Followers

Monday, December 28, 2015

டி ராஜேந்தரின் (அர்த்தமுள்ள) பாடல்

"மீன்குஞ்சு"

நண்பர்களே,

தமிழகம் மட்டுமல்லாமல், உலகில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களுக்கு தெரிந்த , தமிழக திரை பிரபலங்கள் பலரில் மிகவும் பரிச்சியமும் பிரபல்யமுமானவர் திரு டி ராஜேந்திரன் அவர்கள்.


தமிழ் மீதும் தமிழ் சமூதாயம் மீதும் குறிப்பாக தாய் மார்கள் மீதும் மிகவும் மரியாதையும் அன்பும் கொண்டவர் என்பது அவரின் பேட்டிகள், மற்றும் அவர் இயக்கிய திரை படங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

சாதாரணமாக , சராசரி குடும்பத்தில் பிறந்து இன்று உலகம் அறிந்த ஒரு கலைஞனாக , பல திறமைகளுக்கு சொந்தகாரராக திகழும் திரு டி ஆர் அவர்களின் பிரபலத்திற்கு ஒரு முக்கிய காரணம், அவரின் தமிழ் ஆளுமையும் ஞானமும் ,அவரின் பாடல்களும் என்றால் அது மிகை ஆகாது.

நீங்கள் என்னை அறிந்த அளவில், திரை துறை சார்ந்தவர்களையோ திரைபடங்களையோ அவ்வளவாக விமர்சிக்காதவன் நான்.

அப்படிபட்ட நான் இன்று திரு டி ராஜேந்திரன் அவர்களை தலைப்பாக்க என்ன காரணம்.

காரணமில்லாமல்  காரியம் இல்லை அல்லவா?  இதோ அந்த காரண காரியம்:

என் வீட்டில் நாய் பூனை போன்ற செல்ல பிராணிகள் வைத்து வளர்க்கும் வசதியோ நேரமோ இங்கே கிடையாது, எனினும் வீட்டில் ஒரு கண்ணாடி தொட்டியில் சில தங்க மீன்களை வளர்த்து வருகிறேன்.

மாலை வேளைகளில் அலுவலகம் விட்டு சோர்வாக வரும் வேளைகளில் சூடாக ஒரு தேநீர் கோப்பையுடன் நான் வளர்க்கும் அந்த மீன்களை கொஞ்சம் நேரம் பார்த்துகொண்டிருப்பேன்,சிறிது நேரத்தில் குடித்த தேநீரால் மட்டுமின்றி பார்த்துகொண்டிருந்த மீன்களின் அழகினாலும் என் சோர்வு நீங்கி சகஜ நிலைமைக்கு திரும்பிவிடுவேன்.

இரவு சரியாக 8 மணிக்கு அந்த மீன்களுக்கு உணவளித்துவிட்டு என் இரவு உணவையும் முடித்துக்கொண்டு படுக்கைக்கு சென்று விடுவேன்.

நேற்று இரவும் வழக்கம்போல மீன்களுக்கு உணவளித்துவிட்டு உறங்கபோனேன்.

இன்று விடுமுறை என்பதால், பகல் நேரத்திலேயே மீன்தொட்டிக்கு அருகில் சென்று மீன்களின் அழகை பார்த்துகொண்டிருந்த எனக்கு மீன்களில் ஒன்று வழக்கமான உற்சாக துள்ளல் இன்றி சற்று சோர்வாக இருப்பதை கவனித்தேன்.

மற்ற மீன்கள் போல் அல்லாமல் தன்னுடைய இயக்கம் சற்று குறைந்து இருப்பதை பார்த்து  என்னவோ ஏதோ என்று நினைத்து அதையே கொஞ்சம் நேரம் உற்று பார்த்து கொண்டிருந்தேன்.

சோர்வாக இருக்கும் வேளைகளில் என் சோர்வை நீக்கி புத்துணர்வை கொடுக்கும் அந்த மீன்களில் ஒன்று இன்று சோர்வாக இருப்பதைகண்டு மனம் சோர்வானது.

அந்த மீனின் வழக்கமான உற்சாக துள்ளல் இன்று இல்லாமல் போனதன் காரணம் புரியவில்லை.

உணவு காரணமாக வாய்ப்பில்லை ஏனென்றால் மற்ற மீன்களுக்கும் அதே உணவுதான் அளிக்கப்பட்டன, சீதோஷன மாற்றமும் தண்ணீரின் தன்மையும் காரணமாக வாய்ப்பில்லை.

மீனையே ரொம்ப நேரம் கவனித்துகொண்டிருந்த  எனக்கு அந்த மீனின் நிலைமைக்கு என்ன காரணம் என்பது புரியாமலும் என்ன சிகிச்சை அளிப்பது என்பதும் புரியாமல் அந்த மீனை மட்டும் தனியாக ஒரு சின்ன தொட்டியில் மாற்றி வைத்துவிட்டு அந்த மீனையும் அதன் வேதனையையும் பார்க்கும்போது என் நினைப்பில் வந்தவர்தான் டி ராஜேந்திரன்.

திரை துறைக்கு வந்த ஆரம்பகால கட்டத்தில் அவர் எழுதிய பல அர்த்தமுள்ள பாடல்களில் இன்று எனக்கு என் சூழ்நிலைக்கு ஏற்ப மிகவும் பொருத்தமாக என் சிந்தைக்கு வந்த பாடல் வரி:

"தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால் உன் மனதை யார் அறிவார்?"

மீனின் கண்ணீரும் சோகமும்  தீர்ந்து மீண்டும் சகஜ நிலைமைக்கு திரும்புமா அல்லது நிலைமை மோசமாகுமா என்னும் கலக்கத்தில் நான்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


12 comments:

 1. ஆஹா அருமையான வரிகள், நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் வரிகள்,
  எத்துனை பெரிய உண்மை தண்ணீரில் அழுதால் நம் கண்ணீரை யார் அறிவார்.
  நல்ல பகிர்வுக்கு நன்றிகள் அரசே,

  ReplyDelete
  Replies
  1. பேராசிரியரே,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   நல்ல பாடல்தான்.

   கோ

   Delete
 2. நண்பரே .. TR என்ற சினிமா நிபுணரின் மேல் எனக்கும் நல்ல அபிபிராயம் இருந்தது. ஆனால், இவரின் தற்பெருமை பேச்சுக்கு அளவே இல்லை. எப்போது எந்த இடத்தில் பார்த்தாலும் இவர் சுய தம்பட்டம் அடிப்பது பார்போரின் முகத்தை கூச வைக்கும்.
  இவரிடம் பல திறமைகள் இருப்பது நாடறிந்த உண்மை, அதற்கு மறுப்பே இல்லை.
  நீங்கள் சுட்டிகாட்டிய இந்த பாடல், ஒரு1960ல் வந்த ஒரு ஆங்கில பாடலின் மொழியாக்கம். அந்த ஆங்கில பாடலின் தலைப்பு "I will do my crying in the rain"!

  ஒரே கற்பனை இருவருக்கு வர கூடாதா என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகின்றது. கண்டிப்பாக வரலாம். ஆனால் அது ஒரு முறை வந்தால் பரவாயில்லை. மற்றவரின் கற்பனை ஒருவருக்கே பலமுறை வரும் போது அது நகல்.

  ஒரு படத்தில் TR வக்கீலாக வருவார், படத்தின் பெயர் மறந்து விட்டது. அதில் ஒரு காட்சியில் நீதிமன்றம் மதிய உணவிற்கு கலையும் நேரத்தில் நேரத்தில் விஷம் என்று வைக்க பட்ட சாட்சி பொருளை அருந்தி விட்டு வெளியே சென்று சிகிச்சை பெற்று மீண்டும் திரும்புவார்.

  அது Sidney Sheldon என்ற ஆசிரியர் 1970ல் எழுதிய "The Naked Face"என்ற புத்தகத்தில் வரும் அருமையான திருப்பம்.

  மிக சிறிய நிலையில் இருந்து முயற்சியால் முன்னேறினார், அதற்க்கு வாழ்த்துக்கள், ஆனால் அவரின் பொது வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி ... நுணலும் தன வாயால் கெடும் என்பதற்கு உதாரணமானார்.

  அது சரி அந்த மீன் பிழைத்ததா ?

  ReplyDelete
  Replies
  1. விசு,

   வருகைக்கும் தங்களின் வளமான பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

   மீன் இரண்டு நாட்கள் போராடி இறுதியில் இறைவனடி சேர்ந்துவிட்டது, என் மனம் சோர்ந்துவிட்டது.

   கோ

   Delete
 3. அவருடைய ஆரம்பகால பாடல்கள் பலவற்றில் தமிழ் சதிராடும். அவற்றுள் பல அருமையான தமிழிலக்கிய, இலக்கண கூறுகளை உள்ளடக்கியவை. "ஒரு பொன்மானை," "வைகைக் கரை காற்றே நில்லு" முதலிய பல பாடல்கள் இன்றும் நினைவில் நிழலாடுகின்றவை. Hope your gold fish has recovered brother.

  ReplyDelete
  Replies
  1. பிரபு,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   நல்ல கவிஞன் அவர், நல்ல ரசிகன் நீங்கள்.

   கோ

   Delete
  2. பிரபு,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   மீன் இரண்டு நாட்கள் போராடி இறுதியில் இறைவனடி சேர்ந்துவிட்டது.

   பரிவு காட்டிய உங்க பரந்த மனதிற்கு நன்றிகள்.

   கோ

   Delete
 4. ஒரு துணை தேவையாய் இருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை இருக்கும் துணையால் வந்த வினையாகவும் இருக்கலாம்.

   Delete
  2. நண்பரே,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   யாருக்கு மீனுக்கா?

   கோ

   Delete
 5. இப்படியான பாடல்களை எழுதிய இந்த மாமனிதரின், பிள்ளை எழுதிய பாட்டு.

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது நண்பரே,

   எல்லாம் கலி காலம்.

   கோ

   Delete