பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஆகஸ்ட், 2023

நிலா! நிலா!! ஓடிவா!!!

 நண்பர்களே,


பல காலம் கழித்து மீண்டும் தங்கள் எல்லோரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி.

புதுப்பிக்கும் உறவு இந்த  முழு சந்திர தினத்தன்று அமைந்ததும் அது தொடர்பான தலைப்போடு உங்கள் அனைவரையும் சந்திப்பதும் உள்ளபடியே உள்ளம் உவகைக்கொள்ளும் ஒரு மனநிறைவான நாளாக கருதுகிறேன். 

அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

தொடருவோம் வாய்ப்புகள் வாய்க்கும்போதெல்லாம்.


நில்லாமல் ஓடிவா !


"உலகோர் என்னை 
இத்தனை நாட்களாக
ஏமாற்றிவந்துள்ளனர்
பரவாயில்லை அவர்கள்
உலகைச் சார்ந்தவர்கள் 
அப்படித்தான் இருப்பார்கள்  - அது
மாற்றமுடியாத  இந்த 
மண்ணின்  மரபணு மாற்றம்.

இந்த உலகின் சகவாசமோ 
சுகவாசமோ ஏதும் வேண்டாம் என்று 
ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் 
ஆளரவம் பெரிதாய் ஏதுமின்றி 
ஆகாயத்தில்  வாழும் நீயுமா ?

பாதி முகத்தை மட்டுமே 
பல காலம் காட்டி காட்டி உன்னை 
முழு மதியென  முகவரி சொல்லிவந்தாய்;
ஆதிமுதல் நேற்றுவரை நானும் 
அப்படியே  நம்பிவந்தேன்.

சமீபத்து சந்திர யான் 
சிந்திய சமிக்ஞ்சை செய்தித்  துளி  
நீ அப்படி ல்ல. 
உன் முகத்தின் மறுபாதியை 
எப்போதும் காட்டியதில்லை என 
ஏகோபித்து சொல்லும்போது 
ஏனோ கோபித்துக்கொண்டேன் 
இமைப்பொழுதில் 
இடிந்தும்போனேன் .
ஏன் இப்படி செய்தாய்?  
என் இதயத்தில் ஈட்டி
 ஏன் எய்தாய்?.

உண்மையை சொல் 
அப்படியானால் நீ  
முழுமதி இல்லையா ? -என்னால் 
முழுமையாய் நம்ப முடியவில்லை.
வளர்வதாய்  தேய்வதாய் 
காட்டுவதெல்லாம் - உன் 
பாதி முகத்தில்  தானா?

மண்டியிட்டு கேட்கிறேன் 
ஒரே ஒருமுறை தயவாக 
எனக்கு மட்டும் உன்  
முழுமுகத்தையும்  காட்டிவிடு 
கண்டிப்பாக சொல்கிறேன் 
பிறகுன்னை ஒருபோதும் 
சந்தேகிக்க மாட்டேன் - நேரில் 
சந்திக்க முயல்வதை 
விட்டுவிடவும் மாட்டேன்.

எப்படியும் ஒருநாள் 
மேலே(??) செல்லும்போது 
உன்னைத்  தாண்டித்தானே 
செல்லவேண்டும் 
அப்போது கண்டிப்பாக 
உன்னை நேரில் சந்திக்க 
விண்ணைத்தாண்டி வரும் 
சந்தர்ப்பம்  கிடைக்காமலா போகும்?

அதற்குமுன்....
உன் முழு முகம் காட்ட 
வருவாயா -
இந்த செய்தி கிடைத்ததும் 
நில்லாமல் ஓடி வருவாயா?

அல்லது சந்திரயான்  மூலமேனும்  
உன் முழு புகைபடமொன்றை  
கொடுத்து  அனுப்புவாயா?
காத்திருக்கிறேன் 
களங்கமில்லா உன் 
முழுமுகத்தை களிப்புடனே 
கண்டு மகிழ.

ரஷியா, அமெரிக்கா,
சைனா, ஜப்பான் என
வல்லரசுகள்  
வரிசைகட்டி உன்னைக் 
கலங்கடித்தாலும் 

உன்  மீது 
நல்லரசு(கோ) எனக்கிருக்கும் 
களங்கமில்லா அபிமானம் 
உனக்கிந்த செய்தி அனுப்ப 
உந்தி தள்ளுகிறது.

இவன் என்ன 
என் மாமன் மகனா - இல்லை 
அத்தை மகனா?
எந்த உரிமையில் 
இத்தனையும் ?

அல்லது 

நான் என்ன 
அரிசிக்குத்தும் 
அக்கா மகளா ? பல் 
வரிசைகாட்டி 
வழிந்துருக 
என தயவாக 
எண்ண  வேண்டாம்.

விட்ட குறை 
தொட்ட  குறைபோல 
இந்த வட்ட நிலவொளி
என் மீது பட்ட( து) 
குறையாக(குறைவாக) இருக்குமோ?
முழுமையாய் பட்டால் 
நிறைவாக இனிக்குமோ ?
யாரறிவாரோ?

எழுதியிருப்பது என்னவென்று 
புரியாவிட்டால் 
அங்கே, சிவ சக்தி மாநிலம்  
அப்துல்கலாம் மாவட்டம் 
வீர  முத்துவேல் வட்டம் 
இரண்டாவது வார்டு  
மூன்றாவது குறுக்கு தெருவில் 
நான்காவது மாமர    நிழலில் 
வடை சுட்டுக்கொண்டிருக்கும்   
நடை தளர்ந்த எங்கள்
பாட்டியிடம் கேட்டுப்பார்
நாசுக்காக என் மனதை 
நயமுடனே எடுத்துரைப்பார். 

சொல்ல மறந்துவிட்டேன்: 
உன் ஒருபக்க  முகத்தில்
சில கருவட்டங்கள் - என் 
கண்ணில் படுகிறதே!

பாட்டி அருகே இருக்க 
வைத்தியம் கொள்ளாமல்  இருப்பது 
நீ என்ன பைத்தியமோ என 
விந்தைகொள்ள   செய்கிறது.

உடனே அனுகு  அவரை 
நான் சொன்னதாக சொல் 
தேன்  புனுகு  களிம்பிட
உன் முகத்தில் புதுப்பொலிவு
தளும்பிட!!"
 
நன்றி!! 

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.

நிலா கவிதை குறித்த தங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

8 கருத்துகள்:

  1. ரசித்து வாசித்தேன் கோ!

    இனி நிலா நிலா ஓடிவான்னு சொல்ல வேண்டாம், எல்லாம் நாங்க அங்க வந்து பார்த்துக்கறோம்னு சொல்லிடலாம்!!!!!!!!!!! ஹாஹாஹாஹா

    கடைசி வரை ரசித்து வாசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே
    இன்றைய நிலைப்பாட்டை கவிதையில் சொல்லிய விதம் அழகு.

    தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  3. மிக நன்று. காலந்தோறும் காதலர்கள் நிலாவைத்தான் தூது அனுப்பி தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதோ இன்று இந்த கவிஞன் அந்த நிலாவுக்கே காதல் கடிதம் எழுதியுள்ளான். நெடு நாட்களாக அறிந்தவர்களாதலால் காதல் மொழி குறைந்து நலம் விரும்பி யாக காதல் மொழியை சூசகமாக பகர்ந்துள்ளான்.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ஐயாவிற்கு அனேக நமஸ்காரங்கள்.

      வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  5. ஆஹா நிலவுக்கே கோ வின் கடிதம். அ
    அருமை. அது என்ன அரிசி குத்தும் அக்கா மகள் இப்பவெல்லாம் யார் அரிசி குத்தராங்க,,,,, உங்க அக்கா மக குத்த ஹாஹாஹா அக்கா மகளுக்கு மருத்துவம் வேற நடக்கட்டும் நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு  மிக்க நன்றி பேராசிரியரே.குத்தரிசி உணவு பழக்கம் போனதால்தான் பல உடல் சம்பந்தமான உபாதைகள் வருகின்றனவாம் , எப்படியேனும் அக்கா மகள்கள் மீண்டும் இந்த வழக்கத்திற்கு  வருவார்களா  பார்ப்போம்.பாட்டி வைத்தியம் பக்க விளைவுகள் ஏற்படுத்தாது என்பதால் இந்த பரிந்துரை.வருகைக்கு மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு