பின்பற்றுபவர்கள்

சனி, 31 ஜனவரி, 2015

பிசாவில் பிரியாணி.


உலக அதிசயம்

இன்றைய காலகட்டத்தில் "துரித உணவு" எனும் தாற்பரியம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

எந்திரமயமான இந்த துரித வாழ்க்கை சூழலில் அடுப்பை மூட்டி,அரிசியை ஊறவைத்து , காய்கறிகளை வெட்டி, உப்பு மிளகாய்,புளி,வெங்காயம், தக்காளி....என்று ஒவ்வொன்றாக எடுத்து சமைத்து முடிப்பதற்குள் போதும் போதும்  என்றாகிவிடுகின்றது.


இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு ஆபத்து பாந்தவனாக கை கொடுத்து உதவுவது இந்த துரித உணவு வகைகளே.

தேவையான பதபடுத்தி வைக்கப்பட்ட  துரிதமாக சமைக்ககூடிய, அல்லது வெறுமனே சூடு செய்து சாப்பிடக்கூடிய  எத்தனையோ வகையான உணவு களில் இப்போது ஏறக்குறையா உலகின் எல்லா நாடுகளிலும் சாதாரணமாக அதே சமயத்தில் பரவலாக கிடைக்கும் உணவு "பிசா".

பிசா என்ற இந்த வகை உணவு மேற்கத்திய நாடான இத்தாலியின் கண்டுபிடிப்பு என்று பெரும்பாலோர் சொல்லுவார்கள், ஆனால் இதன் பிறப்பிடம் பண்டைய  மத்திய கிழக்கு நாடான பாபிலோன் என்பதுதான்  என்று வரலாற்று பதிவுகள் சொல்லுகின்றன.

அதன் பின்னர் இஸ்ரேலியர்கள், எகிப்தியர்கள்   , அமெரிக்கர்கள் ,கிரேக்கர்கள், ரோமர்கள் என்று பல தரப்பட்ட நாட்டு மக்களால் புளிப்பில்லாத மாவினால் தயாரிக்கப்பட்டு அதை மண்ணினால் செய்யப்பட்ட குகை போன்ற அடுப்பில் வைத்து சமைத்து உண்டு மகிழ்ந்தனர் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றனர்.

இப்போது அதே புளிப்பில்லாத ரொட்டிகள் பல்வேறு பரிணாம வளர்ச்சி அடைந்து அதன் மேலே பலதரப்பட்ட காய்கறிகள், தக்காளி, குடைமிளகாய், மாமிசம், சீஸ் போன்றவற்றை சேர்த்து நாவிற்கு தேவையான அத்தனை சுவைகளையும் சேர்த்து எளிதில் செய்து வழங்கும் பல கடைகள் உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது காணபடுகின்றது.

ஆமாம் பிசாவில், சிக்கன் போடுவாங்க, சீஸ் போடுவாங்க ,  தக்காளி, குடைமிளகாய்,...இப்படித்தான் போடுவாங்க பிரியாணிகூடவா போடுவாங்க.?  அடி ஆத்தி.(??)

எனினும் நாம் இப்போது பரவலாக அறிந்தவண்ணம் - பார்க்கும் - சுவைக்கும் நவீன பரிணாம வளர்ச்சி பெற்ற பிசாவின் புகலிடம், பிறப்பிடம் இத்தாலிதான்.


சரி பிசாவை பிசாவிலேயே சென்று சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

கொஞ்சம் ஓவரான நினைப்புதான்.

இப்படி கற்பனையில் சில காலங்கள் கழித்தபின்னர் , சில காலங்கள் கழித்து மீண்டும் இத்தாலிக்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.

கடந்த முறை இத்தாலிக்கு போகும்போது ரோம் நகரிலுள்ள , பல பிரசித்திபெற்ற இடங்களை காண நேர்ந்தது; அதை பற்றி "அது இது எது" எனும் எம் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் , நினைவில்லைஎன்றால் மீண்டும் பார்வை இடவும்.

அந்த பயணத்தின் போது  உலக அதிசயங்களுள் ஒன்றான ரோமன் கொலோசியத்தை பார்த்தாயிற்று.

இந்த பயணத்தின் போது  மற்றுமொரு உலக அதிசயமான பிசா நகரத்து சாய்ந்த கோபுரத்தையும் பார்த்துவிட்டு, எதோ எங்க பார்த்தாலும் இத்தாலியன் பிசா என்கிறார்களே, அதையும் பிசா நகரத்திலேயே சென்று சாப்பிட்டால் எப்படி இருக்கும்? சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சென்று பார்ப்பதுபோலல்லவோ இருக்கும்.

சரி வண்டியில் ஏறி அமர்ந்தோம்(எந்த வண்டி?  விமானம் தான்)

ஏறி அமர்ந்து இரண்டு மணி நேரத்தில் இத்தாலியின் டாஸ்கனி(TUSCANY ) மாகாணத்தில் அமைந்திருக்கும் விமான நிலையங்களுள் மிகவும் பிரசித்திபெற்ற பிசா சர்வதேச விமான நிலையத்தை அடைந்தோம்.

இந்த விமான நிலையத்திற்கு கலிலியோ விமான நிலையம் என்று தான் முதலில் பெயர் வைத்திருந்தனர்.

கலிலியோ யாரா?

என்னங்க அவர்தான் பிப்ரவரி 15 ஆம்  தேதி  1564 இல் பிசாவில் பிறந்து   8-1-1642 வரை வாழ்ந்த உலக புகழ்பெற்ற வானிலை ஆராய்ச்சியாளரும் அறிவியலாரும் டெலஸ்கோப்பை மாற்றி வடிவமைத்தவரும், 1610 ஆம் ஆண்டு சூரிய மண்டலத்திலிருந்த ஜூபிடர் கோளின் துணை  கோளான கல்லிஸ்டோ  என்னும் மூன்றாவது பெரிய சந்திரனை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவரும் , மேலும் இந்த கல்லிஸ்டோ பூமியிலிருந்து  துல்லியமாக 628,300,000 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதையும் கணக்கிட்டு காண்பித்து நிரூபித்தவரும்.  

அவர் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வீட்டை பிசாவிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் பிளாரன்ஸ் எனும் ஊருக்கு சென்றபோது பார்த்த விவரம் வேறொரு நாளில் சொல்கின்றேன். 

அதே போல  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே நெப்டியூன் எனும் கிரகத்தையும் இவரே கண்டுபிடித்ததாகவும் நவீன உலக விஞ்ஞானிகள் அவருக்கு புகழாரம் சூட்டு கின்றனர்.


சரி கலிலியோவையும் அவரின் கண்டுபிடிப்பு மற்றும் சாதனைகளையும் பிறகு பார்ப்போம்.

இப்போது, 

உலகத்தின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான பிசா நகரத்து சாய்ந்த கோபுராம் அமைந்திருந்த இடத்திற்கு அருகாமையில் வந்ததும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி எமது உள்ளத்தில்.

பாடங்களில் படித்த -  படங்களில் பார்த்த உலக அதிசயம் இப்போது எமது கண் முன்னே!!!!

அற்புத பூமி (land of miracle.) என்று அழைக்கப்படும் இடத்தில் கட்டப்பட்ட நான்கு பெரிய கட்டிடங்களுள் இந்த சாய்ந்த கோபுரமும் ஒன்று.

அந்த நான்கு பிரமாண்டமான கட்டிடங்களும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. அவற்றுள் ஒன்று தேவாலயம். அந்த தேவாலயத்தின் மணிகூண்டுதான் இந்த சாய்ந்த கோபுரம்.

இதை கட்டும்போது செங்குத்தாகத்தான் கட்ட ஆரம்பித்தனர் நாளடைவில்  அந்த கட்டிடத்தின் ஓரமாய் பூமிக்கடியில் இருந்த "ஒர்னா" எனும் ஆற்றின் நீரோட்டத்தின் போக்கும் அது ஏற்படுத்தும் அதிர்வின் காரணமாக  கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில் மணி கூண்டு கொஞ்சம் வலது பக்கமாக சாய்வதை உணர்ந்த பொறியாளர்கள்  , கட்டிடபணியை உடனே நிறுத்திவிட்டு மீண்டும் பல விஷயங்களை கணக்கிட்டு கட்டுமான பணியை துவங்கி இருக்கின்றனர்.

 இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக 207 தூண்களையும் எட்டு மாடி களையும் 185 அடி உயரமும் 297 சுற்றி சுற்றி கட்டப்பட்ட (spiral) உள்  படிகளும்   உள்ள இந்த வட்ட வடிவ மணிகூண்டு பார்பதற்கு ஒரு பிரமாண்டமான திருமண கேக் போலவும் அதை யாரோ ஒரு ராட்ச்சச விருந்தினர் சற்று தட்டி அசைத்ததுபோலவும் காட்சியளிக்கும் இந்த மணிகூண்டு , கி பி 1173 ஆம் ஆண்டு கட்ட துவங்கி சுமார் 200 ஆண்டுகளாக , போரின் காரணமாக இடையிடையே நிறுத்தப்பட்டு  கட்டி முடிக்கப்பட்டதால் இதன்  சிற்பி யார் என்று அறுதி இட்டு கூற முடியாத - புரியாத  புதிராகவே உள்ளது.

 14500 டன் எடைகொண்ட அந்த   மணிகூண்டில் மொத்தம் 7 பெரிய வெண்கல மணிகள் உள்ளன அந்த அந்த ஏழில் எழும் இசையில் ஏழு  ஸ்வரங்கள் ஒலிக்க கூடியவை என்பது ஒரு சிறப்பு - வியப்பு - கூடுதல் தகவல்.

அவ்வப்போது இந்த  சாய்ந்த கோபுரம் மேலும் சாயாதபடி பராமரிப்பு வேலைகள் நடந்த வண்ணம் உள்ளன. 1920 ஆம் ஆண்டு இந்த கோபுரத்தின் அடி பகுதியில் சிமன்ட் கலவைகளை ராட்ச்சச சிரிஞ்சிகள் செலுத்தி ஓரளவிற்கு சாய்வை தடுத்திருக்கின்றனர்.

அதன் மீது கால் நடையாக சென்று மேலுள்ள அந்த ராட்ச்சத  மணியை தொட்டுபார்த்தும் அதனடியில் அமர்ந்தும் அனுபவித்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது. 


Leaing Tower of Pisa detail

இவ்வாறாக அங்கே தங்கி இருந்த பதினைந்து நாட்களில் பெரும்பான்மையான மாலை வேளைகளை அந்த உலக அதிசயத்தின் நிழலில்தான், சூரியன் மறைந்த பின்னும், அதன் வண்ண அலங்கார ஒளி வெள்ளத்தில் கழித்தோம்.

உலக அதிசயமான பிசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் சாய்ந்த நிழலில் சாய்ந்து அமர்ந்து அதன் அழகை அனுபவித்த அந்த சாய்ந்திர நாட்களை மறக்கத்தான் கூடுமோ?

இதற்கிடையில் பல நாட்கள் நமது பிசாவை உண்டு மகிழ்ந்தாலும் நாக்கு கொஞ்சம் நம்ம ஊர் ருசியை எதிர்பார்த்தது, எனவே நம்மூர் உணவு எங்கேனும் கிடைக்குமா என தேடி போனது வீணாக போகவில்லை.

நகரின் மத்தியிலிருந்த ஒரு கடைதெருவில் ஒரு உணவு விடுதி இருந்தது அதன் பெயர் கராச்சி உணவகம்.

ஆஹா....., நாக்கில் ஜொள்ளோடு அந்த கடையை அடைந்தோம்.

எங்களை பார்த்ததும் அந்த கடையிலிருந்த சகோதரன் புன்  சிரிப்போடு வரவேற்று, ஹிந்தியில் பேச ஆரம்பித்தார், நலம் விசாரித்தார்.

முகத்தின் அழகு முழியில் தெரிந்ததோ என்னமோ?

(ஹிந்தி நஹி மாலும்.. தோடா தோடாதான், தமிழ் அச்சா அச்சா மாலும்......)

அவரிடம் எங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களின் தேவையை சொன்னதும், பிரத்தியேகமாக ,சரியாக 30 நிமிடங்களில், அருமையான, சுவையான , நாக்கில் உமிழ் நீர் சுரக்க , மணக்க மணக்க  மட்டன், மற்றும் சிக்கன் பிரியாணி, ரைத்தா, முட்டை மசாலா, சிக்கன் வறுவல் என வித வித மாக சமைத்து பரிமாறி  அசத்திவிட்டார்.

இப்படியாக இத்தாலியில் பிசா நகரத்தில் நம்மூர் பிரியாணி எங்களுக்கு மறக்க முடியாத உணவாக அமைந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இது மட்டுமா ஆச்சரியம்...  எங்களுக்கு மேலும் ஒரு  ஆச்சரியம் காத்து இருந்தது, அது என்ன?

இத்தனையும் சமைத்து பரிமாறிய அவர் எங்களிடம் காசு வாங்க மறுத்து கட்டிபிடித்து அன்பு பாராட்டி விடையளித்ததுதான்.

அடடே! பதிவின் தலைப்பு இப்படி இருந்திருக்கவேண்டுமோ?  பிசாவில் ஓசி பிரியாணி என்று?

நன்றி! 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ





11 கருத்துகள்:

  1. அனுபவித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதில் எங்களுக்கும் சந்தோசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பால்

      வருகைக்கு நன்றி. பீசா பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
    2. தனபால்,

      வருகைக்கு நன்றி. பீசா பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. பிசா விற்கு இவ்வளவு பெரிய வரலாறா
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு கரந்தையார் அவர்களுக்கு.

      வருகைக்கு நன்றி. பீசாவின் வரலாறு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. நல்ல ருசியான பதிவு. கொடுத்து வைத்தவர் நீங்கள். இவ்வாறாக பல நாடுகளுக்கு சென்று அந்த இடங்களையும் உணவையும் பார்த்து ருசித்து இருகின்றீர்கள்.
    இந்த பதிவை படித்ததும் அடியேன் ஒரு முறை மைசூர் சென்று இருந்தத போது அங்கே மைசூர்ப்பாகு சாப்பிட்டது நினைவிற்கு வந்தது, தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அட! ஓசி பிரியாணியா? இந்தியர் பாவம் இங்க வந்து நாக்கு செத்துக் கிடக்கிறார் போலனு அனுதாபப்பட்டு சமைச்சுப் போட்டாரு போல...ஆனாலும் உயர்ந்த உள்ளம்...அதனால்தான் நாம் அனைவரும் இந்தியாவைப் பற்றி சொல்லும் போது, நாங்கள் அனைவரும் இந்தியர்கள், வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் சகோதரர்கள் , இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று....

    நல்ல அனுபவ விவரணம் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உண்மையிலேயே இதற்க்கு கொஞ்சம் பெரிய மனசு வேணுங்க, உங்களைபோல.

      வருகைக்கும் பீசாவை ருசித்ததற்க்கும் மிக்க நன்றி.

      ரொம்ப பிசியா இருக்கீங்க போல இருக்குது?

      நட்புடன்

      கோ

      நீக்கு
  5. வருகைக்கு மிக்க நன்றி நண்பா.

    கோ

    பதிலளிநீக்கு
  6. கோ,
    நலமா?
    ஓசியில் சாப்பிட்ட பிரியானிக்கு இவ்வளவு பில்டப் தேவையா?
    நாக்கு நல்லா ருசியா தேடும்,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நலம்,

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு