பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 ஜனவரி, 2019

மாடுகளுக்கு மட்டும்தானா?

நண்பனுக்கும்தான்... 

நண்பர்களே,

வருடத்திற்கு ஒருநாள் உழவுக்கு துணைபுரியும் மாடுகளுக்கும் மற்ற கால் நடைகளுக்கும் சிறப்பு நன்றி படையல் செய்து அன்று ஒருநாள் அவைகளுக்கு  தீபாராதனை காட்டி வணங்கி மகிழ்கின்றோம்.

கடுமையான உழைப்பினை உழவனுக்கு அளித்து உழவனின் பாரத்தை தானும் சுமந்து அவனுக்கு துணைபுரிந்து,களத்து மேட்டில் தானியங்கள் மலையென குவிக்க வைக்க ,அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும் வரை உழவனின் உற்ற துணையாக இருக்கும் இந்த மாடுகளுக்கு கண்டிப்பாக நாம் செய்யவேண்டிய நன்றிக்கடனை வெளிப்படுத்தும் நாள்தான்  இந்த மாட்டுப்பொங்கல்.

நன்னீரில் குளிப்பாட்டி,கொம்புகளையும் குளம்புகளையும் தீட்டி சுரசுரப்புகளை நீக்கி வழவழுப்பாக்கி,கொம்புகளுக்கு வர்ணம் பூசி, உடலெங்கிலும் , மஞ்சள் குங்குமம், சந்தானம் பூசி , புதிய கயிறுகள், வெண்கல மணி எல்லாம் கட்டி , தீபாராதனை செய்து ஆரத்தி எடுத்து வணங்கி, அவற்றிற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு உணவளித்து அன்று முழுவதும் எந்த வேலையும் வாங்காமல் அவற்றை அன்போடும் கரிசனையோடும் நடத்தும் ஒரு அழகிய விழாதான் இந்த மாட்டுப்பொங்கல்.


Image result for maattupongal

கடின உழைப்பாளியை பார்க்கும் போது, "என்னமா இவர் உழைக்கிறார்" என்று சொல்பவர்கள் , ஒரு படி மேலே போய்,  "மாடு மாதிரி உழைக்கிறார்" என்று சொல்வதை கேட்டு இருகின்றோம்.

அவ்வகையில் கடினமாக - மாடுபோல உழைக்கும் மனிதர்களுக்குக்கூட இந்த பொங்கல் அன்று மரியாதை செய்வது ஏற்புடையதாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்த வரிசையில் என் இனிய நண்பர் ஒருவர்,தனது இரண்டு கைகளில் கைக்கொன்றாக சுமார் 70 லிட்டர் (மொத்தம் 140 லிட்டர்)கொண்ட "பத நீரை"  தனி ஒருவராக சுமந்து தனது தோப்பிலிருந்து பேருந்து  நிறுத்தம் வரை சென்று , அவற்றை பேருந்திற்கு மேலே ஏறி வைத்துவிட்டு இறங்குவார்.

பின்னர் அங்கிருந்து சுமார் 30 கிலோ  மீட்டர் தூரத்தில் இருக்கும் வேறொரு ஊர்வரை பயணம் செய்து மீண்டும் பேருந்தில் ஏறி அந்த இரண்டு 70 லிட்டர் கேன்களை இறக்கி அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை எங்கும் நிற்காமல் அவற்றை கைகளாலேயே சுமந்து சென்று கடையில் கொடுத்துவிட்டு மாலையில் காலி கேன்களுடன் வீடு திரும்புவார்.

இப்படியாக வருடம் முழுவதும் ,"காந்தி ஜெயந்தி நாள் தவிர்த்து " எல்லா நாட்களிலும் கடினமாக உழைத்தவர், இன்னமும் வேறு பாரங்களை சுமந்து உழைத்துக்கொண்டிருப்பவர்.

ஒவ்வொரு வருடமும் இந்த மாட்டு பொங்கல் அன்று அவரை நான் பிரத்தியேகமாக நினைப்பதற்கு அவரின் மாடுபோன்ற உழைப்பு மட்டும் தான் காரணமா அல்லது அவர் இந்த மாட்டு பொங்கல் அன்றுதான் அதாவது வருடத்திற்கு ஒருமுறைதான் நன்னீரில் குளித்து நறுமண தைலம் பூசி புத்தாடை உடுத்தி  குதூகலிப்பார் என்று நண்பர்கள் வட்டாரத்தில் அவரை கிண்டல் செய்வோமே  அந்த  காரணமும் இருப்பதாலா?

கதிரறுத்து கரும்பு வெட்டி, புதுப்பானை   பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி படைக்கின்றோம், கால் நடைகளுக்கு மகுடம் சூட்டி  நன்றி படைக்கின்றோம், கடினமாக உழைத்து வியர்வை சிந்தி கழனியிலிருந்து நமது வாய்வழி வயிறு நிறைக்கும்படி  உணவுப்பொருட்களை கொண்டு வந்து படி அளக்கும்  உழவனுக்கு தீபாராதனை காட்டி அவனை வணங்கி மகிழ்வதும்  இந்த விழா காலங்களில்  செய்யவேண்டிய  ஒரு கட்டாய நன்றிக்கடன்.

மாடுகளைப்போல அல்லது என் நண்பனைப்போல மாடுகளைவிடவும் கடினமாக உழைக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இந்த பதிவு அர்ப்பணம்.

இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக