Followers

Thursday, February 4, 2016

தீவிர(வி)வாத சிறுவன் - வயது பத்து!!

"அழுத்தம் திருத்தம்"

நண்பர்களே,

இன்றைய உலக சூழ்நிலையில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் திகிலுடனும் அச்சத்துடனும் தான் இருக்க முடிகிறது.


எங்கு பார்த்தாலும் , கொலை கொள்ளை, குண்டுவெடிப்பு, ஆள் கடத்தல்,வன்முறை, கலவரம், இன படுகொலைகள், ஜாதி மத மோதல்கள் தீவிரவாதம் என முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இவை அத்தனையும் தலை விரித்தாடுகின்றன என்றால் அது மிகை அல்ல.

பழைய காலம்போல் அல்லாமல் தகவல் ஒலிபரப்பு ஊடகங்களின் பெருக்கமும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வேகமும் நமக்கு உலகின் எந்த மூலையில் எந்த நேரத்தில் எது நடந்தாலும் அடுத்த நிமிடமே உலக மக்கள் அனைவருக்கும் அந்த செய்திகள் வந்தடைவதால், இதுபோன்ற வன்முறைகள் , கொடுஞ்செயல்கள் நாளுக்கு நாள் பெருகிவருவதை நம்மால் அறிந்துகொள்ளமுடிகிறது.

அதன் காரணமாகவே நமக்கு ஏற்படும் அச்சமும் பீதியும் அதிகரிக்க தொடங்கிவிட்டன.

யார் நல்லவர், யார் கெட்ட்டவர் என்று பகுத்தறியத்தக்க நிலை இப்போது கூடாததாகிவிட்டதாலும் , மெத்த படித்தவர்களே இப்போது நுணுக்கமான வகையில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில்  தெரியாதவர்கள் மட்டுமின்றி தெரிந்தவர்களைகூட சந்தேகிக்கும்படி நிலைமை மோசமாகி போய்விட்டது.

கூடவே பலகாலம் ஒன்றாக வாழ்ந்த தன் பாசத்திற்குரிய கணவன் தீவிரவாத கொடுஞ்செயலின் சூத்திரதாரியாக இருந்திருகின்றான் என்ற தகவல்கேட்டு அதிர்ந்துபோன மனைவியும், நேற்றுவரை தங்கள்  அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுபட்டிருந்த மகன் நடை பெற்ற பல சமூக குற்றங்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்புடையவனாக இருந்திருக்கின்றான் என்று தகவல் அறிந்த மனமுடைந்த பெற்றோரும்அவர்களின் கண்ணீர் கதைகளையும் நாம் அவ்வப்போது கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

இதில் நன்றாக படித்துகொண்டிருக்கும் மாணவ மாணவியரையும், கலை, மற்றும் மருத்துவ விஞ்ஞான கணித பட்டங்கள் பெற்றோரையும்கூட இந்த சில அமைப்புகள் தங்களது கோரிக்கைகளையும் கொள்கைகளையும் லட்ச்சியங்களையும் அடையும்பொருட்டு அதற்கான செயல்களில் இவர்களை ஈடுபடுத்துவதற்காக அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் தரப்பு ஞாயங்களை பக்குவமாக எடுத்துரைத்து தங்கள் வசம் அவர்களது மொத்த கவனத்தையும் திருப்பி கொள்கின்றனர்.

அப்படி அவர்களது கொள்கையில் பிடிப்புகொண்ட இந்த இளைஞர்கள் தங்களது படிப்பு, வேலை, அந்தஸ்த்து, குடும்பம் போன்ற எந்த விஷயத்தையும் துச்சமாக மதித்து வன்கொடுஞ்செயலுக்கு துணைபோவதோடு  தங்களையும் அழித்துகொள்கின்றனர்.

இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், வாழ்க்கை என்றால் என்ன , உலகம் என்றால் என்ன, மனித உயிர் என்றால் என்ன அவற்றின் மதிப்பு என்ன, பிற்கால வாழ்க்கை என்பன போன்றவற்றை அறியும் பக்குவம் அடையாத சிறுவர் சிறுமியரும்கூட இதுபோன்ற இயக்கங்களில் சேர்க்க பட்டு இதுபோன்ற தீவிரவாத , சமூகவிரோத செயல்களில் அவர்களை ஈடுபடுத்தபடுகின்றனர்.

கூடவே படிக்கும் மாணவர்களுக்குகூட நம் அருகில் அமர்ந்திருக்கும் இதுபோன்ற சக மாணவர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியாத அளவிற்கு இவர்கள் தங்களை அடையாளபடுத்திகொள்ளமாட்டர்கள், யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வராத அளவிற்கு இவர்களுக்கு தீவிரவாத இயக்க கூட்டாளிகளோடு தொடர்பு தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிறைவேற்றும்வரை.

ஆனால் சமீபத்தில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன்,பள்ளிக்கூட ஆசிரியருக்கு எழுத்துமூலமாக, தனக்கும் தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்பை சொல்லும் விதமாக,   தான் தீவிரவாதியின் வீட்டில்தான் குடியிருப்பதாக பகிரங்கமாக  சொல்லிவிட்டான்.

பதறிப்போன ஆசிரியர், "நீயா" என தனக்குதானே கேட்க்க , அவனும் ஆமாம் நான் தான் என அழுத்தம் திருத்தமாக அந்த எழுத்து வடிவில் பதிலளித்து இருந்தான்.

விஷயம், தலைமை ஆசிரியரிடம் போக , பிறகு  காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டு, ரகசியமாக அந்த மாணவன் எழுதி இருந்த தகவலை மீண்டும் பலமுறை காவல்துறை பரீசீலனை செய்து பின்னர் ஒரு முடிவிற்கு வந்து  அந்த குறிப்பிட்ட மாணவனை விசாரிக்க அவனது வீட்டிற்கு சென்றனர்.

முதலில் வீட்டை வெளியில் இருந்து நோட்டம் பார்த்தனர் காவல் துறையினர்.  அது ஒரு தொகுப்பு வீடு ஆங்கிலத்தில் terraced house என்று அழைக்கப்படும். 

பிறகு வீட்டில் இருந்த அந்த மாணவனை பார்த்த காவலர்களுக்கு நம்பவே முடியவில்லை, இவனா? இருக்காது, இந்த சின்ன வயதில் இவனுக்கு தீவிரவாதிகளுடன் (விசுவாசமா) சகவாசமா?

எனினும் புகாரை அலட்ச்சியபடுத்த விரும்பாத காவல்துறை அந்த மாணவனிடமும் அவனோடு அதே வீட்டில் வாழ்ந்துவரும் ஒரு நாற்பத்தெட்டு வயதுடைய முகம்மது என்பவரிடமும் விசாரணை செய்தபோது முகம்மது அதிர்ந்துபோனார்.

அவரது அதிர்ச்சிக்கு காரணம் என்ன?

சம்பந்தப்பட்ட அந்த மாணவன், முகம்மதுவின் 10 வயது மகன். இவன் என்னோடுதானே இருக்கின்றான், இவன் எப்படி தீவிரவாதி வீட்டில் வாழ்வதாக சொல்லி இருப்பான்.

அப்போது அவன் தன் கைப்பட எழுதி இருந்த ஒரு தாளை காண்பித்து அதிலுள்ள வாசகங்களை காண்பித்திருக்கின்றனர்.

பல பத்திகளைகொண்ட அந்த தாளில் பல இடங்களில் தான் தீவிரவாதியின் வீட்டில் வாழ்வதாக குறிப்பிட்டிருந்ததை பார்த்து முகம்மதுகூட முதலில்  ஏதும் புரியாமல் திகைத்துபோனார்.

பின்னர்தான் நடந்த இந்த விபரீத குளறுபடிக்கு விடை கிடைத்தது.

பள்ளிகூடத்தில் ஆங்கில கட்டுரை ஒன்றை எழுதசொல்லி இருந்தார்களாம். 
இந்த மாணவன் தன்னுடைய வாழ்க்கை முறையை விளக்கி ஒரு கட்டுரை எழுதி அதை ஆசிரியரிடம் கொடுத்திருக்கின்றான்,

அதில் தான் ஒரு "terraced "   வீட்டில் வசிக்கின்றான் என்று எழுதுவதற்கு பதில் தான் ஒரு "terrorist's " வீட்டில் வசிப்பதாக  எழுதி இருக்கின்றான், இதை எழுத்துப்பிழை என்று உணராமல், இங்கே ஒருமாணவன் தீவிரவாத செயலில் ஈடுபடுவதாக சந்தேகித்து ஆசிரியர் கொடுத்த தகவல் காவல்துறை விசாரிப்பு வரை போய்விட்டது.

விசாரணை செய்த காவல்துறை, மாணவனின் மடி கணினியையும்  சோதித்து பார்த்துவிட்டு இவனுக்கும் தீவிராதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை இது முழுக்க முழுக்க ஒரு எழுத்துபிழையே என சொல்லி மேற்கொண்டு எந்த விசாரணையும் இன்றி புகாரை  நிராகரித்தது.

இங்குள்ள பள்ளிகளுக்கு மாறுபாடான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை குறித்த தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அரசாங்கத்தால்  ரகசிய கட்டளைகள் ஏதேனும் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படியில் இந்த குளறுபடியான பயம் கலந்த புகாரும் விசாரணையும் நடந்திருக்குமோ  என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

பெற்றோர்களே பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிப்பதை விட்டுவிட்டு முதலில் அவர்களின் வீட்டுபாடத்திலுள்ள எழுத்து பிழைகளை சரி செய்ய பாருங்கள்.

A for Apple
B for Bo(y)mb.....

நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 comments:

 1. எழுத்துப் பிழை
  எத்தனை பெரிய சிச்சலில் கொண்டுபோய் விட்டுவிட்டது

  ReplyDelete
  Replies
  1. கரந்தையார் அவர்களுக்கு,

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 2. ஏற்கனவே செய்திகளில் அடிபட்ட தகவல் என்றாலும் தங்கள் எழுத்தில் படிக்கும் போது அதன் சுவாரஸ்யம் மேலும் கூடுகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. செந்தில்குமார்,,

   பதிவினை பாராட்டியமைக்கு நன்றிகள்.

   கோ

   Delete
 3. வணக்கம் அரசே,

  நெஜமா???????

  பிழைகளைச் சரி செய்யுங்கள்,, உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. பேராசிரியருக்கு,

   நாங்க என்ன பொய்யா சொல்றோம்? நெசமாத்தாங்க, கற்பூரத்தில் வேண்டுமானால் சத்தியம் செய்யட்டுமா?

   பிழை திருத்தம் வேண்டும்போது பேராசிரியரான உங்களைத்தானே அணுகுவேன்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 4. அட ச்செ.. ச்செ.. ஐய்ய்யோஓஒ!!
  ரொம்ப சீரியசான சப்ஜெட் நினைச்சுகிட்டு படிச்சிட்டு வந்தாக இப்படியா
  அதில் தான் ஒரு "terraced " வீட்டில் வசிக்கின்றான் என்று எழுதுவதற்கு பதில் தான் ஒரு "terrorist's " வீட்டில் வசிப்பதாக எழுதி இருக்கின்றான்
  ஐய்யோ:((( அவ்வ்.

  ReplyDelete
  Replies
  1. மகேஷ்

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   சில நேரம் சீரஸ் கூட புஸ்ஸ் வானம் ஆவதும் புஸ்ஸ்ஸ் வானம்கூட வானம் நோக்கி பாய்ந்து சீரியஸ் ஆவதும் எலாம் அந்த "மகேஷ்"வரனுக்கே வெளிச்சம்.

   கோ

   Delete
 5. பாவம் குட்டிப் பையன். தெரிந்த செய்திதான் என்றாலும் கோ வின் தமிழில் நடையில் வந்ததென்னவோ ரசிக்க வைத்தது என்பது உண்மையே..அதுவும் கடைசியில் பாம்ப்!!! பி ஃபார் ..
  பிழைகள் சகஜம் தான் ஆனால் இப்படி எல்லாம் என்றாலு எந்தப் புற்றிற்குள் எந்தப் பாம்பு (பாம்ப்) இருக்கோனு பயப்பட வேண்டியதாகிவிடுகின்றதே...

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   "எந்தப் புற்றிற்குள் எந்தப் பாம்பு (பாம்ப்) இருக்கோனு பயப்பட வேண்டியதாகிவிடுகின்றதே"

   உண்மைதான்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete