பின்பற்றுபவர்கள்

திங்கள், 18 ஜூலை, 2016

உலகே மா(சா)யம்!!

மெய்ப்பொருள் காண்பதரிது!!

நண்பர்களே,

பழைய காலத்து மனிதர்களுள்  பெரும்பான்மையானவர்கள், சூது வாது தெரியாத வெள்ளந்தி மனிதர்களாக வாழ்ந்திருந்தனர் என்பதை  வரலாறுகளும், வழி வழியாக சொல்லப்பட்ட உண்மை சம்பவங்கள் மூலமும் நாம் அறிவோம்.  

அவர்கள் எல்லோரையும் , எதையும் உடனே நம்பி விடுவார்கள், எல்லாவற்றிலும் தம்மை இணைத்து , தம்மை மற்றவர்கள் சூழ்நிலையில் உட்படுத்தி பார்த்து செயல்படுவார்கள்.

பல கோடி மதிப்புமிக்க செல்வங்களையும் , பொருட்களையும் கூட மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளி தேசம் சென்று வருவார்கள், வந்து தாங்கள் கொடுத்து வைத்து போனவற்றை   அப்படியே திரும்ப பெற்றும் வந்தனர், ஒருவருக்கொருவர் உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்ந்துவந்தனர்.

கள்ளம் கபடம் அவர்களை கொஞ்சமும் நெருங்கியது கிடையாது என்பதால் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட பெரும் வாழ்வையும் மகிழ்ச்சியான வாழ்வையும் வாழ்ந்து சுகித்தார்கள். 

அப்போதும் , அதே சமூகத்தில் சில குள்ளநரிகளும் , நய வஞ்சக துரோகிகளும், ஏமாற்றுக்காரர்களும் கொள்ளையர்களும் இல்லாமல் இல்லை.  ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே.

அப்படி வாழ்ந்த அந்த சொற்ப மனிதர்களிடமிருந்து ஏனைய பெருவாரியான மக்களை காப்பாற்றவேண்டும் என்பதற்காகத்தானோ  என்னவோ,

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் ; அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு " என வள்ளுவ பெருந்தகை சொல்லிச்சென்றுள்ளார்.

ஆனால் இன்றைய கால சூழ்நிலையில், ஆங்காங்கே பெருவாரியாக நடைபெறும் , கொலை கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை, ஏமாற்றுவேலைகள், துரோகம் , வஞ்சகம் போன்ற செய்லகளை பார்க்கும்போதும், செய்திகளினூடாய் கேட்க்கும்போதும் , வள்ளுவரின் குறள் இப்படியாக இருந்திருக்க வேண்டுமோ என தோன்றுகின்றது:

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் ; அப்பொருள்
மெய்ப்பொருள்  காண்பது அரிது. " 

நல்லவர்களை போல பேசுகின்றனர், நம்ப வைத்து காரியங்களை சாதித்துக்கொண்டு பின்னர் சம்பந்தமே இல்லாதுபோல் நடந்துகொள்கிறார்கள்.

சமீபத்தில் வீட்டுவேலைக்கென நியமிக்க பட்டிருந்த ஒப்பந்தக்காரர் வேலைகளை முடிக்குமுன்னரே, நயமாக பேசி ஒப்பந்த காசு மொத்தத்தையும் வாங்கிக்கொண்டு வேலைகளை இழுத்தடித்தும், தாமதப்படுத்தியும் தள்ளி வைத்தும் , குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்காமல் , தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக காட்டிக்கொண்டும் , அப்பாவி மக்களின் அறியாமையை, கபடமற்ற மனதை, யார் எது சொன்னாலும் அவற்றை முழுமையாக நம்பி விடுகின்ற மக்களிடம் தங்கள் பேச்சுத்திறத்தாலும் நல்லவர்களைப்போல் நடிக்கும் திறமையாலும் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றி ஏமாற்றி இருக்கின்றார்.

இன்னும் சிலர் நண்பர்களைப்போலவே பேசி , நம்மிடம் மட்டுமே நட்பாக இருப்பதுபோல் நடந்துகொண்டு நம்முடைய விஷயங்களை நமக்கு தெரியாமல் அடுத்தவர்களிடம் ஒன்றுக்கு இரண்டாக ஜோடனை செய்து பின்னர் நமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் நல்ல நட்பையும் கெடுக்கும் விதத்திலும் நடந்துகொள்கிறார்கள்.

வேலை வாங்கி தருவதாக, அதிலும் வெளி நாட்டில்  வேலை என்று சொல்லி எத்தனை அப்பாவிகளிடம் பணம் பறித்த கதைகளும், அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி குருவிபோல் சிறுக சிறுக சேர்த்த பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு பருந்துகள்  போல் பறந்து சென்றவர்கள் குறித்த செய்திளும் நாம் அறிந்ததே.

கபடுகள் நிறைந்த இந்த உலகத்தில் யார் எது சொன்னாலும் அதன் மெய்ப்பொருளை அறிவது மிக மிக அரிதாகவே இருக்கின்றது.

இப்படி சாயம் பூசப்பட்ட உலகில்தான் நாம் வாழ்கின்றோம் என்பதை உணர்ந்து வஞ்சக வர்ண ஜாலங்களை உண்மை என்று எண்ணி நம்பிவிடாமல் சற்று யோசித்து , தெளிவுபடுத்திக்கொண்டு இயங்குவது அவசியமாகிறது.

நாகரீக உலக வாழ்வியலில், சமூக கட்டமைப்பில், மனிதகுல பரிணாம வளர்ச்சியெனும் நாகரீகத்தில், பண்பாட்டில், குறிப்பாக நம் இந்திய தமிழ் கலாச்சாரத்தில் சாத்தியம் இல்லை என்று தெரிந்தும், பொய்யான நம்பிக்கை ஊட்டும் சில மேல்போக்கான பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் பகுத்தறிந்தும் உண்மை நிலை உணர்ந்தும், தன்னிலை தெளிந்து நடந்துகொள்வதும், இன்றைய இளைஞர்களுக்கு இருக்கவேண்டிய ஒரு கட்டாய தகுதி என்பது உலகில் நிகழும் பல கொடுஞ்செயல்கள் நமக்கு ஓங்கி உரைத்து  உணர்த்தும் ஒரு உண்மை.

நண்பர்களே,

இந்த பதிவு யாரையும் குறிவைத்து எழுதப்பட்டதல்ல,(குறிவைக்க நமக்கு யார் இருக்கின்றார்கள்?)

சமீபத்தில் ஊரில் சந்தித்த, தேன் தடவிய ப(க)சப்பு மொழிகளின் மெய்ப்பொருளை அறியாமல் சிங்கப்பூர் செல்வதற்கு , டிக்கட்டும் விசாவும் கொண்டுவருவதாக சொல்லி இருந்த முகவர், விமானம் புறப்படும் நேரம்வரை வராமலும் , தன் தொடர்பு எல்லையை செவ்வாய் கிரகத்திற்கு பக்கத்து கிரகத்தின் எல்லைக்கு மாற்றிக்கொண்டு தலைமறிவாகிப்போன ஒரு முகவரால், சிங்கப்பூர் செல்லப்போகின்றோம் என்ற ஆசை கனவுகளுடன்  வந்திருந்தவர்  சிங்கார சென்னை விமான நிலையத்தில்  , மனம் உடைந்து கண்ணீர் மல்க, வேதனையும் வெட்கமும் அவரது முகத்தை மூட அங்கலாய்ப்புடன்  நின்றிருந்த தஞ்சாவூரை சார்ந்த ஒரு பெண்மணியின் கண்ணீர் சிந்திய  ஆதங்க பகிர்வின் வெளிப்பாடே இந்த ப(கிர்)திவு.

அந்த தஞ்சாவூர் பெண்ணைப்போல மெய்ப்பொருள் அறியாதோர் இந்த தரணியில்   எத்தனைபேரோ?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

10 கருத்துகள்:

  1. சார்,


    பாவம் அந்த பெண்மணி.
    அவரைப் போல் எத்தனை எத்தனை பேரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மகேஷ், அந்த தலையாட்டி பொம்மை ஊர் பெண்மணி பாவம்தான்.

      கோ

      நீக்கு
  2. இன்றைய சமூகச்சுழல் இப்படித்தான் இருக்கின்றது தங்களது ஆதங்கம் நியாயமானதே...

    குறிப்பு - தொடக்கத்தின் நான்கு பாராக்களை இவ்வளவு தூரம் எழுதுவதற்கு சுருக்கமாக நமது கில்லர்ஜியைப்போல..... என்று முடித்து இருக்கலாம் நண்பரே ஏதோ உங்களுக்கு உதவியாக இருக்குமென்பதற்காக சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்களே,

      நான்காவது பாராவிற்கு பிறகு இந்த வாக்கியத்தை வாசித்துவிட்டு தொடரவும்.
      "சுருக்கமாக சொல்லவேண்டுமாயின் நமது கில்லர்ஜியைப்போல"

      (நண்பா... சந்தோஷமா?)

      கோ

      நீக்கு
    2. ஐந்தாவது பராவிற்கு பிறகு .. சுருக்கமாக யாரைப்போல் என்றும் சொல்லுங்களேன்.

      நீக்கு
  3. சொல்லிச் சென்ற விதம் நன்று..எனக்குப் பிடித்திருந்த்து..வாழ்த்துக்களுடன்....்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. வணக்கம் அரசே,

    நல்ல பகிர்வு,, என்ன செய்வது மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நம்பிவிடுவது இயல்பு தானே,
    ஆஹா அந்தப்பெண்மணியும் தஞ்சாவூரா? தஞ்சாவூர் காரர்கள் ரொம்ப இளகியமனம் கொண்டவர்கள்,,,,, நல்வர்கள், வல்லவர்கள்,, இன்னும் இன்னும்,,, நான் சொல்ல, எல்லோரும் சொல்வது,
    உங்களுக்கு தெரிந்தவர் எனின் நாங்கள் அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்கிறோம்.
    நன்றி அரசே

    பதிலளிநீக்கு
  5. பேராசிரியருக்கு,

    வருகைக்கும் , தஞ்சாவூர் மண்ணின் மகிமையையும் சொன்னதற்கு நன்றிகள்.

    அவர் யார் என்று எனக்கு தெரியாது.

    கோ

    பதிலளிநீக்கு
  6. பாவம் தான் பெண்மணி...இப்படி நிறைய பேர் உள்ளனர்தான்

    பதிலளிநீக்கு