பின்பற்றுபவர்கள்

வியாழன், 22 ஜனவரி, 2015

என்னை தெரியுமா?

நான் யார்? நான் யார்? நீ(ங்கள்) யார்?

விழா காலங்களில்  முன்பெல்லாம் வாழ்த்து அட்டைகள் பெருமளவிற்கு வருவதும் அனுப்புவதுமாக  இருந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நவீன மயமாக்கல் என்றபேரில் சுருங்கி, ஈ மெயில், வாட்சப்,டெக்ஸ்ட்  என்று ஆகிவிட்டது.


இருந்தாலும் வாழ்த்து அட்டைகளை வாங்கி பயன்படுத்துபவர்கள் இன்னமும் இருக்கத்ததான் செய்கின்றனர்.

பண்டிகை காலங்களில் வரும் வாழ்த்து அட்டைகளை, முறைபடுத்தி, அழகாக காட்சிபடுத்தி, சன்னல் மாடம், வீட்டு முகப்பு அறைகளில் பிரத்தியேகமாக அலங்காரமாக வைத்து , பண்டிகை முடியும் நாள்வரை ஒவ்வொரு நாளும் அவற்றை இடம் மாற்றி புதிய வாழ்த்தட்டைகளை சேர்த்து வீட்டை அழகு படுத்துவது வழக்கம்.

அதிலும் நமக்கு வேண்டப்பட்டவர்கள் அனுப்பும் வாழ்த்தட்டைகளை பிரதானபடுத்தி  முன் வரிசையில்  வைப்பதும் வீடுகளில் நடக்கும் ஒன்றுதான்.

அப்படி  கடந்த புத்தாண்டு முன்னிட்டு எமக்கு வந்த வாழ்த்து அட்டைகளில் பல அழகாகவும், அர்த்தமுள்ள வாசகங்களை கொண்டதாகவும் இருந்தன, இன்னும் சில கொஞ்சம் விநோதமாகவும் வித்தியாசமாகவும் இருந்தன.

அப்படி வந்த எல்லா வாழ்த்து அட்டைகளில் குறிப்பாக ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது.

விழாக்காலம் முடிந்த பின்னர் எல்லா வற்றையும் அப்படியே சேர்த்து வைத்து பாதுகாப்பது ரொம்ப காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம்.

அப்படித்தான், இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தபின்னர் வீட்டில் செய்யப்பட்ட எல்லா அலங்காரங்களையும் அவிழ்த்து அவற்றை பாதுகாப்பாக அட்டை பெட்டிகளில் வைத்து கட்டி பரணில் வைக்கும் நேரம் அந்த ஒரு வினோதமான வாழ்த்து அட்டை கண்ணில் பட்டது.

அது கடந்த பதிநான்கு வருடங்களாக நடப்பு தொடர்பில் இருக்கும் என்னோடு பணிபுரிந்த ஒரு ஆங்கிலேய நண்பனிடமிருந்து வந்திருந்த அந்த வாழ்த்து அட்டை.

அதில் என்ன வினோதம்?

வாழ்த்து அட்டையில் 1359 முதல் 1416 வரை வேல்சில்(WALES) , இங்கிலாந்து மன்னர் நான்காம் ஹென்றி ஆட்சி காலத்தில் வாழ்ந்தவரும் வேல்சின் கடைசி ஆட்சியாளராகவும்(LAST  WELSH  CHIEF ), சுய இளவரசன்(INDEPENDENT  PRINCE  OF  WALES )என்ற பட்டத்துக்கு சொந்தகாரராகவும் திகழ்ந்த அவரது முப்பாட்டன்  பற்றிய குறிப்பும், நண்பர் தமது முற்பிதாக்களை  குறித்து செய்த ஆய்வறிக்கையின் ஒரு பகுதியையும் அதில் இவர், இவர் அப்பா, அப்பாவின் அப்பா, அப்பாவின் தாத்தா, அப்பாவின் தாத்தாவின் தாத்தா..... இப்படியே கடந்த 16 ஆம்  நூற்றாண்டுவரை பின்னோக்கி பயணித்து ஆய்வுகளை மேற்கொண்டு, விவரங்களை சேகரித்து எழுதிய புத்தகத்தை குறித்து பிரிட்டிஷ் வரலாற்று சங்கத்திற்கு (British  History  Society) கொடுத்த பேட்டியின் முழு விவரங்களின் பிரதியையும் இணைத்திருந்தார்.

அந்த வகையில் இந்த புத்தாண்டு வாழ்த்து அட்டை என்னை கவர்ந்த ஒரு வித்தியாசமான வாழ்த்து அட்டையாக அமைந்தது.



நண்பரை சந்தித்து என்னுடைய வாழ்த்துக்களை சொல்ல அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

பலவிதமான பேச்சுகளுக்கிடையில், உன்னுடைய குடும்ப வரலாறு உனக்கு எதுமட்டும் தெரியும் என கேட்டார்.

நானும் என் அப்பா அவரின் அப்பா அவரின் அப்பாவரை சொன்னேன் அதற்குமேல் தெரியவில்லை என்றேன்.

பிறகு அவர் கொடுத்த சில ஆலோசனைகளின்படி பல ஆய்வுகளை மேற்கொண்டு இந்திய தொல்பொருள் மற்றும் குடிமதிப்பு ஆணையம்,தேசிய ஆவன பாதுகாப்பு மையம், புது டெல்லி வரை விசாரணை செய்து பார்த்ததில்..... நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்..... சொல்லட்டுமா வேண்டாமா?

சரி சொல்கின்றேன்,

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சாவூர் பெரியகோவிலின் கிழக்கு முகப்பின் மேற்கூரையில் எங்களின் கொள்ளு... கொள்ளு தாத்தாவின் பெயர் பதிக்கப்பட்டுள்ளதாகவும், ராஜ ராஜ சோழ மன்னன் கட்டிய அந்த கோவில் அமைந்திருக்கும் அந்த கிழக்கு முகப்பு கட்டபட்டிருக்கும் நிலம் எங்கள் தாத்தா வழங்கிய நிலம் எனவும் தெரிய வந்து மிகவும் சந்தோஷப்பட்டேன்.

கோயிலுக்கு நிலம் கொடுத்த பரம்பரையில் வந்ததாலோ என்னமோ இன்னும் எங்கள் குடும்ப பெயரில் அந்த "கோ"யில் ஒட்டிக்கொண்டு இருக்குதோ என்னமோ?

நம்பமாட்டீர்கள் என தெரியும்.

நான் சொல்றத யாரும் நம்பமாட்டீங்கனு அப்பவே சொன்னேனே.

அது மட்டுமல்ல திருவாங்கூர் சமஸ்தானத்து ஓலை சுவடுகளிலும் எங்கள் தாத்தா பெயர் இருப்பதாகவும் அவர் பாலக்காட்டில் "எதோ" பள்ளிக்கூடம் கட்ட நிலம் அன்பளிபாக கொடுத்ததாகவும், அதே போல தமிழ் நாட்டில் தேவ "கோட்டை" கட்ட நிலம் வழங்கியதாகவும் கொஞ்சம் விவரம் கிடைத்தது.

மேலும் திண்டுக்கல்லில் இருக்கும் எல்லா கற்களும் அவரின் குவாரியில் இருந்து வழங்கப்பட்டதாம் 

சரி நீங்க எதையும் நம்பலனாலும் பரவாயில்லை.

விஷயத்துக்கு வருவோம். 

நாம் யார்?

இந்த கேள்வியை நம்மில் யாரும் நம்மை பார்த்தே கேட்டுகொள்வதில்லை

நாம் யார் என்பது நமக்கு தெரியும் ஆனால் நம்முடைய முன்னோர்கள் யார் என (கீதா மேடத்தின் முன்னோர்கள் தவிர) நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

வேண்டுமென்றால், நமது பெற்றோரின் பெற்றோர் வரை நமக்கு தெரிந்திருக்கும், ஆனால் அவர்களின் பெற்றோர்கள் யார் அவர்களின் பெயர்கள் என்ன அவர்களின் தொழில்கள் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

அதை தெரிந்துகொள்ளும் முயற்ச்சியிலும் நாம் ஈடுபட்டிருக்க மாட்டோம்.

குறைந்த பட்சம் ஒரு நான்கு அல்லது ஐந்து தலை முறையின் வரலாற்றையாவது நாம் தேடி கண்டுபிடித்து ஆவனம் செய்து அதை நம் சந்ததியருக்கு கொடுப்போம் அதை அவர்களும் தொடர ஊக்குவிப்போம், அதில் நமது சுவடுகளும் இருக்குமல்லவா? 


பின் குறிப்பு:

நண்பரை பற்றி:  பி பி சி யில் மொழி பயிற்சியாளராக -குடும்ப வரலாற்று ஆராய்ச்சியாளராகவும்(Genealogist) பணியாற்றுகின்றார்,.

சிறுவயதிலேயே காது கேட்க்கும் திறனையும் வாய் பேசும் திறனையும் இழந்தவர்.

எப்படி மொழி பயிற்சியாளராக இருக்கின்றார்?  --  சைகை  மொழி (பிரிட்டிஷ் sign  language  instructor )

ராஜ ராஜ சோழனும் நமது முப்பாட்டன் தானே?அவன் கொடுத்த நிலத்தில் கட்டப்பட்ட கோயிலில் அவன் பெயர் கல்வெட்டில் இருக்கும் தானே?
  
நன்றி! 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

  1. வணக்கம்
    பதிவை படித்த போது வியந்து விட்டேன்... பல தகவலை அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரூபன்,

      நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகைதந்திருக்கின்றீகள், மிக்க மகிழ்ச்சி.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. அழகான ரசனையான வாழ்த்து அட்டை...

    என்ன தான் அவசர உலகம் என்றாலும், நீங்கள் சொன்ன ஆவணம் அனைவரும் அறிய வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபால்,

      நீங்கள் சொல்வது சரிதான், கண்டிப்பாக நம்மை பற்றிய ஆவணம் செய்ய ஆவன செய்யவேண்டும்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      திண்டுக்கல்லில் எல்லோரும் நலமா?

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. கடலூரில் உள்ள கடப்பாரை பாக்டரி பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே...
    என்னே ஒரு பரம்பரை..என் பரம்பரை பற்றியும் என்றாவது ஒரு நாள் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. உங்களைத்தெரியும் நண்பரே....
    அருமை.

    பதிலளிநீக்கு
  5. நண்பனே,

    அவசர பட்டு கேட்டு விட்டீர்கள்.

    இந்த தொடரில் நான் எழுதியது முழுக்க முழுக்க எங்கள் அப்பா வழி பாட்டனாரை பற்றி மட்டுமே, கடலூர் கடப்பாரை , இன்னும் பண்ருட்டி பலா காடு இதெல்லாம் எங்கள் அம்மா வழி பாட்டனார் தொடர்புடையவைகள்.

    அவற்றை பின்னாளில் எழுத நினைத்திருந்தேன் அதற்குள் நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.

    மேலும், கடலூர் கடப்பாரை பேக்டரி சம்பந்தமான அகழ்வாராய்ச்சியின் போது, பல கடப்பாரைகள் உடைந்துபோனதால் ஆராய்ச்சி பணியில் ஒரு சிறிய தேக்க நிலை.

    சரியானதும் தெரிவிக்கின்றேன்.

    ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல இருக்குது.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  6. ஹலோ அப்ப இது நகைச் சுவைப் பதிவா! நண்பர் விசுவிற்கு சொல்லியிருக்கும் பதிலைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது....ஆனா உங்க இடுகையை வாசிக்கும் போதே தோன்றியது...இருந்தாலும் "கோ" ஆயிற்றே...."கோ" அரசனின் வார்த்தைகளை நம்பாமல் இருக்கலாமா அவர் நாட்டு மக்கள்....அரசன் கதை அளக்க மாட்டார் என்பதால்...அப்ப துளசி இருப்பது ஒருவேளை உங்கள் பாட்டனார் கொடுத்த நிலத்தில் தானோ...

    கீதாவும் நீங்களும் சொந்தம்னு சொல்லுங்க....கீதாவின் முன்னோர்களும் உங்க முன்னோர்களும் பங்காளிங்களாமே....அப்ப கீதாவும் நீங்களும் பங்காளிங்க தானே...துளசியும் பங்காளிதான் உங்க பங்காளி.....
    ஹஹஹஹ்ஹ சரி சரி அம்மா வழிப் பாட்டானாரின் பன்ருட்டி பலா பத்தி சொல்லுங்க.....அப்போ பண்ருட்டி ராமச்சந்திரன் உங்கள் சொந்தம்னு சொல்லுங்க.....அவரு கீதா குடியிருந்த வீட்டின் ஓனராக இருந்தவர் அவர் மாடியில் கீதா கீழே 12 வருடங்களுக்கு முன்......

    பதிலளிநீக்கு
  7. ஹலோ , இது ஒன்னும் நகைச்சுவை பதிவு இல்லைங்க, நம்புங்க. துளசி அவர்கள் இருப்பது எங்கள் பாட்டன் சொத்துதான் என அறுதி இட்டு துல்லியமாக சொல்லமுடியாது , இருக்கலாம். ,அவரிடம் சொல்லி அந்த பள்ளி முகப்பு கட்டிடத்தின் பின்புறம் வலது மூலையில் ஒரு மூன்றடி உயரத்தில் கல்வெட்டு ஏதேனும் இருக்கின்றதா என பார்க்க சொல்லவும்.எழுத்துக்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. அப்படி அந்த கல்வெட்டு இல்லையென்றால் அந்த இடம் தான் எங்கள் பாட்டனாரின் இடம் அன்று உறுதியாக சொல்லமுடியும்.

    கீதா அவர்கள் எனக்கு உறவுமுறை என்று நீங்கள் சொன்னதும் கொஞ்சம் "மெர்சல்" ஆயிட்டேன், பிறகு கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செய்து பார்த்ததில் அவர்கள் கீ.பீ.1835 -1858 வரை வாழ்ந்த இந்திய புரட்சி வீராங்கனை ஜான்சி ராணி லக்குமி பாயின் முன்னோரின் வம்சாவழியில் வந்தவர்கள் என்றும்,பிறகு அரசியல் காரணங்களுக்காக குடிபெயர்ந்து தமிழகம் பக்கமாக வாழ்ந்துவந்ததாகவும் பண்ருட்டியில் அவர்கள் 12 வருடமாக வாழ்ந்த அந்த வீடு கீதா அவர்களின் பாட்டனாருக்கு கிடைத்த (சொத்து)பாகத்தில் கட்டப்பட்ட வீடு என்றும் தெரிய வந்தது.

    மேலும், அவர்கள் வீட்டிற்கு அவர்களே வடகைகொடுத்து வாழ்ந்த கொடுமையை நினைத்து பரிதாப படுகிறேன்.

    அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.

    நண்பர் விசுவிற்கு சொன்ன பதிலில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பற்றி சொல்லாமல் விட்டத்தின் காரணம் அங்கே இப்போது பல ஆயிரம் அடி தூரம் ஆழமாக சுரங்கம் வெட்டிவிட்டதால் சான்றுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன - ஆதாரங்கள் சிதைக்கபட்டுவிட்டன.

    இன்னும் ஆராய்ச்சி முடியவில்லை, ஒருவேளை நாம் எல்லோரும் ஒன்னுக்குள்ள ஒன்னு என்ற தகவல் விரைவில் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

    அதுவரை காத்திருப்போம் (இப்படியே)

    தொடரும் நட்புடன்,

    கோ

    பதிலளிநீக்கு