Followers

Wednesday, July 12, 2017

அலசி ஆராய்ந்த ஒளிவு!.

ஆராய்ந்து அலசிய தெளிவு !!

நண்பர்களே,

எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரித்து தெரிந்துகொள்ள   அந்த விஷயத்தை அலசி ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்  என்று சொல்லுவார்கள்.

ஆனால் சில சமயங்களில் இப்படி அலசி ஆராய்வது பெரும் மன கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் நம்மை ஆளாக்குவது உண்டு.

அலசி ஆராய்வதில் அதெப்படி மன கஷ்டமும் பெரும்  நஷ்டமும் ஏற்படும்?

சில நாட்களுக்கு முன் இப்படி அலசி ஆராய்ந்ததினால் எனக்கு ஒரு பெரும் நஷ்டம் ஏற்பட்டது என்றால் உங்களால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான்.

என்னை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு தெரியும் நான் தினமும் போருந்தில் பயணிப்பவன் என்று.

பேருந்து கட்டணம் ஒரு நாளைக்கு நம்ம ஊர்  கணக்குப்படி   நானூறு ரூபாய்.

ஒரு வாரத்திற்கு சேர்த்து முன் கூட்டியே பயண சீட்டை வாங்குவதென்றால் ஏழு நாட்களுக்கும் சேர்த்து 1750.00   ரூபாய்கள், அதுவும் பிரத்தியேகமான கடைகளில்  வாங்கும்போது மட்டுமே, பேருந்தில் வாங்கினால் கூடுதல் கட்டணம். 

இதில் திங்கள்  முதல் வெள்ளி வரைதான் பயன்படுத்துவேன் மற்ற இரண்டு நாட்கள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் பேருந்து பயன்படுத்துவதில்லை.

வழக்கமாக சனிக்கிழமை  மாலை அல்லது ஞாயிற்று கிழமை காலையில் அடுத்த திங்கள் முதல் ஞாயிறு வரையிலான பேருந்து பயண சீட்டை வாங்கி விடுவேன். 

இப்படித்தான் கடந்த ஞாயிறு அன்று காலையில் அருகிலிருக்கு ஒரு நியூஸ் ஏஜென்ட் கடைக்கு சென்று பயண சீட்டை வாங்கிக்கொண்டு அப்படியே வேறு சில கடைகளுக்கும் சென்று விட்டு இறுதியாக ஒரு தோட்ட கலை பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றேன்.

இரண்டு பெரிய பூச்செடிகளை  அதனதன் தொட்டிகளோடு வாங்கி காரில் வைத்து வீட்டிற்கு கொண்டுவந்தேன்.

வீட்டிற்கு வந்தவுடன்  வாங்கி வந்த அந்த இரண்டு பூச்செடிகளை தோட்டத்தில் நட்டு வைக்க வேண்டி போதுமான இடைவெளி விட்டு  இரண்டு குழிகள் வெட்டி அதில் தேவையான உரங்களை இட்டு, செடிகளை வைத்து பின்னர் நீர் தெளித்தேன்.

தோட்ட வேலைகளை முடித்து உபகரணங்களை சுத்தம் செய்து , எடுத்த இடமான தோட்டத்து ஷெட்டில் வைத்து பூட்டிவிட்டு, பூச்செடிகளின் அழகை சிறிது நேரம் ரசித்துவிட்டு வீட்டிற்குள் வந்து சூடு நீரில் குளித்து முடித்தேன். 

பின்னர் அன்று அணிந்திருந்த,தோட்ட வேலையால், அழுக்காகிவிட்ட ஆடைகளையும்  ஏற்கனவே கழற்றி போட்டிருந்த ஆடைகளையும் சேர்த்து துவைப்பதற்காக வாஷிங் மெஷினில் போட்டு விட்டு அடுத்த நாளுக்கான ஆடைகளை அயர்ன் செய்வதிலும் ,காலணிகளை பாலிஷ் செய்வதிலும் மும்முரமானேன்.

 அதன் பிறகு, தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள்,  சாப்பாடு , உறக்கம் , கனவுகள்  (??)என்று அந்த நாள்  கழிந்தது.

என்ன கனவு என்பதை அலசி ஆராய ஆவலாக இருப்பீர்கள் என நினைக்கின்றேன், எனினும் கனவை  சொல்வதை விடுத்து அடுத்து உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை சொல்வதே எனது தார்மீக   கடமை என்று கருதுகிறேன்.

மறக்காமல் நாளை வாருங்கள் கண்டிப்பாக சொல்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

8 comments:

 1. Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி தனப்பால், நீங்கள் தவறாமல் ஆஜர் ஆவீர்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் தானே பதிவுகள் பிறக்கின்றன.

   கோ

   Delete
 2. கனவில், கடமை வந்து குறுக்கிடுமோ என்று பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

   உங்கள் யூகம் சரிதானா? பொறுத்திருந்து அலசி ஆராய்ந்து பார்ப்போமே.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 3. ஒரு நாளைக்கு 400 என்றால் திங்கள் டு வெள்ளி ஐந்து நாளுக்கு 2000 .. வார சீட்டு.. 1750 ... வார இறுதியில் உபயோக படுத்தாவிட்டாலும் ௨௫௦ மிச்சம்.

  சரி.. இதில் எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாமா? மற்றும் இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமா?

  அலசி ஆராய்ட்னது சொல்லுங்கள் .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பா.

   ஆம், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட வழி தடங்களில் புதிய நாளின் துவக்க மணி யான 12.01 முதல் அந்த நாள் இரவு 12.00 வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

   இதில் 18 வயதுக்கு மேலுள்ள பயணியை குறித்த எந்த அடையாளமும் (புகைப்படம் போன்று) இல்லாததால் யார் வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்., சில வேளைகளில் பயன்படுத்தாத தருணங்களில் நண்பர்கள் , குடும்பத்து மற்ற மக்களும் பயன்படுத்திக்கொள்வதுண்டு.

   சிறுவர்கள், மாணவர்களுக்கு அடையாள எண்கள், புகைப்படம் ஒட்டிய அடையாளம் இருப்பதால் அவர்களைத்தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

   விவரங்களை அலசி ஆராய நினைத்த உங்களுக்கு மிக்க நன்றிகள் மீண்டும்.

   கோ

   Delete
 4. வருகிறோம்! உங்கள் கனவுகளை நீங்கள் சொல்லும் போது அதை அலசி ஆராய!! ஓ அதற்கு முன் உங்கள் அனுபவ விவரணங்களோ! சரி அதையும் அலசிக் காயப்போட்டால் போச்சு!!!

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   அலசலில் ஆர்வமும் ஆராய்வதில் மிகுந்த அனுபவமும் கொண்ட உங்களின் அலசல் இந்த பதிவின் பக்கம் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

   கோ

   Delete