Followers

Saturday, March 11, 2017

கறைபடிந்த காசு!.

காலமெல்லாம் பேசு !!

நண்பர்களே,

இதை  நேற்றைய  பதிவின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம்.

பதினேழாம் நூற்றாண்டில் ராயல் ஆப்ரிக்கன் கம்பெனியின் துணை ஆளுநராக பதவி வகித்தவரும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினருமான எட்வர்ட் கோல்ஸ்டன் (1636-1721) என்பவர்  வாழ்ந்திருக்கிறார்.

அவர் தமது செல்வாக்கை பயன்படுத்தி , ஆப்ரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட கறுப்பின மக்களை, இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற செல்வந்தர்களுக்கும் கட்டுமான பணிசெய்யும் நிறுவனங்களுக்கும் "ஏலம்" மூலம்  விற்று பெரும் பணக்காரராக வலம் வந்திருக்கின்றார்.

அப்படி அவர் இந்த  தொழில் மூலம் சம்பாதித்த செல்வத்தில் கணிசமான தொகையை அவர் வாழ்ந்துவந்த நகரத்தின் மேம்பாட்டுக்காக நன்கொடையாக அளித்திருக்கிறார்.

அவற்றுள், பல பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், இசை அரங்கங்கள், கட்டிடங்கள் போன்றவை அடங்கும்.

அந்த தயாள(!!) குணத்தை போற்றும் வகையில் நன்றிக்கடனாக அவரின் பெயரில் தெருக்கள், அவர் அளித்த பல அசையா சொத்துக்களுக்கு அவர் பெயரையே வைத்து கொண்டாடி இருக்கின்றனர், இன்றுவரை  அவை அத்தனையும் அவர்பெயரிலேயேதான் இருக்கின்றன.

இன்னும் கேட்டால் அவர் பிறந்த நூற்றாண்டு தினத்தை தேசிய விடுமுறை நாளாகக்கூட அறிவித்து அனுசரித்திருக்கின்றனர்.

1896 ஆம் ஆண்டு அவர் இறந்தபிறகு (சுமார் 175 ஆண்டுகளுக்குபிறகு) அவருக்கு நகரத்தின் மையப்பகுதியில் பிரமாண்டமான  வெண்கல சிலை ஒன்றை உயரமான மேடையில் நிறுவி இருக்கின்றது அந்த நகரம்.

Image result for edward coultson life


கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் , சமூக விழிப்புணர்வும் சமூக அக்கறையும் , தன்மான உணர்வும் மிக்க நகரத்தின் பெரும்பான்மையான மக்கள்,  நாயை விட கேவலமான முறையில் சக மனிதனை கீழ்த்தரமாக நடத்தி அவனை ஒரு சாதாரண பொருளை போல  கூவி கூவி ஏலம் போட்டு விற்று அதனால் பெரும் பொருள் ஈட்டி அதில்  ஒரு பகுதியை தானமாக கொடுத்த  அந்த "மனித குல கேவலத்திற்கு" நகரின் மைய பகுதியில் சிலையும் அந்த அவமான சின்னமான  மனிதனின் பெயரில் கட்டிடங்களும் தெருக்களும் இருப்பதை வன்மையாக கண்டித்து அந்த சிலையையும் அந்த மனிதனின் பெயரையும் அனைத்து சாலைகள் கட்டிடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற போராட்டத்தை முன் நிறுத்தினர்.

இந்த போராட்டத்தின் வீரியத்தை தெரிந்துகொள்ளும் பொருட்டு நாட்டின் பிரபல நாளிதழ்  1100 பேர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.

சுமார் 56% பேர்கள் நீக்கவேண்டும் என்று குரல்கொடுத்த அதே சமயத்தில் 44% பேர்கள் நீக்கவேண்டாம் என குரல் எழுப்பினர்.

சாலையில் சென்றுகொண்டிருந்த என்னிடமும் அந்த பத்திரிகை நிருபர் கருத்து கேட்டார். 

என்னுடைய பார்வை: "வரலாற்றை மறைக்க கூடாது, பெயர்கள் அப்படியே இருக்கட்டும் சிலையும்  அப்படியே இருக்கட்டும் பின் வரும் சந்ததியினருக்கு இப்படி ஒரு மனிதர் இருந்தார், இத்தகைய கேவலமான செயலில் ஈடுபட்டிருந்தார்,அடிமைகளை விற்று பொருள்சேர்த்தார், இந்த உலகில் அடிமை வியாபாரம் இருந்தது போன்ற விவரங்கள்  வரலாற்று குறிப்புகளில் இருப்பதோடு இதுபோன்ற காட்சிப்பொருளாகவும் இருக்கவேண்டும் , இதை ஒரு உன்னதமான நினைவாக கொண்டாடாமல் ஒரு அவமான சின்னமாக அடையாளப்படுத்தவேண்டும் என்பதே".

(எந்தன் புகைப்படமோடு(??) கூடிய இந்த கருத்து அடுத்தநாள் பத்திரிகையில் வெளிவந்தது என்பது உபரி தகவல்)

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் நடந்த இதுபோன்ற சம்பவங்களின்போது    மக்கள் அவ்வளவாக பெரிதாக நினைத்திருக்க மாட்டார்கள், தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதில் பல நிர்பந்தங்கள் -  நெருக்கடிகள்கூட இருந்திருக்கலாம்., ஆனால்  இப்போது நிலைமை அப்படி இல்லை.

குற்றவாளி, தண்டனைக்குரியவர்,சமூக அவலம், மனிதகுல அவமானம் என்று சந்தேகமற -  தீர்க்காமாக முத்திரை குத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும்   (நிகழ்கால அரசியல், நாட்டு நடப்புகளில்)  தீய வழியில் பணம் சம்பாதித்து அதை நல்ல காரியங்களுக்காக கொடுப்பாரேயானால்  அதை முற்றிலுமாக தவிர்ப்பது இதுபோன்ற முன் உதாரணங்களுக்கு  இடம் கொடுக்காமல் முளையிலேயே முற்றாக , சுவடின்றி அழிப்பதற்கு துணைபுரியும்.

அதை விடுத்து அவர்களுக்கு மணி மண்டபங்கள் அமைப்பது, அவர்களது கல்லறைகளை வழிபாட்டு தலங்களாக மாற்றுவது, அவர்கள் வாழ்ந்த வீடுகளை நினைவு சின்னங்களாக அமைப்பதும், அவர்களை  , நோபல் பரிசிற்கு பரிந்துரைப்பதும் கேலிகூத்துமட்டுமல்லாது, தன்மானத்திற்கும் மனித  நாகரீக பரிணாமத்திற்கு மிகப்பெரிய சறுக்கலாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படி பாவ கறை  படிந்த பணத்தில் நன்மை(போல்) செய்பவர்களை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதால் இனிவரும் மக்களுள் சிலரும் தீய வழியில் பணம் சம்பாதிக்கவும் அதில் ஒரு துண்டை நாய்க்கு போடுவதுபோல மக்களுக்கு கொடுத்துவிட்டால் நம்மையும்  தலையில் தூக்கி வைத்துகொண்டாடுவார்கள்,  காலமெல்லாம் சிலை வைத்து வழிபடுவார்கள், நமக்கும் நினைவு மண்டபங்களை எழுப்புவார்கள்  என்ற  எண்ணத்துடன் செயல்பட வழி வகுக்கும்.

அதையும் மீறி இதுபோன்றோருக்கு எழுப்பப்படும் நினைவு சின்னங்கள் இன்றில்லை என்றாலும்  பிற்காலத்தில் என்றேனும்   ஒருநாள் ,  எட்வர்ட் கோல்ஸ்டனுக்கு ஏற்பட்டதுபோன்றே  நகைப்பிற்கும் கேலி கிண்டலுக்கும் ஏளனத்திற்கும்  அவமானத்திற்கு ஆளாகும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

அதே சமயத்தில் ஓடி ஓடி உழைத்து அதை ஊருக்கெல்லாம் கொடுப்பவனை இந்த உலகம் உள்ளவரை மட்டுமல்லாது வானுலகம் உள்ளவரையிலும் போற்றித்துதிக்கும்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படு(ம்)வான்"

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


10 comments:

 1. ஓடி ஓடி உழைத்து அதை ஊருக்கெல்லாம் கொடுத்தவனுக்கு முன் ஒரு அசிங்க
  சின்னம் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்...

  சுற்றி வளைத்து சொல்வதில் நீங்கள் ஒரு கில்லி...!

  ReplyDelete
  Replies
  1. தனப்பால்,

   இனி இருக்கக்கூடாது என்பதைத்தான் மக்கள் விரும்பினார்கள் பதிவில் குறிப்பிட்டிருந்த ஊரில்..

   கில்லி பட்டம் வழங்கியதற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.

   கோ

   Delete
 3. அருமை நல்ல மாற்று சிந்தனை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.

   கோ

   Delete
 4. நீங்க செத்துப்போன தமிழ்நாட்டு ஆத்தாவை சொல்லவில்லையே நண்பரே

  ReplyDelete
  Replies
  1. யார் ஆத்தா?... யார்செத்துப்போனது?..... ஒண்ணுமே புரியலையே நண்பரே.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 5. நல்ல பதிவு! நல்ல சிந்தனை. உங்கள் பார்வையே எனது பார்வையும். வாசித்து வரும் போது நம்மூரி அரசியல்வாதிகளையும் நினைவுபடுத்தியது.

  கீதா

  ReplyDelete
  Replies

  1. நம்ம ஊரிலும் இப்படி நடக்கிறதா.... சொல்லவே இல்லை....யே.....

   வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.

   கோ.

   Delete