Followers

Wednesday, March 29, 2017

கக்கா! கோலா!!.

குடி! - மூக்கை பிடி!!
நண்பர்களே,

மது அருந்துபவர்கள் பெரும்பாலும் குடிக்கும்போது தங்கள் மூக்கை பிடித்துக்கொண்டு குடிக்கின்றனர், ஏனென்றால் அதன் நாற்றம் அத்தனை கொடுமையாக இருக்கும் போல தெரிகிறது.

ஆனால் சாதாரண குளிர்பானங்களை அதுவும் வெளி  நாட்டு தயாரிப்பு குளிர்பானங்களை குடிக்கும்போதும் இப்படித்தான் மூக்கை பிடித்துக்கொண்டு குடிக்கும்படியான  கால சூழல் இனி உருவாகுமோ என்ற அச்சம் இன்று காலை செய்தித்தாளை வாசிக்கும்போது ஏற்பட்டது.

'Human waste' in cans forces shutdown at Coca-Cola plant in Northern Ireland

வெளி நாட்டு குளிர்பானங்களுள் மிகவும் பிரசித்தம் பெற்றதும் பெரிய அளவில் விமர்சனங்களுக்குள்ளானதுமான பானம் கொக்கோகோலா.

இந்த பானத்தின்  பெயரை சரியாக சொல்வதிலேயே பெரிய போராட்டம்.

சிலர் இதனை கொக்கோ கோலா என்பார்கள், சிலரோ கொக்க கோலா என்றும் வேறு சிலர் கொக்கா கோலா என்றும் கூறுவதுண்டு.

சரியாக சொல்லவேண்டுமானால் இதனை கோக கோலா  என்றுதான் சொல்ல வேண்டும்.

எதற்கு சிரமபடவேண்டும் என்றெண்ணி பலரும் இதனை கோக் என்றே சொல்லிவிடுகின்றனர்.

இன்றைய பதிவு இந்த பானத்தின் பெயரை  எப்படி உச்சரிப்பது என்பதற்காக மட்டுமல்ல.

ஏற்கனவே மனித வாழ்விற்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் பல வேதியியல் நச்சுப்பொருட்கள் இந்த வகை பானங்களில் கலக்கப்பட்டிருப்பதாகவும் அவை மனித வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டு பல நாடுகளில் -  நகரங்களில் இவற்றை பருகுவதும் விற்பனை செய்வதையும் தடை செய்திருப்பதை  நாம் அறிவோம்.

அவ்வகையில் சமீபத்தில் தமிழகத்தில்  மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து  நடத்திய  அறப்போராட்டங்களின் விளைவாக, விழிப்புணர்வு ஏற்பட்டு  தமிழகத்தின் பெருவாரியான நகரங்களில் இந்தவகை பானங்கள் விற்பனை வெகுவாக குறைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

இந்த கோக கோலாவில் ஏற்கனவே இருக்கும் நச்சுப்பொருட்களே போதும் என்றிருந்த நிலையில்  சமீபத்தில்  இந்த பானங்கள் அடைக்கப்பட்ட கேன்களில் நேரடியான மனித கழிவும் கலந்திருந்ததை அறிந்து ஒட்டுமொத்த உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது.

இதை வேண்டுமென்றே அந்த தயாரிப்பு நிறுவனம் சேர்த்திருக்க வாய்ப்பில்லை என்ற அடிப்படையில் தற்காலிகமாக வட அயர்லாந்து  ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், நாடு விட்டு நாடு வருகின்ற பெரிய பெரிய லாரிகளில் திருட்டுத்தனமாக ஏறி வேறு நாட்டுக்கு புகலிடம் தேடி  வருகின்ற அகதிகள் அல்லது  வேறு சிலர் தங்களின் அவசர உபாதைகளின்போது, பானங்கள் நிரப்புவதற்காக மூடிகள் போடப்படாமல்  ஜெர்மனி  நாட்டில் தயாரிக்கப்பட்ட காலி  கேன்களை பயன்படுத்திஇருப்பதே இதற்கு காரணம் என்று தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.  

A Coca-Cola Christmas lorry at Tower Bridge, London.

அதே சமயத்தில் இது போன்று மீண்டும் நிகழாதபடி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும், ஏற்கனவே கடைகளில் உள்ள பானங்கள் தர பரிசோதனை செய்யப்பட்டவை என்றும் சம்பந்த பட்ட நிறுவனம் உறுதி அளித்துள்ளனர்.

இந்த பானத்தை மூக்கு முட்ட குடிப்பவர்கள்  இனி தங்கள் மூக்கை  பிடித்துக்கொண்டுதான் குடிப்பார்களோ?

இந்த நச்சு பானம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நாட்டில் இருந்து மட்டுமல்ல இந்தியாவில் இருந்தே முற்றிலுமாக ஒதுக்கப்படும் என்று நம்புகின்றேன்.

எது எப்படியோ, இனியாவது இந்த பானத்தின் பெயரை சரியாக உச்சரிக்க பழகுவோம் "க(கொ)க்கா கோலா" என்று.

பொறுப்பு துறப்பு: 

இந்த பதிவை படித்து முடித்தவுடன் மறந்து விடுங்கள் இல்லையென்றால், வாழ்க்கையில் நீங்கள் எப்போதாகிலும் இந்த பானத்தை அருந்த நேரிடும்போது இந்த பதிவு உங்கள் நினைவிற்கு வருமேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல.!!

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

2 comments:

 1. நல்ல பதிவு கோ! நாங்கள் இந்த பானங்களை அருந்துவதே இல்லை! என்றுமே! எனவே தப்பித்தோம்....வெளியிடங்களில் பழச்சாறு அருந்துவது கூட ரொம்பரொம்ப அபூர்வம். அதனை வீட்டிலேயே அருந்தலாமே சுத்தமாக, அதுவும் பர்சுக்கும் ஆதரவாக... என்று வெளியில் அருந்துவதில்லை...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தங்கள் அனுபவ பகிர்விற்கும் மிக்க நன்றிகள் நண்பர்களே.

   கோ

   Delete