பின்பற்றுபவர்கள்

வியாழன், 5 மே, 2016

"தேவதூதனும் எருமை மாடும்"

செல்பி !!- குல்பி !!

நண்பர்களே,

வளர்ந்துவரும் நாகரீக உலகில் மனித பிறவியின் இன்றியமையாத தேவைகளுள் உணவு உடை உறையூளுக்கு இணையான  மற்றொன்று  உடல் ஆரோக்கியமும் அதற்கான நல்ல மருத்துவமும் என்றல் மிகை அல்ல.

நல்ல மருத்துவம் என்பதன் முக்கிய அம்சமாக விளங்குவது துரித கவனிப்பும் தரமான துரித சிகிச்சையும்.

துரிதம் என்றால் என்ன? சுகவீனம் என உணர்ந்தவுடனேயே காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகுவது  அல்லது பக்க விளைவுகள் இல்லாத -நம்பிக்கையான பரம்பரை வைத்திய முறைகளை  மேற்கொள்வது.

சுக்கு மிளகு திப்பிலி,சீரகம் வெந்தயம்,ஓமம், எலுமிச்சம், தேன்   போன்ற மருத்துவ குணங்கள் மிகுமையான எளிய உணவு பொருட்களை தேவைகேற்ப முன் அனுபவம் மிக்க பெரியோர்களின் அறிவுரைக் கேற்ப பயன்படுத்துவதும் சில சிறிய அளவிலான சுகவீனங்களை தற்காலிகமாக போக்க பெரிதும் உதவும்.

உணவு பழக்கம், சுற்று சூழல்,மாறிவரும் தட்ப வெட்பம்,வெளியூர் மற்றும் வெளி நாட்டு பயணங்கள் போன்றவற்றால் அவ்வப்போது தோன்றும் புதிய புதிய நோய்களும் அவற்றை அறிமுகபடுத்தும் நோய் கிருமிகளும் மிகுந்து விட்ட தற்போதுள்ள சூழ்நிலையில், யாருக்கு எப்போது எந்த வியாதி வரும் என்று கணிக்க முடியாமல் போகிறது.

இப்படி தோன்றும் இது போன்ற வியாதிகளையும் சுகவீனங்களையும் உடனடியாக போக்கிக்கொள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்களை - மருத்துவ மனைகளை அணுகுவதே அறிவார்ந்த செயல்.

அப்படி திடீர் என்று சுகவீனபடும் நோயாளிகளை மருத்துவமனை கொண்டு செல்வதில்தான் எத்தனை சவால்கள்?

அத்தகைய சவால்களில் பணத்தைவிட முதன்மையான சவாலாக அமைவது  சாலை வசதியும் வாகன வசதியும்.

இப்போதுள்ள, கொஞ்சம் வளர்ந்த, நிலையில்  நோயாளிகளை மருத்துவ மனை கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் எனும் துரித வாகனங்கள் வந்துள்ளன,.

எனினும் இந்த வாகனங்கள் உரிய இடத்திற்கு உரிய நேரத்தில் போய் சேர்வதற்கான சாலை வசதிகள் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலை நாடுகளை போன்று ஆம்புலன்ஸ்கள், காவல் துறை வாகனங்கள்,தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கென்று பிரதான வழித்தடங்களோ அல்லது அது போன்ற பிரத்தியேக வழி தடம்கள்  இல்லாத குறுகிய சாலைகளில் ஆம்புலன்ஸ் பயணபடுவதை அறிந்ததும் அவரவர் ஒதுங்கி வழிவிட்டு விலகி தங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி அம்புலன்சின் தடையற்ற பயணத்திற்கு வசதி செய்து கொடுக்கும் உயரிய பண்பாடு  நமது நாட்டில் இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இத்தககைய உயிர்  காக்கும் உபகாரியாக திகழும் இந்த வாகனங்கள் தேவதூதனுக்கு சமமாக கருதபடவேண்டியவை என்றல் அது மிகை அல்ல.

மாறாக பயண தடைகளை ஏற்படுத்தி காலதாமதத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமாகி, இந்த தேவதூதர்கள் எமனின் வாகனமாக மாறிப்போக நம் மன  வளர்ச்சியும்(??) பக்குவமின்மையும்  சுயநல போக்கும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

சமீபத்தில் பாண்டிச்சேரியிலுள்ள  ஒரு மேல் நிலை பள்ளிக்கு விருந்தினராக அழைக்கப்பட்டு சென்றிருந்தபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பள்ளியின் சிறப்புகளை சொல்லிகொண்டிருந்தார்.  அவற்றுள் ஒன்று என்னை வெகுவாக கவர்ந்தது.

நகரின் பிரதான சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் அந்த பள்ளிகூடத்தில் படிக்கும் மாணவ மாணவியர், சாலையில், தங்கள் பள்ளிகூடத்தை கடந்து செல்லும்   ஆம்புலன்சின் சைரன் ஒலி கேட்கும் சமயங்களில், எத்தனை முக்கிய பாடங்கள் நடந்து கொண்டிருந்தாலும் , அல்லது ஆய்யு கூடத்தில் பரிசோதனையில் இருந்தாலும், செய்கின்ற வேலையை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு அந்த ஆம்புலன்சின் சைரன் சத்தம் தங்களை கடந்து போகும் நேரம் வரை தங்கள் கண்களை மூடி கைகளை கூப்பி , அந்த ஆம்புலன்சில் செல்லகூடிய நோயாளிக்கு நல்ல சுகம் கிடைக்கவேண்டும் என்று தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டி கொள்வார்களாம்.

இதனை கேட்ட நான் அப்படியே சில நிமிடங்கள் சிலையானேன்.

தங்களுக்கும் ஆம்புலன்சில் செல்பவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாவிட்டாலும், அவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இந்த உயரிய பண்பு உள்ளபடியே பாராட்டுக்குரியது.

நாமும் இதுபோன்று எப்போதெல்லாம் ஆம்புலன்ஸ்களின் வருகையை உணருகின்றோமோ அப்போதெல்லாம் சாலையை விட்டு ஒதுங்கி அவற்றிற்கு வழிவிடுவதோடு, அதில் அழைத்து செல்லபடுபவரை   நமது நெருங்கிய சொந்தமாக நினைத்து  இறைவனிடம் வேண்டிகொள்வதும் இறை நம்பிக்கை இல்லாதவர்கள், முடிந்தவரை வாகன போக்குவரத்திற்கு உதவுவதும் நல்லது நடக்கவேண்டும் என்று உளமார நினைப்பதும் சக மனிதருக்கு நாம் செய்யும் ஒரு உபகாரமாகும்.

அதை விடுத்து தமக்கு பின்னால் சைரன் ஒலியுடன் வழி கிடைக்காமல் நிற்கும் ஆம்புலன்சை சேர்த்து செல்பி எடுக்க அது ஒன்றும்  குல்பி விற்கும் ஐஸ் வண்டி அல்லவே.  

பின் குறிப்பு:

எருமை மீது எனக்கு ஏகப்பட்ட மரியாதை  உண்டு ஆனால் அதை வேறொருவரின் வாகனமாக பார்க்கத்தான் பிடிக்காது,  sorry Buffalo.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

7 கருத்துகள்:

  1. ஆம் அரசே, உண்மையிலே அவர்கள் நலம் பெறவேண்டும் என்று மனம் துடிக்கும் தான்.. பகிர்வு அருமை,,
    ஆம் செல்பி எடுக்க அது ஒன்றும் குல்பி வண்டியில்ல,,
    வார்த்தை ஜாலங்கள் அருமை,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பள்ளி பிள்ளைகளின் வழிபாடு சிறப்புதான்! நல்லதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரேஷ்,

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்

      கோ

      நீக்கு
  3. பள்ளி பிள்ளைகளின் வழிபாடு சிறப்புதான்! நல்லதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பேராசிரியருக்கு,

    சிரமம்படுபவர்கள் மேல் இரக்கம்படுவதே சிறப்பான மனித குணமல்லாவா?

    வருகைக்கு மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பிரார்த்தனையை நானும் செய்வதுண்டு கோ. நான் படித்த புனித சூசையப்பர் பள்ளியில் யாருக்கேனும் சுகமில்லை என்றால் பிரார்த்தனை செய்யச் சொல்லுவார்கள் இன்னார் என்று இல்லை. தெரியவரும் போது யாருக்காகவும் எல்லோரையும். அப்போது எல்லாம் இப்படி ஆம்புலன்ஸ் போகாதே. அந்தப் பழக்கம் இப்போதும் தொடர்கின்றது. நான் வண்டியில் சென்று கொண்டிருந்தாலும், ஆம்புலன்சிற்கு வழிவிட்டு ஓரமாக ஒதுங்கிவிட்டுப் பிரார்த்தனையும் செய்துவிட்டுத்தான் வண்டியை எடுக்கும் வழக்கம்....பள்ளிக்கும் எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியைக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      சுகவீனமாக இருக்கும் ஒருவருக்கு, வேறு ஒருவரோ அல்லது குழுவாகவோ சேர்ந்து பிரார்த்தனை செய்வது எத்தனை பலனுள்ளது என்பதை அறிந்தவன், உணர்ந்தவன் என்ற வகையில் உங்களின் இன்னும் தொடரும் இந்த வழக்கத்திற்கு உண்மையிலேயே தலை வணங்குகிறேன்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு