பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கல்யாண சாப்பாடு போட "வா"

வழு(ழ) க்கு சொற்கள் 
நண்பர்களே,

நமது தமிழகத்தில் உலா வந்த  பல வழக்கு சொற்கள் - (பழ)மொழிகளுள், "வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்" என்ற சொற்றொடரை முன்பெல்லாம் கேட்டிருப்போம்.


ஆனால் இந்த வாக்குகளை இப்போது பெரும்பாலும் கேட்க முடிவதில்லை.

அதற்கு என்ன காரணம் என சிந்தித்து பார்க்கையில் திருமணத்திற்கு   கொஞ்சம் மட்டும் சிரமம் பட்டு அக்கம் பக்கத்தில் , நண்பர்களிடத்தில் , உறவினர்களிடத்தில் சொல்லி வரனையோ பெண்ணையோ பார்க்கவேண்டியுள்ளது, மற்றபடி பந்த கால் நடுவதிலிருந்து  திருமண மண்டபம் பார்ப்பது முதல் மணமக்களை போட்டோ எடுத்து அவற்றை ஆல்பமாக தயாரித்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து கொண்டுவந்து வீட்டிலேயே கொடுத்துவிட்டு போகுமளவிற்கு கல்யாண ஏஜெண்டுகளும், ஒப்பந்த காரர்களும் கூப்பிட்ட நேரத்திற்கும் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளும் செய்துகொடுக்க இப்போது ஆங்கங்கே இருப்பதால், வீட்டில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ,கல்யாணம் செய்து வைப்பதன் மூலம் ஏற்படும் எந்த அலைச்சலும் கஷ்டமும் இப்போது கொஞ்சமும் இல்லாமல் போய்விட்டதே காரணம் என்பது புரிகிறது.

அதே சமயத்தில் இந்த "கல்யாணம் பண்ணிப்பார்" என்னும் சொற்றொடரின் அர்த்தம் இப்போது வேறு விதமாக பார்க்கபடுகிறது.

அது எப்படி என்றால், ஒரு குறிப்பிட்ட வயது வரை, எந்த பொறுப்பும் கவலையும் இல்லாமல், பள்ளி, கல்லூரி, நண்பர்கள், பொழுதுபோக்கு, என தன்னிச்சையாக  சுற்றி திரிந்துகொண்டு ,  தன் துணிகளை தானே இஸ்த்திரிகூட போட தெரியாமல்,சாதம் , குழம்பு எப்படி வருகிறது,சேமிப்பு என்றால் என்ன, சிக்கனம் என்றால் என்ன என்றுகூட தெரிந்து கொள்ளாமல் இருந்த ஒரு ஆணிடமோ அல்லது, திருமண வயதை நெருங்கியபின்னும் ஒரு பொறுப்பையும் சரிவர கற்று கொள்ளாமல் , வீட்டு வேலைகள், சமையல் போன்ற எந்த ஒரு கூடுதல் திறமையையும் வளர்த்து கொள்ளாமல், எனக்கு சமைக்க தெரியாது, துணி துவைக்க தெரியாது, காபி கூட போடத்தெரியாது எல்லாமே எங்க அம்மாதான் செய்வார்கள் என்று சொல்லுவதை பெருமையாக கருதும் பெண்ணிடமோ , நீங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி பாருங்கள் அப்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் தெரியும் ;

மேலும் பெண் பார்க்க வந்தபோது சாடை மாடையாக பார்த்த அந்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் பின் தெரியாத பையனோடு அல்லது பெண்ணோடு அவர்களது குடும்பத்தோடு காலமெலாம் "கல்லானாலும் கணவன் புல்லானாலும் பொண்டாட்டி" என்று வாழும் சூழ்நிலைகளில் எப்படி தங்களை தகவமைத்துகொள்ளபோகின்றார்கள் என்று சொல்வதுபோல் அர்த்தபடுகிறது என நான் கருதுகிறேன்.

அடுத்து "வீட்டை கட்டிப்பார்" எனும் கூற்றில், பழைய காலத்தில் ஒரு வீட்டை கட்டுவதிலிருந்த சிரமத்தையும் உழைப்பையும் , காலத்தையும் காத்திருத்தலையும், பண தேவைகளையும் ,தேவையான கட்டுமான பொருட்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடத்திலிருந்து கொண்டுவந்து, கொத்தனார், சித்தாள், மேஸ்த்திரி, தச்சுவேலை செய்பவர் போன்றவர்களை தேர்ந்தெடுத்து ,ஒருங்கிணைக்க வேண்டும்.

மேலும் மழை வெயில், குளிர் போன்ற தட்ப வெப்ப நிலைகளை மனதில்கொண்டு கடைக்கால்  தோண்டுவதில் இருந்து மேற் கூரை வேய்ந்து , சுவர்களுக்கு வெள்ளை அடித்து, கதவு சன்னல்களுக்கு வர்ணம் அடித்து, நல்ல நாள் பார்த்து, பசுவை வீட்டிற்குள் அழைத்துவந்து, பால் காய்ச்சி காபி போட்டு சொந்த பந்தங்களை அழைத்து விருந்து உபசாரங்களை செய்து முடித்து, நிம்மதி பெரு மூச்சுடன் கட்டிலில் சாயும் அந்த புது மனை புகும் சுப தினம் வருவதற்குள் எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும்?

ஆனால் இப்போது அப்படியா?

அடுக்கு மாடி குடி இருப்புகள், கட்டபோவதாக ஒரு ப்ரோமோடார் விளம்பர படுத்திய உடனே, அவரிடம் சென்று அட்வான்ஸ் தொகையை செலுத்தி விட்டு தமக்கு தேவையான வசதிகளின் பட்டியலை கொடுத்துவிட்டு வேறு எந்த அலைச்சலும், சிரமும் படாமல், பகுதி பகுதியாக பாக்கி தொகைகளை செலுத்தி கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட நாளில் நமது புதியவீட்டின் சாவி நம் கைக்கு  வந்து சேரும் விதமாக இப்போது வீடு கட்டும் வேலைகள் எளிதாக நடைபெறுவதால், வீட்டை கட்டிப்பார் என பெரியவர்கள் அதில் இருந்த சிரமத்தின் வீரியத்தை உணர்த்த சொல்லிய நோக்கம் எடுபடாமல் போய்விட்டது.

எனினும் இந்த கூற்று இப்போது வேறு விதமாக பார்க்கபடுவதாக எனக்கு தோன்றுகின்றது.

அதாவது, வீட்டை, நீ சிரமமின்றி உடல் உழைப்பின்றி, அலைச்சல் இன்றி,பண பிரச்சனையும் கூட இல்லாமல், வங்கி கடன் திட்டத்தின் கீழ் மாத  சுலப தவணை மூலம் கட்டிகொண்டாய், நல்லதுதான். ஆனால் அந்த வீட்டை காலத்திற்கும் பராமரிக்க  வேண்டுமே அந்த சிரமம் வீட்டை நேரடியாக கட்டுவதை பார்க்கிலும் அதிகமாயிற்றே.

காலா காலத்திற்கு, மராமத்து பணிகள் செய்ய வேண்டும்,குறிப்பிட்ட இடைவெளில் புதிதாக வெள்ளை அடிக்கவேண்டும், சுவர், கூரை கழிவு பாதைகளை செப்பனிடவேண்டும், மின் சாதனங்கள் மற்றும் ஒயரிங்க் விஷயங்களை அவ்வபோது புதுபித்துகொண்டிருக்கவேண்டும்.

ஒருவேளை சில பல காரணங்களுக்காக வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் குடித்தனகாரர்களின் தேவைகளை பூர்த்தி  செய்து தரவேண்டும் , அவர்களோடான உறவை நல்லபடி வைத்து கொள்ளவேண்டும், வாடகையை நல்லபடியாக வசூலிக்க வேண்டும்.

ஈபி பில், தண்ணீர் பில், வீட்டு வரி,போன்றவற்றை சரியாக தவறாமல் கட்டவேண்டும் போன்ற எத்தனையோ நிர்பந்தங்கள் இருப்பதால்தான் வீட்டை கட்டி "பார்" என்னும் கோணத்தில் இந்த கூற்றை பார்க்கவேண்டுமோ?

ஒருவேளை இப்படி இருக்குமோ?

அதாவது, கணவன் மனைவி குழந்தைகள் என்று கட்டப்பட்ட குடும்பம் எனும் வீட்டில், ஒருவருக்கொருவர் அன்பையும் , பாசத்தையும், ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பவர்களாகவும், இன்ப துன்பங்களை பகிர்ந்தும் ஆறுதலாகவும் , நம் குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகளை நான்கு சுவர்களுக்குள்ளேயே தீர்த்துக்கொண்டு வறுமையிலும் ஏழ்மையிலும் மானமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ கற்றுகொள்ளவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக வீட்டை- குடும்பத்தை  கட்டிப்பார் என்றனரோ?

ஒருவேளை நம் முன்னோர்களும் இந்த அர்த்தத்தில் தான் சொல்லி இருப்பார்களோ?

எது எப்படியோ கல்யாணம் பண்றதுக்கு முன்னாலேயும் வீட்ட கட்றதுக்கு முன்னாலேயும் நல்லா யோசிச்சி, மனச திடபடுத்திகொண்டு இந்த இரண்டு காரியத்திலும் ஈடுபடனும் இனிமே செய்ய போறவங்க.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே,

    இன்பத் துன்பங்களைப் பகிர்ந்துக்கொண்டு வாழும் முறைமை,,,

    அருமை அருமை நல்ல விளக்கம், வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைப் பன்னிப்பார்,,,

    நான் இதுவரைப் புரிந்துக்கொண்ட விளக்கம் வேறு,,, தாங்கள் சொன்ன விளக்கம் பொருத்தமாக இருக்கு,,,
    இனிமே செய்யப் போறவங்க,, என்ன விசேஷம் அரசே,

    வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரிய அவர்களுக்கு,

      வருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் , விளக்கம் புதியது என கூறியதற்கும் மிக்க நன்றியும் வணக்கங்களும்.

      கோ

      நீக்கு
  2. நல்ல பதிவு கோ. குடும்பத்தைக் கட்டிப் பார் என்பதற்காகவும் சொல்லப்பட்டிருக்கலாம்தான். இரண்டுமே மிகவும் முக்கியமாயிற்றே...வீடும் சரி கல்யாணமும் சரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      ஆமாம்,

      நீங்கள் சொல்வதுபோல் வீடும் குடும்பமும் முக்கியம்தான்.

      கோ

      நீக்கு
  3. நல்ல விளக்கம் சார். காலம் அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கு.
    இப்போது எல்லா விஷயத்திலும் மனச திடபடுத்திகொண்டு ஓடவேண்டி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      விளக்கத்தை விளங்கிகொண்டதுகுரித்து மகிழ்ச்சி.

      அசுர வேகம் வேண்டாம் கொஞ்சம் நிதானமாக ஓடுங்கள்.

      கோ

      நீக்கு