எலும்பு உடைப்பு !!!!
நண்பர்களே,
குளிர்காலத்திலும், பனி காலத்திலும் நம்மில் பெரும்பாலானோரை , குறிப்பாக குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு சுகவீனம் மார்புச்சளி.
பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களில் இதனால் ஏற்படும் அசௌகரியம் சளிபிடித்தவர்களுக்கு மட்டுமின்றி உடன் இருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் தொல்லையாக இருக்கும்.
இந்த மார்பு சளி இருப்பவர்களால், சரியாக மூச்சுவிடமுடியாது, தூங்க முடியாது, பேசமுடியாது, ஒவ்வொருமுறை மூச்சு இழுக்கும் போதும் விடும்போதும் ஒருவிதமான "கொர் ... ,கொர்" என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் .. அப்போது ஏற்படும் வலியைவிட சங்கடமும் வேதனையும் மிகுமையாக இருக்கும்.
எந்த தைலத்தை தடவினாலும் வெந்நீர் குடித்தாலும் இந்த நிலை சரியாகாத பட்சத்தில் எவர் எதை கூறினாலும் அதி நற்போதனையாக எடுத்துக்கொண்டு , அந்த அறிவுரைப்படி செய்துபார்ப்பார்கள்.
அப்படி செய்தும் குணமாகவில்லை என்றால், அந்த சுகவீனத்தை போக்கும் வகையில் பலவிதமான நாட்டு மருந்துகள், கை வைத்தியம், பச்சிலை மூலிகை வைத்தியம் செய்து தங்களை குணப்படுத்திக்கொள்ள முயல்வார்கள்.
அதனைப்படியில், சுக்கு, மிளகு, சீரகம், கடுக்காய், ஜாதிக்காய், நெல்லிக்காய்,
தான்றிக்காய் போன்ற இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு உருவாக்கிய ரசம், கசாயம் போன்றவற்றையும், கற்பூர வள்ளி போன்ற செடிகளின் இலைச்சாற்றையும் பருகி பார்ப்பார்கள்.
ஒவ்வொருவரின் உடல்வாகு, பித்தம், கபம் போன்றவற்றின் அளவு, தன்மை, வீரியத்தை பொறுத்து சிலருக்கு சரியாகிவிடும்.
ஆனால் இவற்றால் எல்லோருக்கும் சரியாகிவிடும் என்றும் சொல்லமுடியாது.
அசைவ உணவு உட்கொள்பவர்களாக இருந்தால்,. அவர்கள் மாற்று வழிமுறைகளை கடைபிடிப்பார்கள்.
அதாவது , மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி போன்றவற்றை அளவுடன் சேர்த்து கோழி கறியை எலும்புடன் சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள், தணியாதூள், சீரக தூள், பட்டை, ஏலகாய், லவங்கம், மிளகு போன்றவற்றை இட்டு தாராளமாக நீரூற்றி நன்றாக கொதிக்கவைத்து சூப்பு செய்து சில நாட்களுக்கு பருகி வருவார்கள்.
இந்த அனுகுமுறை சிலருக்கு நல்ல பலனை கொடுக்கலாம்.
இப்படியும் சரியாகாதவர்கள், ஆட்டிறைச்சி கடைக்கு சென்று கடைக்காரரிடம் பிரத்தியேகமாக கேட்டு வாங்கிவரும் ஆட்டிறைச்சியின் ஒரு அதிசய பாகம் தான் வெள்ளாட்டின் "மார்கண்டம்" என அழைக்கப்படும் ஆட்டின் நெஞ்சு எலும்பு.
நுரை ஈரல், கல்லீரல், இதயம் போன்ற பிரத்தியேக உறுப்புகளை பாதுகாப்பாக சுற்றி ஒரு கடினமான தடுப்பு அரணாக படைக்கப்பட்டிருக்கும் பாகம்தான் இந்த நெஞ்சாங்கூடு என சொல்லப்படும் மார்பு கூட்டின் சதைமூடிய விலா எலும்புகள்.
குறிப்பாக ஆட்டின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு சிறப்புக்குரியவையாக கருதப்படுகின்றன
அவ்வகையில், இந்த விலா எலும்புகள் என்று சொல்லப்படும் மார்கண்ட எலும்புகள் குளிர், பனி காலத்தில் ஏற்படும் இரும்பல், சளி, மார்புச்சளி, போன்றவற்றை போக்கும் அருமருந்தாக காலாகாலமாக நம்பப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த விலாஎலும்புகளை சுற்றி சிறிதளவு தசைப்பகுதியும் ஒட்டி இருக்கும்.
இவற்றை தேவையான அளவில் கடைக்காரர் வெட்டி கொடுத்துவிடுவார், எனினும் இதனை வீட்டிற்கு கொண்டுவந்து இரண்டு அல்லது மூன்றுமுறை நல்ல தண்ணீரில் கழுவி, நீரை வடித்துவிட்டு உரலில் அல்லது அம்மியில் வைத்து லேசாக தட்டி - அதாவது அந்த எலும்புகளை பக்குவமாக உடைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்த பிறகு அதில் சிறிதளவு பட்டை இலவங்கம், ஏலக்காய் , சீரகம் போட்டு அவை பொரிந்தப் பின்னர்,சற்று தாராளமாக கருவேப்பிலை போட்டு, நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை தாராளமாக போட்டு சற்று நேரம் அந்த எண்ணையில் வதக்குவார்கள்.
பிறகு கழுவி இடித்து உடைத்து வைத்திருக்கும் மார்கண்டம் எலும்புகளை சேர்த்து அதனுடன், சிறிதளவு மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தணியாதூள், சீரகத்தூள் , இடித்துவைத்த இஞ்சி, இடித்துவைத்த பூண்டு, போன்றவற்றை இட்டு , போடப்பட்ட பொருட்களின் பச்சை வாசனை போகும் மட்டும் இளந்தீயில் வனக்குவார்கள்.
கறி குழம்பிற்கு வழக்கமாக சேர்க்கு நீரின் அளவைவிட சற்று கூடுதலாக தண்ணீர் ஊற்றி உடைக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் அந்த மார்கண்ட எலும்புகளை நன்றாக வேகவைப்பார்கள்.
இப்போது அதனுடன் நன்றாக பழுத்த - நறுக்கப்பட்ட தக்காளி சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மூடிபோட்டு மீண்டும் நன்றாக வேகவைப்பார்கள்.
இப்போது அந்த மார்கண்ட எலும்பிலிருக்கும் சாறு முழுவதும் அந்த குழம்பில் இறங்கி சமையல் அறை மட்டுமின்றி அந்த வீடு முழுவதுமே ஒருவித உற்சாக நறுமணம் பரவத்தொடங்கும்.
இப்படி இந்த நறுமணம் அந்த தெரு முழுக்க பரவி பரவசத்தை ஏற்படுத்தாமல் இருக்க வீட்டின் கதவுகளை இழுத்து மூடும் சூழ் நிலைகூட உருவாகலாம்.
இப்போது அந்த பாத்திரத்தின் மூடியை திறந்து நன்றாக கலக்கிவிட்டு, உப்பு காரம் போன்றவற்றை சரி பார்த்துவிட்டு, இப்போது, ஊறவைத்து அம்மியில் அரைத்து வைக்கப்பட்டிருக்கும் மிளகு சாந்தை கொதிக்கும் அந்த பாத்திரத்தில் சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து கழுவி சுத்தம் செய்யப்பட்டிருக்கும் கொத்தமல்லி தழைகளை நறுக்கி அந்த மார்கண்ட எலும்பு கொதிக்கும் பாத்திரத்தில் தூவி மீண்டும் பாத்திரத்தை மூடி அடுப்பிலிருந்து இறக்கி வைப்பார்கள்.
பிறகு, குழைய வேகவைத்த சுடச்சுட சோற்றில் சுடச்சுட இருக்கும் அந்த மார்கண்ட எலும்பு சூப்பை தாராளமாக ஊற்றி, கையும் வாயும் பொறுத்துக்கொள்ளக்கூடிய பதமான சூட்டில் பிசைந்து சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, ஓயாமல் தொல்லை கொடுத்து கொண்டிருந்த அந்த மார்புச்சளி சிறிது சிறிதாக நீங்கி குணமாவதை உணரமுடியும்.
குழந்தைகளுக்கும் அவர்களின் வயதை பொறுத்து சிறிதளவு வெறும் சூப்பாகவோ அல்லது சாதத்தில் பிசைந்தும் கொடுக்கலாம்.
இப்படி ஓரிரு வேளை இந்த உடைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மார்கண்ட எலும்பின் சூப்பை சாப்பிட்டு வந்தால் இந்த மார்புச்சளி இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிடும் என்று தன் பாட்டி சொன்னதும், தன் அம்மா அதை தனக்கு செய்து கொடுத்ததும் உடனே தனக்கிருந்த மார்புச்சளி தன்னை விட்டகன்றதையும் சமீபத்தில் என் நண்பர் ஒருவர் கூறினார்.
இன்னும் சில மாதங்களில் குளிர்காலம் நமக்கு குடைபிடிக்க தயாராக இருக்கும் சூழலில் இந்த குறிப்புகள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக