பின்பற்றுபவர்கள்

புதன், 8 ஜூலை, 2026

பசுமாடும் தென்னை மரமும்!

திருமண  வாழ்த்துகள்!  

நண்பர்களே,

நம்முடைய இந்திய திருமண வைபோகங்களின் சம்பிரதாய பாரம்பரிய மரபுகள் பல இருக்கின்றன.

அதிலும் நம் தமிழ் நாட்டின் பாரம்பரியமான திருமண விழாக்களில், மனமக்களோடு , குத்துவிளக்குகள் ,மாவிலை தோரணங்கள், குலை தள்ளிய வாழை மரங்கள், தென்னங்குலைகள், பனங்குலைகள் பாக்கு குலைகள், ஈச்சங்குலைகள், தேங்காய் , வெற்றிலை , பாக்கு, மஞ்சள் சந்தனம்,பன்னீர், வாழைப்பழங்கள், இனிப்புகள் , நாதஸ்வரம் , தவில் வாத்தியம் , மஞ்சள் கயிறு- மங்கள நாண்   போன்று இன்னும் பலவிதமான அம்சங்கள் நிறைந்திருக்கும்.

இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பும் முக்கியத்துவமும் இருப்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை, நமக்கு வழி  வழியாக அறிமுகப்படுத்தி அறிவுறுத்தி கடைப்பிடிக்கச்செய்கின்றனர்.

இவை அனைத்தும்  பல   அர்த்தமுள்ள செய்திகளை   நமக்கு சொல்வதாக அறிகிறோம்.

குறிப்பாக நாதஸ்வரம்  தவில் வாத்திய இசை அந்த திருமண இடத்தை மங்களகரமான, மகிழ்ச்சியான, மனம் குதூகலிக்கும் வகையில் மாற்றி அமைக்கும்.

திருமண சடங்குகலின் முக்கிய அம்சமாக மணமகன் , மணமகளின் கழுத்தில் மஞ்சள் கயிற்று தாலியை கட்டும்போது, திருமணத்தை நடத்திவைக்கும் பெரியவர்,"கெட்டி மேளம், கெட்டி மேளம்" என்று சொல்ல, அங்கே இருக்கும் நாதஸ்வர வித்வானும் தவில் இசை கலைஞரும் தங்கள் முழுப்பலம்  கொண்டு அழகாக அருமையாக தொடர்ந்து சில நிமிடங்களுக்கு வாசித்துகொண்டே இருப்பார்கள்.

அதுவரை சாதாரண ஒலி அளவையில் வாசித்துக்கொண்டிருந்தவர்கள், தாலி கட்டும்போது மட்டும் ஏன் அத்தனை சத்தமாக வாசிக்கின்றனர்? அதுவும் அதை ஏன் "கெட்டி மேளம்" என்று அழைக்கின்றனர்?

இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

இதுகுறித்து சில பதிவுகளில் வாசிக்கும்போது ஒரு செய்தி புலப்பட்டது அது எனக்கும்  ஏற்புடையதாகவே  இருந்தது.

அதாவது, ஆயிரம் காலத்து பயிர் என்று சிறப்பு உவமையால் அழைக்கப்படும் திருமணங்களின்போது, மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் மங்களகாரமான வாழ்த்துக்கள் நிரம்பி வழியவேண்டிய அந்த இடத்தில் தவறியும் யாரும் எந்த ஒரு அமங்கல்யமான வார்த்தை சொல்லிவிடக்கூடாது எனவும் அப்படியே எவரேனும் அபசகுனமாக சொல்ல நேர்ந்தால் அது மணமக்களின் காதுகளுக்கு போய்விடக்கூடாது என்பதற்காகவும்;

இந்த பிரபஞ்சம் நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கவனிப்பதாகவும், ஒரு சொல் வெல்லும், ஒருசொல் கொல்லும் என்பதற்கேற்ப அவச்சொற்களும் அமங்கல்யமான வார்த்தைகளும் அந்த மங்கள் மகிழ்சி விழாவின்போது  திருமணம் நடந்துகொண்டிருக்கும் அந்த வளாகத்தில் ஒலி க்கக்கூடாது, அப்படியே ஒலித்தாலும் அது இந்த மங்கள வாத்திய இசை முழக்கத்தில் முடங்கி மேலெழும்பாமல் முடக்கப்பட்ட வேண்டும் என்பதற்காக அத்தகைய கெட்டி மேளம் முழங்குவதாக சொல்லப்படுவது எனக்கு ஏற்புடையதாகவே இருக்கிறது.

அவ்வகையில், மணமக்களை வாழ்த்தும்படியும் திருமணத்தை முன்னின்று நடத்தி தருவதற்காக அழைக்கப்பட்டவர்களும் தங்களின் வாழ்த்து செய்தியில் பிரயோகிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் கவனமாக கையாண்டு மங்களம் அல்லாத ஒரு வார்த்தையைக்கூட சொல்லமாட்டார்கள்.

மேலும் திருமண வீட்டில் மணமக்களுக்கும்   அவர்தம் பெற்றோருக்கும் வந்திருக்கும் உறவினர்களுக்கும் மன மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் தரும் வார்த்தைகளடங்கிய வாழ்த்து செய்திகளை மட்டுமே  சொல்வார்கள்.

அங்கே திருமணத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத பொது விஷயங்கள்,. நாட்டு நடப்புகள், தங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் இடையிலிருக்கும் மோதல்கள் குறித்து, காழ்ப்புணர்வுகள் குறித்து, அமங்கல்யமான வார்த்தை பிரயோகங்கள் கொண்டு, ஒழிந்து விடும் , கலைந்துவிடும், தழைக்க விடமாட்டோம் , துளிர்க்க  விடமாட்டோம் ,தளிர்க்க  விடமாட்டோம், கலைத்துவிடுவோம் சில நாட்களில், சில வாரங்களில், சில மாதங்களில் கலைந்துவிடும் போன்ற வார்த்தைகளால் மங்கள நிகழ்விற்கு சற்றும் பொருத்தமில்லாத வார்த்தைகளையும் செய்திகளையும் மணமக்கள் கேட்க்கும்படி மேடையில் முதன்மையான சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்கள் சொல்லி இறுதியில் மணமக்கள் பல்லாண்டு  வாழ்க என கூறி முடிப்பது கொஞ்சம் கூட ஏற்புடையதாக  இருக்காது.

இதுபோன்று சம்பந்தமே இல்லாமல் தமது முழு பேச்சையும் வந்திருக்கும் நிகழ்ச்சி என்ன என்பதை அறியாதவர்கள்போல் ஏதேதோ  பேசிவிட்டு இறுதியில் சம்பிரதாயத்திற்கு மணமக்களை ஓரிரு வார்த்தைகள் சொல்லி வாழ்த்திச் செல்லும் ஒரு நிகழ்ச்சியை காண நேர்ந்த எனது மனதில் நிழலாடிய ஒரு பழைய குட்டிக்கதை நினைவிற்கு வந்தது.

அது என்ன ?

பிறகு பார்க்கலாம்.

அதுவரை நன்றி 

வணக்கம்,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக