Followers

Thursday, March 14, 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!-2

பன்னாட்டு  ஆதரவுடன்!!
நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க..சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!-1

"தி கேர் பிரீ பேர்ட்ஸ் "  அதாங்க... "உல்லாச பறவைகள்" எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற இசைஞானி இளைய ராஜாவின் இசையமைப்பில் உருவான " ஜெர்மனியின் செந்தேன் மலரே" என பாட ஆரம்பித்தவர் அடுத்த வரிக்கு செல்லாமல் கொஞ்சம் நிறுத்தினார்.

எப்படியும் எங்கள் நண்பன் பரிசுபெறுவான் என்று நினைத்திருந்த எங்கள் எல்லோர் மனதிலும் ஒரே பரபரப்பு.. ஏன் நிறுத்தினார்  என்ன ஆனது.. அடுத்தவரியை மறந்துவிட்டாரா? இப்படி நாங்கள் பதைபதைக்கும் வேளையில் அடுத்தவரியை ஆரம்பித்தார்.

ஒருபக்கம் பெரு மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் கொஞ்சம் நிலை தடுமாற்றமாக இருந்தது.

கொடுக்கப்பட்ட ஆறு  நிமிடங்களில் உலகின் ஐந்து கண்டங்களில் இருக்கும் சுமார் நூற்றி தொண்ணூறு நாடுகளின் ஒவ்வொரு பெயரையும் சொல்லி செந்தேன் மலரே..  செந்தேன் மலரே.....   உதாரணத்திற்கு.. அமெரிக்காவின் செந்தேன் மலரே, ரஷியாவின் செந்தேன் மலரே., இங்கிலாந்தின் செந்தேன் மலரே...  என  பாட்டின் முதல் வரியை மட்டும் திரும்ப திரும்ப பாடி தனது "சர்ஜரியை" முடிக்க அரங்கம் நிறைந்த கர கோஷம்.

எங்களை பொறுத்தவரை பார்த்தசாரதியின் வெற்றி அறுதி இட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

எனினும் இன்னும் இரண்டு  பேர்கள் உள்ளனரே, அவர்களும் மேடையேறி இறங்கினால்தானே   இறுதி முடிவு தெரியும்.

அடுத்து வருபவரின் பெயர் கல்லூரி வட்டாரத்தில் அப்போதே பிரபலம். 

அருமையாக பாடுவார்..அனைவரையும் கட்டிப்போடும் அளவிற்கும்  வக்கணையாக பேசி மயக்கும் வாய்ச்சாலாக்கு மிகுந்தவர்.

தெரியாத விஷயங்களைக்கூட, யாருக்கும் சந்தேகம் வராதபடி , முழுமையாக தெரிந்ததுபோல் பாவலா காட்டுவார்.

மத்திய உணவு இடைவேளையின்போது கல்லூரி வளாகத்திலுள்ள ஆலமரத்தின் அடியில் அமர்ந்து அவர் பாட, அதை கேட்க அப்போதே ஒரு பெருங்கூட்டத்தை தன்வச படுத்தியிருந்தார்.

குறிப்பாக  பக்தி பாடல்களை அவர்  கண்களை மூடி பாட ஆரம்பித்தால்..... பாடல் முடியும் வரை கண்களை திறக்கமாட்டார், எனினும் நாங்கள் யாரும் எழுந்து போக மாட்டோம். அத்தனை இனிமையாக பாடுவார்.

ஆங்கில திரைப்படங்களை பார்த்துவிட்டு அந்த கதைகளை எங்களுக்கு அவரின் கற்பனையையும் கலந்து மெருகூட்டி சுவைபட சொல்வதில் வல்லவர்.

அவரின் விசும்பல்கள்கூட குசும்பல்களாக மிளிரும்.

வகுப்பு நேரத்தில் அவரின் குறும்பு கமெண்ட்டுகள் அவரை அறிந்த எங்களுக்கே முழுமையாக புரியும்.

அவர் பெயர் என்ன அவர் மேடையில் போட்டியன்று என்ன செய்தார்?

கதை சொன்னாரா?.. பாடினாரா?... 

நாளை கேட்போம்.

அதுவரை.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

2 comments:

 1. அவரின் விசும்பல்கள்கூட குசும்பல்களாக மிளிரும்.//

  ஹா ஹா ஹா ஹா ஹா

  இவர் யாரென்று எங்களுக்குத் தெரிந்துவிட்டதே!!!

  அமெரிக்காவின் மேற்குக்கரையோரம் இருக்கும் விசுவாசத்தின் சகவாசம் தானே!!! அப்படினா அவருக்குத்தான் பரிசு கிடைத்திருக்கும் இதிலென்ன சந்தேகம்!!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கினிய நண்பர்களே,
   தங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும்மிக்க நன்றிகள்.
   என் மீதுள்ள தங்களின் விசுவாசத்திற்கு மிகவும் தலை வணங்குகிறேன்.
   தொடர்பில் தொடர்ந்து காத்திருங்கள்.
   பார்க்கலாம் பொறுத்திருந்து.
   கோ

   Delete