எப்படி இருக்கும்?
நண்பர்களே,
பலவித முன்னேற்பாடுகள், ஆயத்தங்கள், எதிர்பார்ப்புகளுக்கிடையில் நம் வீட்டிற்கு விருந்தினர் வருகையில் மனம் குதூகல மகிழ்வுடன் நிரம்பி இருக்கும்.
நலம் விசாரித்து, பயண அனுபவங்களைக் கேட்டறிந்து அவர்களை கை குலுக்கியும் , கட்டிப்பிடித்தும், குழந்தைகளுக்கு முத்தமிட்டும் வரவேற்று , உட்காரச்சொல்லி முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து பின்னர் குளிர் பானங்கள் அல்லது தேநீர் போன்றவற்றை கொடுத்து, வந்த நேரத்தைப் பொறுத்து உணவு அல்லது சிற்றுண்டி - பலகாரங்கள் கொடுத்து உபசரிப்போம்.
பின்னர் அவரவர்களுக்கான அறைகளை காட்டி அவர்களது உடமைகளை வைப்பதற்கு உதவி செய்வோம்.
பிறகு பிள்ளைகள் கூடி பேசி மகிழ்வதும், விளையாடி மகிழ்வதுமாக இருக்க பெரியவர்கள் தங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்துகொண்டு பின்னர் தங்கி இருக்கும் நாட்களில் எங்கெங்கே செல்வது என்னென்ன பார்க்க போகிறோம், எதற்கெல்லாம், முன் பதிவு செய்து வைத்திருக்கின்றோம் போன்ற விவரங்களை விவாதித்திப்பார்கள்.
வந்த களைப்பு தீர சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அடுத்தடுத்த சமையல் வேலைகளை வீட்டு பெண்கள் கதை பேசிக்கொண்டே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆண்கள் தங்கள் வேலை, சம்பளம், பென்ஷன் , வீடு கட்டுதல் வயது வந்த பிள்ளைகளின் திருமணம் குறித்து , தங்கள் நண்பர்கள், உறவினர்கள் நலம் குறித்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
இப்படி அந்த முதல் நாள் பெரிதாக எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தே கதை பேசிக்கொண்டு பொழுது போக்குவார்கள்.
இரவு தூங்கும் முன், அடுத்த நாள் எங்கு செல்கிறோம் என்னவெல்லாம் பார்க்கப்போகிறோம், காலை எல்லோரும் எத்தனை மணிக்குள் எழுந்து குளித்து தயாராக இருக்கவேண்டும், எத்தனை மணிக்கு ஏற்பாடுசெய்திருந்த வாகனம் வரும் போன்ற விவரங்கள் அனைவருக்கும் அறிவித்துவிட்டு உறங்கச்செல்வார்கள்.
குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களுக்கும், அவர்களது மனதில் மகிழ்ச்சியும் , பூரிப்பும் நாளை செல்லப்போகும் சுற்றுலா குறித்த இன்ப நினைவுகளும் உறவுகளை நேரில் பார்த்த பரவச மகிழ்வும் பொங்கி வழிவதால் தூக்கம் கண்களை தழுவாமலேயே பொழுது விடிந்துவிட்டிருக்கும்.
காலைப்பயணத்திற்கான உணவு , கட்டு சோறு, தின்பண்டங்கள், தண்ணீர் குடுவைகள், நொறுக்கு தீனிகள், மாற்று உடைகள் , போன்றவற்றை முறையாக எடுத்துவைத்து , ஏற்பாடு செய்திருந்த வாகனத்தின் ஓட்டுனருக்கு தகவல் அனுப்பிவிட்டு காத்திருக்கும் நேரம் பார்த்து........
வந்திருக்கும் விருந்தினர் அல்லது உபசரிக்கும் வீட்டில் உள்ளவர் எவருக்கேனும் உடம்பு சரில்லாமல் போவதும் பயணத்திற்கு ஒத்துழைக்காதபடி உடல் உபாதை, சுகவீனம் ஏற்படுவது, சில நேரம் கடுமையான அல்லது தீவிரமான உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு, மருத்துவமனை அழைத்து செல்லும்படியாகவும் , மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும்படியாகவும் சூழல் அமைந்துவிட்டால் .......
அல்லது, விருந்தினர் அல்லது உபசரிப்பவர்களின் நெருங்கிய உறவினர்களின் இழப்பு சம்பந்தமான செய்தி வருவது உடனே ஊருக்கு திரும்பி செல்லவேண்டிய சூழல் உருவாவது போன்ற துரித மாற்றங்கள் நம்மை ஆட்கொள்ளும்போது எப்படி இருக்கும்?
சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் ஒன்றாக வேலை செய்யும் ஒருவர் விடுமுறையில் இந்தியா செல்ல இருந்ததாகவும் அவரோடு பணிபுரியும் ஒரு வெள்ளைக்கார நண்பரையும் தம்மோடு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை பல மாதங்களுக்கு முன்பே செய்திருந்ததாகவு, தன்னோடு ஒரு வெள்ளைகார நண்பரையும் வீட்டிற்கு அழைத்து வருவதாக முன்கூட்டியே தம் வீட்டில் சொல்லி அதற்கான பிரத்தியேகமான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தாராம்.
பல வருடங்கள் கழித்து ஊருக்கு செல்லும் அவர் தமது குடும்பத்தினருக்காக , பல மாதங்களாக வாங்கி வைத்திருந்த பொருட்கள், சாக்கலேட்டுகள், துணிமணிகள், கை கடிகாரங்கள், விளையாட்டுப்பொருட்கள் , வாசனை திரவியங்கள் போன்றவற்றோடு, இந்தியாவில் கிடைக்காத, தமது வெள்ளை க்கார நண்பரின் தேவைக்காக பிரத்தியேகமாக சில பொருட்களையும் வாங்கி சேமித்து வைத்திருந்தாராம்.
அடுத்த நாள் காலை 8.00 மணிக்கு உள்ளூர் பேருந்து நிறுத்தத்தில் இருவரும் சந்திப்பதாகவும் அங்கிருந்து விமான நிலையம் சென்று பிறகு லண்டன் - சென்னை நேரடி பயணம் செய்து பிறகு சென்னையில் இருந்து தமது சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருந்தனராம்.
ஆனால்..... அந்த பயண நாளின் முன் இரவில் அந்த இந்திய நண்பர் கடும் முதுகுவலிகாரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அதை தொடர்ந்து சுமார் 7 மணிநேரம் முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாகவும், அறுவை சிகிச்சைக்குப்பின் தம் இடுப்பிற்கு கீழே எந்த உணர்வும் இல்லாமால் , விமான பயணத்திற்கு உகந்தவர் இல்லை என்ற மருத்துவ அறிக்கை சொன்னதாகவும் தமது விடுமுறை கனவில் மட்டுமல்லாது, அவரது வெள்ளைக்கார நண்பரின் விடுமுறை கனவிலும் விரிசல் உண்டானதை உணர்ந்து கலங்கினாராம்.
இரவோடு இரவாக தன்மைத்து நண்பருக்கு தகவல் சொல்லப்பட்டு அவரும் தமது செலவுகள் ஏற்பாடுகள் எதிர்பார்ப்புகளை புறம் தள்ளிவிட்டு நண்பரை பார்க்க மருத்துவ மனை வந்து தமது நண்பருக்கு ஒத்தாசையாக இருந்தாராம்.
பயணம் ரத்தானதிற்காக மன்னிப்பு கேட்ட இந்திய நண்பரிடம் அந்த வெள்ளைக்கார நண்பர் சொன்னாராம், கவலைப்படாதே இதேபோல எனக்குகூட ஏற்பட்டிருக்கலாம் .... என பெரிய மனதுடன் அவரது இழப்புகளை பெரிதாக கருத்தவில்லையாம்.
அதேபோல , ஆறுமாதங்களுக்கு முன் திட்டமிட்டு அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்தில் இருக்கும் தமது உடன் பிறந்த சகோதரியை பார்க்கும் பொருட்டும் சுமார் மூன்று வார காலம் இங்கே தங்கி இருந்து இங்கிலாந்தின் பல இடங்களையும் , ஸ்காட்லாந்த்தின் பல இடங்களையும், வேல்ஸில் பல இடங்களையும் பார்த்து மகிழும்படியாகவும் தமது மகளுடன் வந்திருந்த சகோதரி ஒருவர், பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்திறங்கிய இரண்டு நாட்களிலேயே, தமது மகள் கடுமையான சுகவீனம் அடைந்ததாகவும் உடனடியாக அமெரிக்கா திரும்பி செல்லும்படியான சூழல் உருவானதாகவும் அறிந்து மிகவும் மனம் வேதனை அடைந்தது.
அவர்கள் இங்கிலாந்து , ஸ்காட்லாந்து போன்ற இடங்களுக்கான பேருந்து, ரயில் , விடுதி, மற்றும் சுற்றுலா படகு, அருங்காட்சியக கட்டணங்கள், போன்றவற்றிற்கு முழுமையாக செலுத்தி இருந்த பணமும் வீணானதோடு, அவர்களது விடுமுறை கனவு, இன்பச்சுற்றுலா எதிர்பார்ப்பு நீண்ட பயணத்தின் நோக்கம் அனைத்தும் வீணானதை எண்ணி மிகவும் மனவேதனையுடன் திரும்பிச்சென்றனராம்.
இப்படியும் சிலருக்கு சில சமயம் ஏற்படுவதுண்டு.
இதில் சம்பந்தப்பட்டவர்களின் மன நிலை எப்படி இருக்கு?
சிலர் இதை நன்மைக்கே என்றும் கூட சொல்வதுண்டு.
உங்கள் கருத்துக்கள் என்ன?
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக