பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

விடுமுறை -விருந்தினர்

 கொண்டாட்டம்!! 

நண்பர்களே,

சிறுவயதில் , விடுமுறை நாட்களில் அதுவும் குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில் எங்கள் தாத்தா வீட்டிற்கு என் சகோதர  சகோதரிகளுடன்   சென்று  ம் அங்கு வந்திருக்கும் எங்கள் மாமா சித்தி பிள்ளைகளுடன்  மாதம் முழுவதும் இருந்துவிட்டு மீண்டும் எங்கள் வீட்டிற்கு வருவது பிடித்திருந்தது.

அதே போல எங்கள் சித்தி வீட்டிற்கு சென்று சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் தங்கி இருந்துவிட்டு வருவதுவும் எனக்கு பிடித்திருந்தது. 

காலப்போக்கில் விடுமுறை நாட்கள் என்றாலே நம் வீட்டிற்கு வரும் உறவினர்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதும்   அதுவும் குறிப்பாக என் வயதை ஒத்த பிள்ளைகள் இருக்கும் உறவினர்கள் குடும்பத்துடன் வருவதை கூடுதல் மகிழ்ச்சியுடனும் உற்சாக குதூகலத்துடனும் எதிர்நோக்கி காத்திருப்பதும் எனக்கு பெருமகிழ்ச்சியை உள்ளத்திலே  உருவாக்கி இருக்கின்றது.

இந்த தேதியில் இத்தனை மணிக்கு இன்னார் எல்லாம் வருகின்றனர் என்ற செய்தி அறிந்து அந்த நாளுக்காக காத்திருப்பதும் அவர்கள் வந்தால் என்னென்ன செய்யலாம், எங்கெல்லாம் போகலாம், என்னவெல்லாம் சமைக்கலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டிருப்பதை கேட்க்கும்போதே காதுகளில் தேனும் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி பெரு வெள்ளமும் பாயும்.

அவர்கள் தங்குவதற்கு ஏற்ப, கூடுமான வரையில் எல்லா வசதிகளையும் , சில நேரங்களில் புதிய மனைத்துணை பொருட்கள் உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் தலையணைகள் போர்வைகள் என பெற்றோர்கள் வாங்கி வரும்போதும் அவற்றை பார்க்கும்போதும் உள்ளத்தில் ஏற்படும் அந்த உணர்வினை எப்படி வெளிப்படுத்துவது என்றுகூட தெரியாத அந்த  பருவத்தில் , வீட்டில் அப்பா அம்மா சகோதரிகளுக்கு ஒத்தாசையாகவும் சிறு சிறு உதவிகள் செய்தும் வீட்டை தயார் நிலைப்படுத்துவதில் எனது பங்களிப்பையும் அளிப்பதில் மகிழ்ந்திருக்கின்றேன்.

வரும் உறவினர்களுக்கு சாப்பிட  என்ன பிடிக்கும் அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்காது , யார் யார் எந்த அறையில் அல்லது எங்கே படுப்பது போன்ற விவரங்கள்  பேசப்படும்போது  என்னோடு யார் தங்குவது என்ற விவரத்தை சற்று கூடுதல் கவனத்துடன் கேட்பதிலும்  அதில் மாற்றங்கள் வேண்டுமானால் அதை பெற்றோரிடம் சொல்வதிலும், எனக்கான பிரத்தியேகமான சிலவற்றை அவர்களுக்காக விட்டுக்கொடுக்க சொல்லும்போதும் ஏற்படும் உணர்வினை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

வருபவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் , எப்படி பேசவேண்டும், வாக்குவாதமோ பிடிவாதமோ செய்வதை தவிக்கவேண்டும் என்றும் , நமக்கு இல்லை என்றாலும்கூட விருந்தினர்களுக்கு விட்டு கொடுக்கவேண்டும் என்றும் , விருந்தினர்களின் மனம்  புண்படாமல் இருக்கும் விதத்தில் பழகவேண்டும் போன்ற அறிவுரைகளையும் கவனமாக கேட்டு  மனதில் பதித்துவைத்து , அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டிருந்திருக்கின்றேன்.

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்திருந்த காலங்களில், வருகின்ற விருந்தினர்  எல்லோரும் உறவினர்கள்தான், இது உங்க அப்பா வீட்டினர் , இது உங்க அம்மா வீட்டினர், இது பெரியப்பா வீட்டினர் இது அத்தை வீட்டினர் , இது மாமா வீட்டினர் என்று பேதைமை இன்றி எல்லோரும்  நம் உறவினர் என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. 

வீடே திருவிழாபோலத்தான் இருக்கும் , வீடு சுத்தமாகவும் மேசை நாற்காலிகள் இருக்கைகள் , திரை சீலைகள், தரை விரிப்புகள் பூந்தொட்டிகள், விளக்குகள் எல்லாம் புதிதுபோல புடமிடப்பட்டு நேர்த்தியாக காணப்படும்.

சில தின்பண்டங்கள் விருந்தினர் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே தயாரிக்கப்பட்டு பாத்திரங்களில் அடுக்கி வைக்கப்பட்டியிருக்கும்; அதன் மணம் வீடு முழுக்க தவழ்ந்துகொண்டிருக்கும்.

பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையம் சென்று விருந்தினரை அழைத்து வர செல்லும் பெரியவர்களோடு  நானும் வருகிறேன் என்று சொல்லி சென்றிருக்கிறேன்.

அவர்கள் வருவதற்கு சற்று முன்னதாகவே பேருந்து நிலையம், அல்லது ரயில் நிலையம் சென்றதால் வருகின்ற ஒவ்வொரு பேருந்து அல்லது வந்து நிற்கும் ஒவ்வொரு ரயிலில் இருந்து இறங்குபவர்களுள் நம் உறவினர் நம் விருந்தினர் யார் என்பதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, உடன் வந்தவர்கள், இந்த பேருந்து அல்ல இந்த ரயில் அல்ல என சொல்லும்போது ஒரு தற்காலிக ஏமாற்றத்தை உணர்ந்திருக்கிறேன்.

இப்படி எதிர்பார்த்து காத்திருந்த நம் உறவினர்கள் வந்தவுடன், அவர்களை அழைத்துக்கொண்டு வீடு வரும்வரை அவர்கள் என்னிடம் நலம் விசாரித்து என் படிப்பு சம்பந்தமான கேள்விகள் கேட்பதும், நான் என் வயதுடைய அவர்களின் பிள்ளைகளோடு பேசிக்கொண்டு வீடு வருவதும் எனக்கு பி டித்திருந்தது. 

காலம் செல்ல செல்ல, தலைமுறை மாற மாற, கூட்டு குடும்பங்கள் தனித்தனி குடும்பங்களாக வாழ துவங்கி, விடுமுறை நாட்களில் உறவினர் வீட்டிற்கு செல்வதும் உறவினர்கள் நம் வீட்டிற்கு வருவதும்  சமூக பொருளாதார , நடைமுறை காரணங்களை முன்னிட்டு குறைந்து வருவதும் பல உறவிகளுக்கிடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உயர்வு தாழ்வு மனப்பான்மையினாலும்  முற்றிலும் இல்லாமல் போய்விட்ட சூழலும் இங்கே நிலவுவதை பார்க்க முடிகிறது.

சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்  போலவே நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

அதே போல இன்றைக்கு நாமும் ஒரு குடும்பத்தலைவராக நமக்கும் ஒரு குடும்பம்  என்று வாழ்கின்ற சூழலில் நமது உறவுகள் என்று சொல்லப்படுகின்ற யாரேனும் நம் வீட்டிற்கு வந்தால் எப்படி இருக்கும், அவர்கள் நம்மோடு சில நாட்கள் தங்கி இருந்தால் எப்படி இருக்கும் என்று நம்மில் பலரும் நினைக்கத்தோன்றும்; எனினும் அப்போதிருந்த குடும்ப உறவுகள் ,நட்பு, அன்பு, பாசம், பரிவு, கரிசனை போன்ற உணர்வுகளையும் உண்மையான சொந்தங்களையும் இப்போது பார்ப்பது அரிது என்றே நினைக்கின்றேன்.

இதற்கு பல நடைமுறை காரணங்கள் இருக்கும்; எனினும் முன்புபோல மாதக்கணக்கில் அல்லது வார கணக்கில் இல்லை என்றாலும் , குறைந்தது, ஒரு இரண்டு அல்லது மூன்று  நாட்களுக்காவது வந்து தங்கிவிட்டு செல்லும் அளவிற் கேனும் நம் உறவுகள் நண்பர்கள் இந்த பழக்கத்தை தொடரவேண்டும் இந்த விருந்தோம்பல்,   கலாச்சாரம் நம்மிடையே வலுபெறவேண்டும்.

அப்படி செய்யும்போது நமது விடுமுறை காலங்களில் குறிப்பாக நம் பிள்ளைகளில் விடுமுறை காலங்களில்  நமது உறவினர்களை அழைத்து அவர்களோடான நமது உறவை புதிப்பித்துக்கொள்வதும் வலுப்படுத்திக்கொள்வதும் நம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வில் அவர்களுக்கும் நம் சொந்தம் பந்தம்,  உறவுகள் குறித்ததான நல்ல எண்ணங்களும், பக்கபலமும், ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும், அவர்களுக்கிடையிலான உறவு பாலமும் வலுப்படும் வாழ்க்கை கொண்டாட்டமாக அமையும்    என்ற எனது என்ன சிதறல்களை  வெளிப்படுத்தி இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக