பின்பற்றுபவர்கள்

புதன், 4 மே, 2016

"வானவில்லும் வாக்குபதிவும்"

"சிறும்புள்ளி - கரும்புள்ளி - செம்புள்ளி ".


நண்பர்களே,

நாளை இங்கிலாந்திலுள்ள 124 மாநகராட்சிகளுக்கான மேயர்,மற்றும் கவுன்சிலர் தேர்தல் நடைபெற இருக்கின்றது.

பொதுவாக இங்கிலாந்தில் நடக்கும் எந்த தேர்தல் என்றாலும் பெரும்பாலும் வியாழக்கிழமைகளில்தான் நடைபெறுவது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் ஒரு நடைமுறை.  இதற்கான காரணத்தை பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். 

இந்த தேர்தலை குறித்து இங்கே எந்த ஆர்ப்பாட்டமும் பரபரப்பும் , ஒரு சிறு சலசப்பும் கூட இல்லை.

பொதுவாக யாரிடமாவது தேர்தல் குறித்து கேட்டால் , ஆம் நாளை தான் என்று நினைக்கின்றேன் என சாதாரணமாக சொல்கிறார்கள்.

யார் யார் போட்டி இடுகிறார்கள்  என்பதை பற்றி எல்லாம் இங்கே பெரும்பாலும் யாரும் கவலை படுவதில்லை. 

 ஏனென்றால், யார் பதவிக்கு  வந்தாலும் சுரண்டல், பதுக்கல், லஞ்சம் , ஊழல், சீர்கேடுகள்,வருமானத்திற்கு மீறிய சொத்து குவிப்பு, வாரிசுகளின் அராஜகம் போன்று எந்த சமூக சீர்குலைவும் ஏற்படபோவதில்லை என்பது அனைவரும் அறிந்ததினால் , எந்த தேர்தல் என்றாலும் ஆர்பாட்டம்  - அலட்டல் இன்றி அமைதியாக நடைபெறும்.

இங்கேயும் நம்மூர் முன்னணி கட்சிகள்  போன்ற பிரதான கட்சிகளான, தொழிலாளர்  கட்சியும் -  அதாங்க லேபர்  பார்ட்டியும் பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிகளோடு ஒருசில சுயேச்சை வேட்பாளர்களும் போட்டி இடுகின்றனர்.

( போட்டி இடுபவர்களுள் ஒருவரை எனக்கு 'நன்னாயிட்டு அறியும்'  - அவர் நம்ம ஊர் சேட்டன்.)

இங்கே ஒவ்வொரு வாக்காளருக்கும் , பல மாதங்களுக்கு முன்பே வாக்காளர் உறுதி சீட்டுகள் வழங்கப்பட்டுவிட்டன.  அதில் எப்போது தேர்தல், எங்கே வாக்கு சாவடி எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை வாக்கு செலுத்தலாம் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.

தேர்தல் நாளன்று எவருக்கும் விடுமுறை கிடையாது.

குடிமக்கள் தங்களது அடிப்படை உரிமையையும் ஜனநாயக கடமையையும் நன்கு உணர்ந்திருப்பதாலும் வாக்காளர்களின் வசதிக்கேற்ப அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு மிக மிக அருகிலேயே வாக்கு சாவடிகள் அமைத்து கொடுப்பதாலும் , காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை வாக்கு செலுத்தலாம் என்பதாலும் இங்கே தேர்தல் அன்று விடுமுறை கிடையாது.

அதேபோல, இங்கே ஆயிர கணக்கில் காவல்துறை, ராணுவ படைகளும் வருவதில்லை , ஏனென்றால், அத்தகைய கூடுதலான பாதுகாப்பு இடவேண்டிய அவசியம் கொஞ்சமும் இல்லை.

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளோ, பறக்கும் படையின் வாகன சோதனைகளும்  இங்கே அறவே இல்லை- அவசியமும் இல்லை.

பணம்,கம்மல், மோதிரம்., கை கடிகாரங்கள், குடம், மிக்சி, கோட்டர்,பிரியாணி பொட்டலங்கள் கொடுத்து யாரும் வாக்கு கேட்பதில்லை.

சொல்லபோனால், வேட்பாளர்களோ அவர்கள் சார்ந்த கட்சியினரோ வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுபடுவதில்லை.

கட்சி தலைவர்களின் கூட்டங்களோ, மாநாடுகளோ, ஒருவரை ஒருவர்  உடல் அமைப்பு, வயது, நிறம் ரீதியாக தாக்கி கொச்சையாக பேசும் கண்ணிய குறைவான   மேடை பேச்சிக்களோ சிறிதும் இங்கே இல்லை. 

இங்கே தேர்தல்கள் என்பது வானவில் போல அழகாக தோன்றி அமைதியாக மறைந்துவிடும் ஒரு அற்புதமான நிகழ்வு. 

அழகாக வானில் தோன்றி , நம் கண்களுக்கும் மனதிற்கும் இதம் சேர்த்து-இன்னும் கொஞ்சம் நேரம் இருக்காதா என ஏங்க வைத்து சிறிது நேரத்தில் மறைந்து போகும் அழகிய வானவில் போன்று வந்துபோகும் தேர்தல்களை பார்க்குபோது, "இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால்தான் என்ன?,.. ..என்ன  அவசரம் என்ன அவசரம் வானவில்லே?" என பாடதோன்றும்.

ஆனால் நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களை பார்க்கும்போது, தேர்தல் அதிகாரிகள் பாடும் பாடல் என்னவாக இருக்கும் என யோசித்துபார்த்ததில், "இதுபோதும் எனக்கு இது போதுமே , வேறென்ன வேண்டும் வி ஆர் எஸ் போதுமே" என்றுதான் பாடுவார்களோ.

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கே  இந்த நிலைமை என்றால், பொதுமக்களின் பாட்டை என்னவென்று பாடுவது?

மேலை நாட்டு, உடை உணவு, கலாச்சாரம், நாகரீகம்,மொழி  போன்றவற்றை மட்டும் பின்பற்ற துடிக்கும் நாம் , இது போன்ற  நாகரீக  கலாச்சாரத்தை, பண்பாட்டை தேர்தல் அணுகு  முறைகளை ஏன் பின் பற்ற மறுக்கிறோம். 

நண்பர்களே,

விரல் நுனியில் சிறும்புள்ளியாக ஒரு கரும்புள்ளி வைக்கப்பட்டு , வாக்கு செலுத்தியதன் விளைவாக , அதுவரை யாரென்றே தெரியாமலிருந்த ஒரு சிறும்புள்ளி -வெற்றிபெற்று பெரும்புள்ளியானபின் வாக்களித்தவர் முகத்தில் குத்தபடுவது கரும்புள்ளியும் செம்புள்ளியும்தான் என்பதை நினைவில் கொண்டு வர போகின்ற சட்ட மன்ற தேர்தலில் யோசித்து செயல் படுங்கள்.

சரிங்க, யாரோ கதவ தட்டறாங்க, ஜன்னல் வழியா பார்க்கறதுக்கு ,வேட்பாளரும் அவரது அடி ஆட்களும் போல தெரியுது... சில்வர் குடத்துடனும் கட்டுகட்டான கரன்சி நோட்டுகளுடனும் வேற  நிற்கிறார்கள் உடனே கதவை திறக்கலனா  அப்புறம் என்ன ஆகும்னு தெரியல.

(இப்படி எல்லாம் நினைக்ககூட  சத்தியமாய்   இங்கே சாத்தியம் இல்லை - ம்.....ம்....ம்.. இந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்!!!!!?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ 

6 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே,

    இப்படி ஒரு தேர்தலா,,,

    இது நல்லா இருக்கா? பிரியாணி, குவாட்டர் இல்லா தேர்தல்,,,

    எங்களுக்கு இது வேடிக்கையான விசயம்.

    அப்புறம் தாங்க குறிப்பிட்ட உவமை அருமை,, வானவில்,,

    என்ன அவசரம்,,, அருமை,அருமை

    இங்கு எப்படா முடியும் இந்த கூத்து என்று??? தான்.

    நல்ல அருமையான பகிர்வு,,

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியைக்கு,

      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. தேர்தல் கமிஷன் புண்ணியத்தில் இங்க தேர்தலும் கொஞ்சம் கொஞ்சம் மாறிவருது! ஆனா அரசியல்வாதிகள்தான் திருந்த மறுக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரேஷ்,

      தேர்தல் கமிஷன் மீதும் அவ்வபோது புகார்கள் வருகின்றனவே.

      நாட்டில் நல்லது நடக்க வேண்டும்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. என்னது நாங்கள் கொடுத்துவைத்தவர்களா....ஆஹா நாங்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்....நாங்கள் சொல்லவந்ததை நீங்களே இறுதியில் சொல்லிவிட்டீர்கள்...அதான் இது...

    //மேலை நாட்டு, உடை உணவு, கலாச்சாரம், நாகரீகம்,மொழி போன்றவற்றை மட்டும் பின்பற்ற துடிக்கும் நாம் , இது போன்ற நாகரீக கலாச்சாரத்தை, பண்பாட்டை தேர்தல் அணுகு முறைகளை ஏன் பின் பற்ற மறுக்கிறோம்.//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      பொறமை உடம்புக்கு ஆகாதுங்க.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு