பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 அக்டோபர், 2015

ஆப்பம் - ஆசை - தோசை!!

ஜொள்ளு, சொல்லு !!


நண்பர்களே,

நாம் தினந்தோறும் உண்ணும் பிரத்தியேகமான உணவுகளுள் இட்டிலி, தோசை,ஊத்தாப்பம்,அடை, ஆப்பம்,இடியாப்பம், பணியாரம் அதாங்க குழி பணியாரம் போன்ற அனைத்து பலகாரங்களின் அடிப்படை மூலக்கூறுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்றாலும் ,ஒவ்வொரு பலகாரமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையும் சிறப்பும் சுவையும் கொண்டவை என்பதில் சட்டினி தாளிக்க பயன்படும் கடுகளவும் மிகை அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இதில் எனக்கு சாதாரணமாக எல்லா நாட்களிலும் பொதுவாக செய்யப்படும் இட்டிலி தோசை இரண்டில் தோசை மீது ஒரு தனி ஆசை. 

ஆனால் இங்கே இங்கிலாந்தில் , எங்களுக்கு,இட்டிலி அரிசி வாங்கி, உளுத்தம்பருப்பை வாங்கி, வெந்தயத்தை போட்டு ஊற வைத்து,அரைத்து,அதை இரவெல்லாம் புளிக்க வைத்து, அடுத்த நாள் எடுத்து வார்த்து சாப்பிடும் அளவிற்கு மனம் நிறைய ஆசை இருந்தாலும் அதற்குண்டான தவ வலிமையோ, பொறுமையோ, கால அவகாசமோ இருந்தாலும் இங்கிருக்கும் சீதோஷன மாற்றங்களால் பல வேளைகளில் அரைத்து வைத்த மாவு புளிக்காமலே போய்விடுவதால், இந்த இட்டிலி தோசை  பிடிக்காமலே போய்விட்டது. இது குறித்து எமது முந்தைய பதிவான  வெஸ்ட்டும் ஈஸ்ட்டும் படிக்கவும். 


அப்படியும் சில நாட்களில் விடா முயற்சியின் பலனாக , சூரிய பகவானின் அருளால் இட்டிலி தோசைகளை ருசி பார்பதுண்டு.

எனினும் இவை இரண்டை தவிர மேற்கூறிய ஏனைய பலகாரங்களான,ஆப்பம், குழி பணியாரம் , இடியாப்பம் , அடை, ஊத்தாப்பம் வகையாராக்களை செய்து சாப்பிட நினைத்துகூட பார்த்தது இல்லை.

இந்த ஆப்பத்தின் மீது எனக்கொரு தீராத  காதல் என்றுகூட  சொல்லலாம், அதை நினைத்தாலே வாயில் எச்சை ஊறுமளவிற்கு,

 நான் சின்ன பையானாக இருக்கும்போது (இப்பவும் பச்ச புள்ளதான் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்)எங்கள் வீட்டின் அருகில் இருந்த ராம ஜெயம் அக்கா அவர்களின்  வீட்டில்  காலை உணவாக மேலே சொன்ன அத்தனை ஐட்டங்களையும் செய்து விற்பனை செய்வார்கள்.

அவர்கள் செய்யும் அனைத்து பண்டங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றவை, ஆப்பமும் குழி பணியாரமும்தான். அதுவும் இந்த இரண்டு ஐட்டங்களும் கொஞ்சமாகத்தான் செய்வார்கள் எனவே இவை இரண்டுக்கும் ஏக கிராக்கி.

எனினும் நாங்கள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்னரே, அவர்களின் மகளான மகா அல்லது மகன் கதிர் மூலம் எங்களுக்கு கொடுத்தனுப்புவார்கள், எனவே மகா எப்போது ஆப்பம் கொண்டுவருவாள் என்று காலை வேளைகளில் வாசலை பார்த்து கொண்டிருந்த நாட்களும் உண்டு.

ஆஹா......என்ன ருசி என்ன ருசி.... இது போன்று வேறு யாரும் செய்ய முடியுமா என்று என் எண்ண அலைகள் அப்போதே அந்த ஆப்பத்தின் மீதும் குழி பணியாரத்தின் மீதும்  ஓயாமல் வீசி கொண்டிருக்கும்.

சில ஆண்டுகள் கழித்து குடும்பமாக ரட்சன்ய யாத்திரைக்காக நாகூர்,வேளாங்கண்ணி, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. நாகூரில் இரவு தங்க வேண்டி இருந்ததால் அடுத்த நாள் காலை தங்கி இருந்த இடத்திற்கு எதிரில் உள்ள ஒரு பெண்மணியின் சிறிய ஓட்டலில் ஆப்பமும் குழி பணியாரமும் பிரசித்தி என்பதை அறிந்து உணவருந்த சென்றோம்.  

ஆர்டரின் பேரில்தான் செய்வார்களாம் அப்போதுதான் சூடாகவும் சுவையாகவும் இருக்குமாம்,நாங்களும் ஆர்டர் செய்தோம் தேங்காய் பாலையும்  சேர்த்து.

அவர்கள் செய்வதையே வேடிக்கைபோல பார்த்துகொண்டிருந்த என்  வாயிலிருந்து வழியும் ஜொள்ளை நான் என்ன சொ(ஜொ)ல்ல?

ஆஹா  .... ராமஜெயம் அக்காவின் கைவண்ணம் போலவே அந்த பெண்மணியின் கைவண்ணமும் அமைந்திருந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்,  சுவைத்து சாப்பிட்டேன்.

இப்படியாக சின்ன வயதில் இரண்டொரு முறை ஆப்பத்தையும் குழி பணியாரத்தையும் சாப்பிட்ட எனக்கு அதற்கடுத்து பல வருடங்கள் இவைகள் அரிதாகி போய்  விட்டன. 

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்த சமயம் ஒரு நாள் இரவு சுமார் 10 மணிக்கு மேல் பத்து பேர்கொண்ட குடும்ப உறுப்பினர்கள்  இரவு உணவிற்காக நகரத்தின் மையத்தில் புதிதாக திறக்கபட்டிருந்த ஒரு ஓட்டலுக்கு சென்றோம். 

அங்கே ஒரு பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று பல புதிய புதிய பெயர்களில் உணவு பண்டங்களின் பெயர்கள் எழுதபட்டிருந்தன. ஒரு பெயரும் பரீட்ச்சயமானதாக புலப்படவில்லை, அப்படியே ஒவ்வொன்றாக வாசித்துக்கொண்டு வருகையில் கண்களில் ஒரு ஒளி, மனதினில் ஒரு மகிழ்ச்சி.

 காரணம் அந்த போர்டில் அன்றைய ஸ்பெஷலாக இருந்த ஐட்டங்களுள் பல வருடங்கள் கண்களுக்கு மறைவாய் இருந்த ஆப்பமும் குழி பணியாரமும்.

அவற்றின்  பெயர்களை வாசிக்கும்போது, என் நினைவலைகளில் நீந்தி வந்தவர்கள், ராம ஜெயம் அக்கா, மகா, கதிர், நாகூர் ஓட்டல் பெண்மணியும் அந்த பழைய ருசியும்.

நினைவலையில் கொஞ்சம் நீந்திவிட்டு பிறகு தொடர்கிறேன்.

அதுவரை .....

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


6 கருத்துகள்:

  1. அருமையான ஆப்பம் ஆசை))) ஜொல்லு தொடருங்க.

    பதிலளிநீக்கு
  2. தனிமரம் எம் பதிவுகளுக்கு நிழல்தரும் கனி மரமாய் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அரசே,
    நம் பாரம்பரிய உணவு வகைகளே சிறப்பு தானே, தங்கள் பதிவு அருமை, இந்த உணவுப்பண்டங்கள் செய்வதற்கு நல்ல பக்குவம் தெரிந்தால் தான் முடியும்,,,
    நானே உங்கள் ஈஸ்ட் வெஸ்ட் பதிவு பார்த்து தான் இட்லி செய்யவே கத்துக்கிட்டேன். இதற்கும் செய்முறை விளக்கம் சொல்லியிருக்கலாம்.
    எனவே மகா எப்போது ஆப்பம் கொண்டுவருவாள் என்று காலை வேளைகளில் வாசலை பார்த்து கொண்டிருந்த நாட்களும் உண்டு.

    அப்படியா அரசே,,
    வாழ்த்துக்கள். தொடருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. ஆப்பம் செய்ய பக்குவம் தெரிந்தால்தான் நல்லபடியாக வரும் என்பது உண்மைதான். பாரம்பரியமான இந்த உணவு பண்டை கால தமிழர்கள் உண்டதற்க்கான ஓலை சுவடி குறிப்புகளோ, சிலபத்திகாரம், மணிமேகலை,வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி,பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்களில் ஏதேனும் ஆதார குறிப்புகள் இருந்தால் அதை நம்ம மக்களுக்கு சொல்வதுடன், ஆப்பத்தின் மேன்மையை உலகுக்கு தெரிவிக்க கொஞ்சம் உங்கள் ஆய்வறிக்கையை தயாரிக்க முடியுமா?

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. அட! ஆப்பம் எங்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்று....கடலைக்கறி, இல்லை என்றால் தேங்காய் பால்...வடைகறி யுடன் செம "கோ"ம்போ....பக்கெட் ப்ளீஸ் நாக்கில் ஜொள்ளு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      ஆப்பம் உங்களுக்கும் பிடிக்குமா?

      அதான் பக்கட் நிறைய ஜொள்ளா?

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு