பின்பற்றுபவர்கள்

வியாழன், 28 ஜூலை, 2016

பாவம் அந்த பச்சப்புள்ள.

டா- டா- பாய் பாய்!!

நண்பர்களே,

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும்  ஆண், பெண்,வயது,  மொழி, கல்வி, பொருளாதாரம், நாடு போன்ற எந்த பாகுபாடும்மின்றி பரவலாக சொல்லும் ஒரு வார்த்தை "டா-டா".

இந்த ஒரு வார்த்தை ஒரு உலக பொதுமொழியாகவே மாறிவிட்டது என்றும் சொல்லலாம்.

இந்த வார்த்தையின் வரலாற்றை ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள் இந்த வார்த்தை நடைமுறைக்கு வந்தது 1837 ஆம் வருடம் என்றும் முதன் முதலில் பிரிட்டிஷ் காரர்களே இதனை பயன்படுத்தினர் என்றும்.

அப்படித்தான் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியம்  சொல்கிறதாம்.

பொதுவாக நண்பர்களை, உறவினர்களை, தெரிந்தவர்களை   பார்த்து பேசிவிட்டு அவர்களிடமிருந்து  விடைபெற்று போகும்போது சொல்லும் வார்த்தையாக இந்த வார்த்தை பயன்படுகின்றது.

ஆனால் இந்த வார்த்தை நர்சரி குழந்தைகள் கூடி விளையாடிவிட்டு  தத்தம் வீடுகளுக்கு செல்வதற்குமுன் மழலையாக சொல்லப்பட்ட வார்த்தையே இந்த டா-டா என்று ஆராய்ச்சி குறிப்புகள் சொல்கின்றனவாம்.

நாளடைவில்  இந்த வார்த்தைகளை ,பதிவின் முதல் பத்தியில் சொன்னதுபோல்   வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

விளையாட்டாக பெரியவர்கள் சொல்லஆரம்பித்தது இன்று, இது ஒரு முக்கியமாக / கட்டாயமாக சொல்லும் ஒரு வார்த்தையாக நிலை  பெற்றுவிட்டது.

சரி இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன.

மழலையான அர்த்தம் நான் போகிறேன், அல்லது போய்ட்டுவா என்பதுவே.

பிரென்ச் மொழியில் "டா" என்றால் "பிறகு பார்க்கலாம் என்று பொருள்" , ஒருவேளை இதையே ஆங்கிலேயர்கள் இன்னும் கூடுதலாக ஒரு "டா" வை   சேர்த்து "டாடா" என சொல்ல ஆரம்பித்த்திருப்பார்கள் எனும் கருத்தும்  நிலவுகின்றது.

சரி இதைப்பற்றி இப்போது சொல்லவேண்டிய காரணமா என்ன?

நேற்று பேருந்தில் ஒரு இரண்டு  அல்லது மூன்று வயது குழந்தை பேருந்தில் இருந்து இறங்குவதற்கு சற்று முன் தன் தாயின் பிடியிலிருந்து விலகி முன்னோக்கி நடந்தவாறே பேருந்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் "டா- டா; பாய்-பாய்" என சொல்லிக்கொண்டே தனது தாயின் பின்னால் நடந்து சென்றுகொண்டிருந்தது.

அந்த  குழந்தையின் செயலை கண்ட அனைவரும் அந்த குழந்தைக்கு மறு  மொழியாக டா டா சொல்லி கைகளை அசைத்தார்கள்.

சந்தோஷமாக அந்த குழந்தை இப்போது இறங்குவதற்கான கதவுகள் இருந்த இடத்திற்கு அருகில் சென்றது, அங்கே ஒரு மனிதரும் அமர்ந்திருந்தார், அவருக்கும் அந்த குழந்தை டா-டா பாய் - பாய் என சொன்னது. 

ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

மீண்டும் அந்த குழந்தை விடா பிடியாக அவரிடம் டா- டா , பாய் பாய்  என சொல்லிக்கொண்டே இருந்தது. இப்போதும் அவர் எந்த பதிலும் சொல்லாததால், ஏமாற்றமடைந்த அந்த குழந்தை சோகத்துடன் , பேருந்து நிறுத்தத்தில் தன் தாயின் கரம் பிடித்து இறங்கி,  திரும்பி திரும்பி அந்த பேருந்தை பார்த்தபடி தன் தாயுடன் சென்றுவிட்டது.

பேருந்தில் இருந்தவர்களுக்கும் அந்த மனிதரின் செயல் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, எனக்கும்தான்.

இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கு பிறகு அவர் பேருந்து ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்துங்கள்  வண்டியை நிறுத்துங்கள் என சத்தம்   போட்டுக்கொண்டே ஓட்டுனரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

ஓட்டுநர் கேட்டார், என்ன , ஏன் நிறுத்தவேண்டும்?

அவர் சொன்னார், நான் இதற்கு முன் நிறுத்தத்திலேயே இறங்கி இருக்கவேண்டும், அசதியில் தூங்கிவிட்டபடியால் உரிய நிறுத்தத்தில் இறங்காமல் தவறவிட்டேன், கொஞ்சம் தயவாக இங்கே நிறுத்துங்கள் என கெஞ்சலாக கேட்க, ஓட்டுனரும் பேருந்தை ஓரமாக நிறுத்த , இறங்கிய அவர், டிரைவருக்கு நன்றி டா- டா பாய் பாய்  என சொல்லிவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

பிறகுதான் பேருந்தில் இருந்தவர்கள் கவனித்தார்கள் அந்த மனிதர்  கருப்பு கூலிங்கிளாஸ் போட்டுகொண்டு   குழந்தை சொன்ன எந்த வார்த்தையையும் கேட்க முடியாதபடியும் பார்க்க முடியாதபடியும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார் என்று.

கோடைகாலமாதலால், கருப்பு கண்ணாடிகள் அணிந்துகொண்டு ஜன்னல் ஓரத்து இருக்கையில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்யவே பெரும்பாலும் இப்போது மக்கள் விரும்புகிறார்கள், அதன் சுகமே சுகம்தான்.

(கருப்பு கண்ணாடி அணிவதன்  பயன்பாட்டை / நன்மைகளை  தில்லையகத்து கீதா மேடத்திடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்)

பாவம் அந்த பச்சப்புள்ள, இந்த விவரம் தெரியாமல் பதில் டா- டா கிடைக்காமல் ஏமாந்து சென்றது.

இதன் மூலம் அறியும் பாடம் என்ன?  

முதலில் கூட இருப்பவர்களிடம்,விழித்திருப்பவர்களிடம் உங்கள் மேல் விழி பதித்திருக்கும் உறவுகள் நண்பர்கள் குடும்பத்தினரிடம் உங்கள் அன்பையும் பாசத்தையும் பரிவையும் காட்டுங்கள்.

கண் காணாது இருக்கும், முகம் தெரியாமல் இருக்கும் யார் யார்மீதெல்லாம், உங்களை யாரென்றே அறியாதவர்களிடத்தில், நீங்கள் அன்பாயும் , அக்கறையுடனும் பரிவுடனும் பாசத்துடனும் இருப்பதுபோல் எழுத்தளவில், பேச்சளவில் காட்டிக்கொள்வதால் எந்த பயனும் இல்லை அவை அங்கீகரிக்கப்படாமல் போய்விடும் எனும் கருத்தை அந்த குழந்தையின் செயல் நமக்கு காட்டுவதாக எனக்கு தோன்றியது.

மேற்கொண்டு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, நான் ஒன்று சொல்லப்போய் நீங்கவேறமாதிரி புரிஞ்சிகிட்டு.... நமக்கேன் வம்பு?, ஏதோ நடந்த விஷயத்தை சொல்லணும்னு நினைத்தேன் சொல்லிட்டேன். நீங்களே ஆளாளுக்கு ஒரு பாடத்தை நிதானித்துக்கொள்ளுங்கள், நீங்க ஒன்னும் பச்சப்புள்ள  இல்லை சொல்லிக்கொடுக்க .

சரி நண்பர்களே,

நானும் போகவேண்டும், பஸ்ஸுக்கு நேரமாச்சு, வருகிறேன், பிறகு பார்க்கலாம்.  "டா- டா; பாய் - பாய்".

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

14 கருத்துகள்:

  1. நல்ல சம்பவம், சில பாடங்களைத் தரும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அரசே,,

    நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்

    டா டா பாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. கண் காணாது இருக்கும், முகம் தெரியாமல் இருக்கும் யார் யார்மீதெல்லாம், உங்களை யாரென்றே அறியாதவர்களிடத்தில், நீங்கள் அன்பாயும் , அக்கறையுடனும் பரிவுடனும் பாசத்துடனும் இருப்பதுபோல் எழுத்தளவில், பேச்சளவில் காட்டிக்கொள்வதால் எந்த பயனும் இல்லை அவை அங்கீகரிக்கப்படாமல் போய்விடும் எனும் கருத்தை அந்த குழந்தையின் செயல் நமக்கு காட்டுவதாக எனக்கு தோன்றியது. Aam unmai than arasar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      உண்மை என நீங்கள் ஒப்புகொண்டமைக்கு நன்றி அம்மா.

      கோ

      நீக்கு
  4. காட்சிகள் அருமையாக விவரிக்கும் நீங்கள் ஏன் கதைகள் எழுத
    முயலக்கூடாது?

    நேற்றைய முயலும்- இன்றைய குழந்தையும் ரசித்தேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      பதிவுகளை பாராட்டிய உமக்கு நன்றிகள்.

      கதை எழுதும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.

      கோ

      நீக்கு
  5. நல்ல படிப்பினைதான்

    தூங்குபவர்களிடன் மட்டுமில்லை
    அதுபோல் நடிப்பவர்களிடன் கூட
    நாம் எதிர்பார்த்தல் தவறுதான்

    நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா,

      நீங்கள் சொல்வதுபோலும் எடுத்துக்கொள்ளலாம்- பொருந்தும்.

      கோ

      நீக்கு
  6. நல்ல பகிர்வு.... பல சமயங்களில் சக மனிதர்களை தவறாகவே புரிந்து கொள்கிறோம்....

    டாடா bபை bபை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா,

      ஆம் நண்பரே, சில நேரங்களில் சில மனிதர்கள்.

      டா- டா..

      கோ

      நீக்கு
  7. (கருப்பு கண்ணாடி அணிவதன் பயன்பாட்டை / நன்மைகளை தில்லையகத்து கீதா மேடத்திடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்)// ஹஹஹ்ஹ ம்ம்ம்ம் உங்களுக்கு லொள்ளு ...சரி இதற்கும் ஆராய்ச்சு செய்யுங்கள்..கோக்கு மாக்கு போல...

    சின்னச் சின்ன நிகழ்வுகளைக் கூட நீங்கள் அதில் பல அர்த்தங்கள் சொல்லி அழகாகப் பதிகின்றீர்கள். சரி சரி டா டா பை பை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்பிற்கினிய நண்பர்களே,
      நீங்களும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட உன்னிப்பாக வாசித்து கருத்திடுவது மகிழ்வளிக்கின்றது.

      லொள்ளு உங்களிடம் இருந்து தொற்றிக்கொண்டது என்னமோ?

      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு