பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 ஜூலை, 2017

உன்னை காணாமல்....

 விழி பிதுங்கி.....

நண்பர்களே,

வழக்கமாக அலுவலக நாட்களில் காலை உணவினை வீட்டிலேயே முடித்துவிட்டு மத்திய உணவிற்கான கட்டுச்சோற்றை(புளியோதரை, தயிர் சாதம், வழுதனங்காய் (!!??))

போன்று இல்லாமல், ரொட்டித்துண்டுகளுக்கிடையில் திணிக்கப்பட்ட பரப்பன அக்கிரகார..... மன்னிக்கவும் பறப்பன  ஊர்வன வற்றை தவிர்த்து,  வேகவைத்த  காய்கறிகளை கொண்டு செல்வது வழக்கம்.

ஆனால் இன்று, காலை உணவினை  சாப்பிட்டுவிட்டு வெறுங்கையோடு அலுவலகம் வந்தேன்.

மத்திய உணவிற்கு கடையில்  ஏதேனும் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.

சரியாக பதினோரு மணிக்கு என் பெயரில் ஒரு காசோலை வந்திருந்தது , என் பெயரில் வந்திருந்தாலும் அது அலுவலகத்திற்கு சொந்தமானது.

சரி, வங்கிக்கு சென்று காசோலையை மாற்றிக்கொண்டு வரும்போது கடையில் இருந்து மத்திய உணவு ஏதேனும் வாங்கிக்கொண்டு அலுவலகம் திரும்பலாம் என்று எண்ணினேன்.

அதன்படி சுமார் பன்னிரண்டு மணிக்கு காசோலையை எடுத்துக்கொண்டு அதை என் கோட்டு  பாக்கட்டில் வைத்து கொண்டு லிப்டை விட்டு வெளியில் வந்தேன்.

அப்போதுதான் கவனித்தேன் வெளியில் மழை பெய்து கொண்டிருப்பதை.

மீண்டு லிப்ட்டில் ஏறி ஆறாம் தளத்தில் உள்ள அலுவலகம் வந்து அங்கிருந்த குடையை எடுத்துக்கொண்டு மீண்டும் லிப்ட் மூலம் கீழே வந்து சுமார் 10 நிமிட நடை தூரத்தில் இருக்கும் வங்கி  நோக்கி வாக்கிங் சென்றேன்.

பொதுவாக இங்கே பெரும்பான்மையான மக்கள் மத்திய உணவு இடைவேளை நேரமான ஒன்றிலிருந்து இரண்டுக்கு இடைப்பட்ட நேரத்தில் வங்கிக்கு செல்ல மாட்டார்கள், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால்.

அதனால்தான் நானும் பன்னிரண்டு மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டேன்.

இருந்தாலும் நம்மைப்போன்ற அறிவாளிகள் பலரும் இங்கே இருப்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இல்லை.

வரிசையில் நின்று என் முறை வந்ததும் என்  பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையினை சரிபார்த்து கையொப்பத்தையும் பெற்றுக்கொண்டு காசை எண்ணி கொடுத்தனர்.

எப்போது வங்கிக்கு சென்றாலும் என்னுடைய தோளில் மாட்டிக்கொள்ளும் தோல் பையை கொண்டு செல்வது வழக்கம் , இன்று மத்திய உணவு கொண்டுவராததால் பையையும் கொண்டுவரவில்லை.

வங்கியில் காசு போட்டுக்கொடுத்த பேப்பர் கவரை பக்குவமாக யாரும் பார்க்காதபடி மடித்து கால் சட்டை பையில் வைத்து வங்கி விட்டு வெளியில் வந்தேன்.

வரும் வழியெல்லாம் அவ்வப்போது பாக்கட்டை தொட்டுப்பார்த்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டே வந்தேன்.

இப்போது மணி சுமார் ஒன்றை  நெருங்கிக்கொண்டிருந்ததால் மத்திய உணவருந்த எங்கு செல்லலாம் என்றெண்ணிக்கொண்டு நடக்கையில்  வழியில் ஒரு புதிய  உணவகத்தை பார்த்தேன்.

முகப்பில் எழுதி வைக்கப்பட்டிருந்த உணவு தயாரிப்புகளின் பெயர்களும் அதன் வண்ண புகைப்படங்களும் அதில் வழியும் கிரேவியும்  அதனதன் விலை பட்டியலும் என்னை வாயில் ஜொள்ளு வழிய,  உள்ளே ஜொள் - சாரி செல் என்று பணித்தது. 

கூட்டம் அலைமோதிய அந்த உணவகத்தில் கொஞ்ச நேரம் காத்திருந்து தேவையான  உணவினை ஆர்டர் செய்து சுட சுட  கொண்டுவரப்பட்ட அத்தனையையும் ஒரு பருக்கை(!!) விடாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே கண் மயங்கியது தூக்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.

எனினும் சமாளித்து உணவினை முடித்துக்கொண்டு பணத்தை செலுத்திவிட்டு வெளியில் நடந்தேன் மறக்காமல் எடுத்துவந்த குடையுடன் மழையில்.

தூரம் மாறவில்லை என்றாலும் இப்போது அலுவலகம் திரும்ப சுமார் இருபது நிமிடங்கள் ஆயின,உண்ட மயக்கத்தால் நடை தளர்ந்து போனதால்.

லிப்டுக்காக காத்திருந்த சமயத்தில்தான் தொட்டுப்பார்த்தும் தடவி பார்த்தும் உணர்ந்தேன்  " அதை " எங்கேயோ தொலைத்துவிட்டோம் என்று.

நண்பர்களே,

பதட்டத்தில் மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நினைவுபடுத்தி தொடர்ந்து சொல்கிறேன். அதுவரை ப்ளீஸ் தொலைந்தது கிடைக்கணும் என்று அவரவர் குலதெய்வங்களை வேண்டிக்கொண்டே இருங்கள் ... நாளை தொடர்கிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக