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது. இதில் கோ ஏதோ விளையாடுகிறார் என்று..ஹஹஹ்ஹ.கோ என்ற எழுத்தை வைத்த என்று வாசித்துக் கொண்டே வந்தால் புரிந்தது. ஏன் கோ நீங்களும் கவிக்கோதான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே பார்த்தேன்!!!,வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்

      கோ

      நீக்கு
  3. பதில்கள்
    1. ரொம்ப ரொம்ப நல்லதுங் "கோ".

      வருகைக்கும் மிக்க நன்றிங்க "கோ"

      அடிக்கடி இந்தப்பக்கம் கொஞ்சம் வந்து போங்"கோ" .

      கோ

      நீக்கு