பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 4


வாகை சூடும் உன் வாசல் தேடும்....

தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.-3 சொடுக்குங்கள்

அடுத்ததாக மொழிப்பற்று:

நாம் எந்த மொழியினராக இருந்தாலும் அவரவர் தாய் மொழியினை மதிக்கவும் , அவற்றை பேசவும் , எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.  நாமே நம் தாய் மொழியின் மீது நாட்டம் குறைந்தவர்களாக இருப்பின் வேறு எவர் நம் மொழியை கொண்டாடுவர்.

முடிந்தவரை நம் வீடுகளில், ஒரே மொழிபேசும் நண்பகளிடம் நமது தாய் மொழியிலேயே சம்பாஷிப்பது ஒரு ஆரோக்கியமான மொழி வளர்ச்சிக்கும் அவைகளின் அழிவிலிருந்தும் காப்பாற்ற படவும் வழி வகுக்கும்.

அதே சமயத்தில் ஆங்கில அறிவையும் வளர்த்துகொள்வது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

நான் ஆங்கில மொழியின் தூதுவனாக இங்கே வரவில்லை; எனினும் எதார்த்த நடை முறைகளை கருத்தில் கொண்டு ஆங்கிலத்தை கசடற கற்பதும் அவசியமாகிறது என்பதை நினைவூட்டவே விழைகின்றேன்.

 ஆங்கிலம் வெளி நாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்காக என்று மட்டுமே கருதாமல், கல்லூரி காலங்களில் முறையாக ஆங்கிலத்தை கற்றுகொள்வது பலவகைகளிலும் நமக்கு பயனுள்ளதாக அமையும்.

தமிழை மட்டுமே கொண்டு தமிழக எல்லையை கடந்துள்ள மாநிலங்களில் நாம் எப்படி வாழ முடியும்?  அதற்காக இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மொழிகளையும் கற்க முடியுமா?  நம் தேசிய மொழியாகிய ஹிந்திகூட எத்தனை மாநிலங்களில் பேச படுகின்றது?

எனவே தாய் மொழியை அதன் உன்னதம் கருதி கசடற கற்பதோடும் பேசுவதோடும், ஆங்கிலத்தையும் கற்றுகொள்வது அனுகூலமாக இருக்கும்  என்பதை அனுபவ ரீதியாக உங்களுக்கு நினைவூட்ட விழைகின்றேன்.

நான் தமிழை மறக்ககூடாது என்பதைவிட "தமிழ் என்னை மறந்துவிட கூடாது" என்பதற்காய், கோயில்பிள்ளையின் செதுக்கல்கள் எனும் தலைப்பில் www.koilpillaiyin.blogspot.com எனும் வலை தளத்தில் அவ்வப்போது நான் எழுதும் சில பதிவுகள் உள்ளன, நேரம் இருந்து விருப்பமும் இருந்தால் தளம் சென்று பார்த்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக நம் இலக்கு:

 தம்பி தங்கைகளே,

வரலாற்று சிறப்பு மிக்க  இந்த கலை அரங்கினுள் எனது கல்லூரி காலங்களில், இதோ இப்போது நீங்கள் அமர்ந்திருப்பதை போலவே நானும் மேடைக்கு முன்னால் அமர்ந்து பல நிகழ்ச்சிகளை கண்டு களித்திருக்கின்றேன்.

பல சந்தர்ப்பங்களில், பாட்டுபோட்டி, கவிதைபோட்டி, கட்டுரைபோட்டி, பேச்சு போட்டி, நாடகம் போன்ற எத்தனையோ காரணங்களுக்காகவும் , கல்லூரியின் பல முதல்வர்கள், எழுத்தாளர்கள்- தாமரை மணாளன், லேனா தமிழ் வாணன், கவிஞர் வைரமுத்து , இன்னும் பல சமூக சமய தலைவர்களின் கரங்களால் பரிசு பெறுவதற்கும் இந்த மேடையில் நான் நின்றிருக்கிறேன்.

எத்தனை முறை இந்த மாபெரும் சபையின் மேடையை நான் ஏறி இருந்தாலும் இரண்டே இரண்டு முறை நான் இந்த மேடை ஏறிய அந்த தருணங்கள்தான் இன்னும் என் மனதிலும் என் வாழ்விலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.

அவை:

மூன்றாண்டு காலம் பட்ட படிப்பை உரிய காலகட்டத்தில் வெற்றிகரமாக முடித்து அதக்கான அங்கீகாரமான பட்டம் அளிக்கபட்டதை, கம்பீரமாக, பெற்றுகொள்ள மேடை ஏறினேனே அந்த தருணமும், அதை தொடர்ந்து இதே கல்லூரியில் அடுத்த இரண்டாண்டுகள் பட்ட மேற்படிப்பை படித்து முடித்து அதற்கான அங்கீகாரமான அந்த வெற்றி கொடியெனும் பட்டத்தை பெறுவதற்கு துள்ளும் உள்ளம் பொங்கும் இன்பத்தோடு மேடை ஏறினேனே அந்த நிகழ்வும்தான் இன்றும் என் வாழ்வோடும் என் உணர்வுகளோடும் என் உள்ளத்தோடும்  நிறைந்திருக்கின்றன.

பட்டாம் பூச்சிகளாய் இந்த கல்லூரியின் வளாகத்தில் நுழைந்து, பலவித , மாணவ பருவத்திற்கே உரித்தான ஆனந்தத்தையும் , மகிழ்ச்சியையும் நாம் அடைந்திருந்தாலும், இந்த கல்லூரி வளாகத்தினுள் நாம் நுழைந்த நோக்கத்தை ஒருபோதும் மறவாமல், நம் சிந்தனை செயல்களை ஒருமுகபடுத்தி இலக்கை நோக்கி பயணிப்பது நமது இன்றியமையாத முதல் கடமையாக கருதவேண்டும்.

ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி நம்மை  கல்லூரி வரை அனுப்பிவைத்து படிக்க வைக்கும் நம் பெற்றோர்களுக்கும், நமக்கு பாடம் சொல்லிகொடுக்கும் ஆசிரியர்களுக்கும், நம்மை உருவாக்கும் இந்த கல்லூரிக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் வண்ணம், படிப்பிலே கவனம் செலுத்தி உரிய காலநேரத்தில் படிப்பை முடித்து பட்டங்களுடன்  வெற்றிகளிப்போடு நீங்கள் இந்த கல்லூரியை விட்டு வெளியில் செல்லவேண்டும் அதுவே உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் தரும் என்பதையும் நினைவு படுத்த விழைகின்றேன்.


அப்படி என்னையும் என்னைபோன்ற எத்தனையோ மாணவர்களையும் உங்களையும் உருவாக்கும், இந்த கல்லூரிக்கு நான் செலுத்தும்  நன்றியாக இந்த மாபெரும் அரங்கில் கூடி இருக்கும், இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள்,கல்லூரி முதல்வர் முன்னிலையில்,  வாழ்த்து கூறுவது முறையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

(என கூறி ஏற்கெனவே உங்கள் யாவரிடத்திலும் முன்னரே பகிர்ந்துகொண்ட கல்லூரி கலைக்கூடம் எனும் தலைப்பிலான கவிதையை நினைவிலிருந்து சொல்லி முடிக்க) அதை தொடர்ந்து கூடியிருந்தவர்கள் எழுப்பிய கரவொலி அடங்க சிறிது நேரம் ஆனது அதுவரை மைக் முன்னிலையிலே நின்றுவிட்டு,

இத்தனை நேரம் பொறுமைகாத்து என்னுடைய பேச்சினை செவிமடுத்த உங்கள் அத்துனை பேருக்கும், எதிர்பாராத இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்த கல்லூரியின் பழைய மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கும், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட அனைத்து பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து என் நன்றியையும் வணக்கத்தையும், அன்பு மாணவ தம்பி தங்கைகளுக்கு நீங்கள் உங்கள் வாழ்வில் பல உன்னத உயரங்களை அடைய வேண்டும் ,உங்களுக்கும் பல மா பெரும் சபைகளும், மேடைகளும் காத்திருக்கின்றன, வாகை சூட்ட  என்று என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.

வாழ்க பாரதம், வெல்க தமிழ்.

நன்றி.

வணக்கம்.

பின்னர்  நன்றியுரை ஆற்றினார் மற்றுமொரு பேராசிரியர்.

அதை தொடர்ந்து பலரும் வந்து என்னோடு கை குலுக்கியும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர், பின்னர் பேராசிரியர் ரசூல் அவரது துறை அலுவலகத்திற்கு எங்களை அழைத்து சென்று தேநீர் விருந்து படைத்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.

பின் குறிப்பு:

கடந்த 25 ஆண்டுகளாக கோடை விடுமுறைக்கு தாயகம் சென்றிருந்தாலும் இந்த ஆண்டு (2015) ஆகஸ்ட்டு மாதம் சென்று இருந்த விடுமுறை நாட்கள் பல வகையில் எனக்கு மறக்கமுடியாத  அனுபவங்களை கொடுத்தது, அவற்றுள் என் கல்லூரியில்  எனக்கு கிடைத்த இந்த பாராட்டும் அங்கீகாரமும் இந்த மேடைபேச்சும்  மறக்கமுடியாதது.

நன்றி

மீண்டும் (சி)ந்திப்போம்

கோ


10 கருத்துகள்:

  1. இரண்டு முறையை விட இந்த மூன்றாவது முறை ஏறிய மேடையை, எங்களால் மறக்கவே இயலாது... நம்பிக்கை பேச்சு... வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பால்,

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. கோயில்பிள்ளையின் செதுக்கல்கள் எனும் தலைப்பில் www.koilpillaiyin.blogspot.com எனும் வலை தளத்தில் அவ்வப்போது நான் எழுதும் சில பதிவுகள் உள்ளன, நேரம் இருந்து விருப்பமும் இருந்தால் தளம் சென்று பார்த்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.////

    ஹா.ஹா.ஹா ப்லாக் விசிடர்ஸ் கூட்ட ஓசி விலம்பரமோ:))) அவ்வ்

    நான் தமிழை மறக்ககூடாது என்பதைவிட "தமிழ் என்னை மறந்துவிட கூடாது"//

    சார், உங்கள் மொழிப்பற்று... ஸ்ஸ்ஸப்ப்பாஆ முடியல:)

    என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.///

    அம்பிட்டுதான் பேச்சா? சும்மா ஒரு டவுட்டு:)
    ***

    முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு
    பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருந்திச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      பேச்சின் ஒவ்வொரு வரியையும் ரசித்து பாராட்டிய உமது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      விளம்பர படுத்துகின்றோம் என்று நிச்சயமாக தோன்றவில்லை, அந்த அளவிற்கு புத்தி சாலித்தனம்....லேதண்டி.

      பிளாக் விசிடரின் எண்ணிக்கையை கூட்டுவதைவிட உம்மைபோன்ற வாசக தம்பிகளின் மனதில் இடம் பிடித்திருப்பதையே பெரிதாக நினைக்கின்றேன்.

      பேச்சு முடிந்துவிட்டது (என சந்தோஷமா..? வருத்தமா?)

      கோ

      நீக்கு
  3. வணக்கம் அரசே,

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,

    அஹா எவ்வளவு அருமையான உரை, மாணவர்களுக்கு பயன்படும் என்று என்னால் சாதாரணமாக சொல்லிவிட முடியல,

    தங்கள் அனுமதி வேண்டும் முதலில். என் பின்னூட்டம் ஒரு வேளை நீண்டு போனால் அதை வெட்டிவிடாதீர்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு கட்டாயம் இது போன்ற நாட்டுப் பற்று மிக்க வீர உரைகள் அவசியம் தேவை என்பது என் துணிவு. காரணம் நாம் எல்லாவற்றையும் ஒரு மேம் போக்காகத்தான் பார்க்கிறோம். தலைவர்கள் பட்ங்களைக் காட்டி பெயர் கேட்டால் இன்றைய கல்லூரி மாணவர்கள் பெரும்பாலோர் பதில் தெரியல என்பது தான்.

    மொழிப் பற்றும் அப்படித் தான்,, தாய்மொழி என்பது ஒப்புநோக்க கூடியது அல்ல, எவன் ஒருவன் தன் தாய்மொழி வாயிலாக முறையான கல்வி கற்கிறானோ அவனே அனைத்து துறையிலும் சாதிப்பான் என்பது மறுக்க முடியாத உண்மை.

    ஆனால் நாம் வேலைக்காக ஒரு மொழியைப் படிப்பதற்கு என்ன என்ன காரணங்கள் சொல்கிறோம். வேலை வேண்டும் என்பதற்காக நம் தாயை நாம் விலக்கி விடுவோமா? ( முதியோர் இல்லம் பற்றி பேச வேண்டாம், அதுவும் பொருளாதாரம் சார்ந்ததே), மொழியும் அப்படி தான், நமக்கு மொழிபற்று அவசியம் வேண்டும். வேறு என்னவெல்லாமும் நான் படித்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், தவறில்லை.

    பசிக்கும் போது சாப்பிட வேண்டும் எனத் தோன்றும் உணர்வு போல் தான் மற்ற மொழிகள் பயன்பாடு,,,,,

    மேலும் நம் பண்பாடு, பழக்கங்கள் இவைகளும் இன்று மாறி வருகின்றன. இவைகளையும் நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.

    என்னைப் பொறுத்தவரை கல்லூரிகளில் சிறப்பு உரையாற்ற வெளியில் இருந்து பெரும் தலைவர்களை அழைக்காமல், பழய மாணவர்களை அழைத்தாலே இன்றைய மாணவர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என்பது உண்மை.

    ஆம் படித்தவர்களுக்கும் பெருமை, மாணவர்களும் நாம் அவரைப் போல் நன்றாக வர வேண்டும் என்பது உறுதி,

    உண்மையிலே பாராட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சியையும் நம் குடும்பத்தில் மிகுந்த மரியாதையையும் ஏற்படுத்தும் என்பது தங்கள் மன உணர்வுகளில் இருந்து புரிந்துக்கொள்ள முடிகிறது,

    எனக்கும் மிகப் பெரிய ஆசை உண்டு,,,,

    தங்கள் கல்லூரி முதல்வருக்கு ஒரு சிறப்பு வணக்கத்துடன் கூடிய நன்றிகள் எம் சார்பாக சொல்லிவிடுங்கள், நல்ல மனிதரை பெருமைப்படுத்திய உயர்உள்ளம்.

    இன்னும் நிறைய இருக்கு,, ஆனால் தாங்கள் படிக்க கஷ்டப்படக் கூடாதே என்று இத்துடன் என் உரையை அய்யோ என் எழுத்தை நிறைவு செய்கிறேன்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      உங்களின் நீண்ட , ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      கல்லூரி மாணவர்களிடையே நிகழ்த்திய உரை என்பதால் தங்களின் கருத்தையும் கவர்ந்ததாக இருக்கின்றது என நினைக்கின்றேன்.

      நீங்கள் சொல்வதைபோல் முன்னாள் மாணவர்களை அழைத்து இந்நாள் மாணவர்க;இடையே பேச வைப்பது, ஒரு நல்ல மாற்றத்தை மாணவர்கள் மனதில் உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

      உங்களின் வணக்கங்களை எங்கள் கல்லூரி முதல்வருக்கு தெரிவித்திருப்பேன் , என்னை நல்ல மனிதர் என்று சொல்வதை நீங்கள் தவிர்த்து இருந்தால்.

      நீங்கள் எத்தனை நீளமான பின்னூட்டம் "அளித்திருந்தாலும்" அதை வாசிக்க எனக்கு "சலித்திருக்காது".

      தங்களின் மிகப்பெரிய ஆசையும் (என்னவென்று தெரியவில்லை) நிறைவேற என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.

      வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் மீண்டும்.

      கோ

      நீக்கு
  4. அருமை.இன்னும் பல மேடைகள் காண வாழ்த்துக்கள் சகோதரரே .

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள், தாங்களும் கல்லூரி சார்ந்தவர் என்பதால் பேச்சு பிடித்திருக்கும் என நம்புகின்றேன். இன்னும் பல மேடைகளா? உங்களுக்குத்தான் எத்தனை விசாலமான மனது?


    கோ

    பதிலளிநீக்கு
  6. ஆஹா அருமை கோ! உங்கள் பேச்சுரை. இப்படிப் பழைய மாணாக்கர்களையும் அழைத்துப் பேசவைப்பது இப்போது பயிலும் மாணவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். தங்களது பேச்சும் அவர்களைச் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    மொழிப்பற்று மிக மிக அவசியம். ஏனென்றால் பிற மொழிகளைக் கற்க தாய்மொழி அவசியம் என்பதும் அப்படிக் கற்கும் போது உணர்வுபூர்வமாகவும் உள்வாங்க முடியும் என்பதும் எங்கள் கருத்து.

    பிற மொழிகளை எளிதாகக் கற்க தாய்மொழி மிக மிக அவசியம். ஆனால் தமிழ் பிள்ளைகள் வட இந்தியா செல்லும் போது அவர்களுக்கு இந்தி மொழி தாய்மொழியாக மாறிவிடுகின்றது வட இந்தியா என்பதை விட பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது அந்த மாநிலத்தின் மொழி இரண்டாம் பாடமாக இருப்பதால் அம்மொழி தாய்மொழியாகி பிற மொழிகளைக் கற்க அந்தமொழியின் வழிதான் கற்கின்றார்கள்.

    தாய்மொழி தவிர யதார்த்தத்தில் பார்க்கும் போது ஆங்கிலம் மிக மிக அவசியமாகின்றது ஆங்கிலம் சரிவரக் கற்க வேண்டும் என்றால் தாய்மொழி அவசியம். இக்காலக்கட்டத்தில் ஆங்கிலம் இன்றியமையாத மொழியே தாங்கள் சொல்லியிருப்பது போல.

    தாய்மொழி, ஆங்கிலம் தவிர வேறு பல மொழிகள் தெரிந்து கொள்வதில் தவறே இல்லை எனலாம்.

    தாய்மொழிப் பற்று தவறு இல்லை அது வெறியாக மாறாது இருக்கும்வரை....

    நீங்கள் நல்ல மேடைப் பேச்சாளர் என்பது தங்கள் பரிசுகள் சொல்லுகின்றன...அது சரி நல்ல பாடகரும் கூடவா? ஆஹா அதற்கும் பரிசு எல்லாம் பெற்றிருக்கின்றீர்கள் போல...

    பன்முகத் திறமையாளராக இருப்பதற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      தாய் மொழி பற்று வெறியாக மாறுவது கண்டிக்கத்தக்கதுதான்.

      மத்திய பிரதேசத்தில் ரத்லம் எனும் ஊரில் நடந்த பாட்டுப்போட்டியில் "தமிழில்" பாடி பரிசு பெற்ற கதையும் உண்டு - நம்பித்தான் ஆகவேண்டும்.

      ஆம் நீங்கள் சொல்வது சரிதான், எனக்கு BUN(??!!) முகம்தான் அப்போது, FUN முகம் இப்போது.

      கோ

      நீக்கு