பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 மே, 2015

"டீயா" வேலை செய்யனும் குமாரு!!

இலைமறைவு

நண்பர்களே,

மனித குலம், ஏற்ற இறக்கங்கள், உயர்வு, தாழ்வு, வசதி, வறுமை,ஆண்,பெண் சாதி, மதம்,  மொழி, இனம், இன்னும் எத்தனயோ வேறுபாடுகளை பொருட் படுத்தாமல், உலகின் எல்லா மனிதரும் தினமும் சுவைத்து மகிழக்கூடிய "பானங்களில்" தண்ணீருக்கு அடுத்தபடியாக பெருமளவிற்கு பயன்படுத்தப்படும் பானம் தேநீர் என்றால் அது மிகை அல்ல என்று சொல்லவும் வேண்டுமோ?

இந்த பானத்தை தயாரிப்பது என்பது மிக மிக எளிதான ஒன்று என்று நாம் அறிந்தவண்ணம், பதபடுத்தி வைத்திருக்கும்,Camellia sinensis எனும் தாவரவியல் பெயர்கொண்ட புதராக வளரக்கூடிய செடியின் இலைகளை வெந்நீரில் அல்லது கொதிக்கும்நீரில் சிறிது நேரம் வேகவைத்து வடித்து பெறப்படும் ஒரு சிறுங்கசப்பும் வித்தியாசமான நறுமணமும் கொண்ட  ஒரு பானம் என்பதும் நமக்கு தெரியும்.

இந்தவிதமான செடியின் இலைகளின் பயன்பாட்டை முதன் முதலில் கண்டறிந்தவர்கள், சீனர்களே. இந்த இலைகள் முதன் முதலில் ஒரு மருந்து பொருளாகத்தான் கீ பீ 16 ஆம் நூற்றாண்டுவரை  சீனர்கள் பயன்படுத்தி வந்தனர் அதன் பிறகு இதன் சுவையை அறிந்த போர்சுகீசியர்களின் அறிமுகத்தால்  கீ பீ 17 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் போன்ற மேற்கத்தைய நாடுகளும்  இந்த பானத்தினால் கவரப்பட்டு சீனாவிலிருந்து பெருமளவிற்கு இந்த செடியின் இலைகளை பதபடுத்தி இங்கிலாந்திற்கு கொண்டு சென்று பயன் படுத்த ஆரம்பித்தனர்.

தேநீர் பருகுவது என்பது இங்கிலாந்தில் ஒரு கலாச்சாரமாகவே மாறிப்போனது.

பிறகு இந்த செடியை  தாங்கள், ஆசியா கண்டத்தில் எந்தெந்த நாடுகளில் ஆட்சி செய்தனரோ அங்கெல்லாம் பயிரிட ஆரம்பித்தனர்.  அப்படி அவர்கள் மூலம் வந்தது தான் இந்தியாவில் தேநீர் உற்பத்தி.

Image result for pictures of tea

அதற்க்கு முன் சீனாமட்டுமே ஏகபோக தேநீர் உற்பத்திசெய்யும் நாடாக இருந்த நிலை மாறி,இப்போது ஆசியாவின் பெரும் பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தேநீர் உலகின் பெரும்பாலான மக்களால் பருகப்பட்டு வருவதால் தேநீரின் உற்பத்தியும் பெருகிக்கொண்டே வருகின்றது.

இப்படி பூமிபந்தின்மேல் பந்தம் கொண்டு வாழ்ந்து வரும் மனிதன் இந்த தேநீரை எதோ ஒரு ரூபத்தில் தினமும் பருகிகொண்டுதான் இருக்கின்றான்.

முதலில்  தேயிலைகளை வெந்நீரில் அல்லது கொதிக்கும் நீரில் இட்டு வடித்து பருகி வந்தவன் இன்றைய கால கட்டத்தில் இந்த தேநீரை பல பரிமாணங்களில் தயாரித்து பருகி வருகின்றான்.

இவற்றில், ஹெர்பல் தேநீர் என்றழைக்கப்படும் தேநீரில் தேயிலையே பயன்படுத்தபடுவதில்லை என்றாலும் அந்த பானத்தையும் தேநீர் என்றே அழைத்து பருகவே மனிதன் விரும்புகின்றான், அந்த அளவிற்கு தேநீரின் மேல் மோகம் முற்றி விட்டது.

எளிமையான முறையில் தயாரித்து பருகப்பட்ட இந்த தேநீர், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர், மாறுபட்ட வகையில் தயாரிக்கப்பட்டு பருகப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும்  புத்துணர்வும் மன அமைதியும் கிடைப்பதாக கருதி காலை வேளைகளில் மட்டுமே அருந்தபட்டு வந்த இந்த பானம், பிறகு, மத்தியான வேளைகளிலும் தேநீர் விருந்து என்னும் பெயரில் மாலை வேளைகளிலும் அருந்தபட்டு இப்போது நாளின் எந்த வேளையிலும் பருககூடிய ஒரு பானமாக மனித வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒரு பழக்கம், தேநீர் அருந்தும் பழக்கம்.

பல ஊர்களில் பலவிதமான தேநீர் பருகும் வாய்ப்பு கிடைத்தது குறித்து நினைக்கும்போது எனக்கு இப்பவும் நாக்கில் எச்சை ஊறுகிறது நெஞ்சில் அந்த நினைவுகளின் மிச்சம் நிழலாடுகிறது.

முதலில் நம்ம ஊர் தேநீர்:  தமிழ் நாட்டில் நான் சுவைத்த தேநீர் பெரும்பாலான வீடுகளில் போடப்படும் சாதாரண தேநீர் என்றாலும்  வெல்லம் போட்டு கொதிக்க வைத்து  அதில் ஆட்டுப்பால் கலந்து பருகிய அந்தசிட்டுகுருவி படம் போட்ட சிறிய பேக்கட்டுகளில்  கிடைத்த அந்த தேநீரின் சுவை இன்னமும் என் நாக்கில் இல்லை என்றாலும் என் நெஞ்சில் பதிந்திருக்கின்றது.



அடுத்து, மத்திய பிரதேசத்திற்கும் ராஜஸ்தானுக்கும் இடையில் இருக்கும் ரத்லம் எனும் ஊரில் பருகிய அந்த மசாலா தேநீர்  பாதி குடித்த நிலையில் அது  ஒட்டகத்தின் பாலில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் சொல்லப்பட ,மீதியை குடிக்காமல் வைத்துவிட்டு, வயிற்றுக்குள் போன பாதி தேநீரில் ஒட்டகத்தின் வாசம் வீசுவதாக இரவெல்லாம் பிரமையில் தூக்கம் துறக்க வைத்த அந்த தேநீரை எப்படி மறப்பது.

அரபு தேசத்தில் பருகிய "சுலைமானி" தேநீர், அந்த தேநீர் கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அவை வழங்கப்படும் கோப்பைகள் சிறிய அளவில் இருந்தாலும் குடித்து முடிக்க முடிக்க நாம் போதும் என்று சொல்லும்வரை கோப்பைகள் நிரப்பபட்டுகொண்டே இருக்கும் அந்த "சுலைமானி" தேநீரை கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு "கலைஞானி" அல்லது "கலை மாமணி" பட்டம் கூட கொடுக்கலாம், இந்த நேரத்தில் அங்கு வாழ்ந்த பல வருடங்கள் எனக்கு இந்த சுலைமானி தேநீர் தயாரித்து வழங்கிய நண்பர் அப்துல் ரஹ்மான்  அவர்களை நன்றியோடு நினைத்து பார்கின்றேன்.

அடுத்த தேநீர் எகிப்தில் ஒரு முடி திருத்தும் கடையில் கண்டிப்பான விருந்தோம்பலின் ஒரு பகுதியாக அங்கேயே தயாரித்து வழங்கப்பட்ட கருப்பு நிற கசப்பு , துவர்ப்பு தேநீர், அந்த தேநீரில் தேயிலையின் சுவையை விட அந்த மக்களின் வரலாற்று பாரம்பரியத்தின் பல பரிமாணங்களின்  பரிணாமங்களே அதிக சுவை கூட்டியது. அந்த தொழிலாளர்களின் அன்பும் விசாரிப்புகளும் எகிப்த்திய பிரமீடுகளின் உயரத்திற்கு இணையாக உயர்ந்திருந்தது.

இஸ்ரவேலின் கட்டுபாட்டில் இருக்கும் பாலஸ்தீனத்தில் குகை வடிவில் அமைக்கபட்டிருந்த சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தின் அடி தளத்தில் அதாவது பூமிக்கு கீழே இருந்த ஒரு தேநீர் கடையில் திகிலுடன் பருகிய அந்த பால் இல்லாத பாலஸ்தீனிய தேநீரை மிச்சம் வைக்காமல் குடிக்க நினைத்து மேலே ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களின் பூட்ஸ் சத்தத்தை காதிலும் சூடாக சுவையாக வழங்கப்பட்ட தேநீரை நாவிலும் உணர்ந்தவண்ணம் மிச்சமில்லா அச்சத்துடன் பருகிய அந்த சில நிமிடங்களை எப்படி மறக்கமுடியும்.

மேலும் பிரான்சு, ஜெர்மனி,பெல்ஜியம்,இத்தாலி,அமெரிக்கா,சுவிற்சலாந்து, ஹாலந்து, சிங்கபூர், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், மால்டா, போன்ற நாடுகளில் பலவிதமான தேநீர்களை பருகி இருந்தாலும், தேநீரின் தாயகமாக திகழும் சீனாவில் உலக அதிசயங்களுள் ஒன்றென கருதப்படும் சீன பெருஞ்சுவரின் அடிவாரத்தில் அமைந்திருந்த அந்த சிறிய தேநீர் கடையில் பருகிய பச்சை தேநீர் என்றழைக்கப்படும் "கிரீன் டீ" என்று சொல்லி வழங்கப்பட்ட மல்லி- "ஜாஸ்மின்"  டீயை எப்படி மறக்க முடியும்.

சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் வளாகத்தின் அருகில் இருந்த பிரபல தேநீர் தயாரிப்பு நிறுவனத்தை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது, அதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட சுவைகளில் தயாரிக்கப்படும் தேநீர்களில் பெரும்பாலான தேநீர்களை ஒரே கூரையின் கீழ் அமர்ந்து சுவைத்த அனுபவத்தை என்னவென்பேன், (முழுவதுமாக குடிக்க தேவையில்லை சொஞ்சமாக சுவைத்துவிட்டு அங்கேயே துப்பிவிட்டு அடுத்ததை சுவைக்கலாம்) அந்த சுவைகளில் மயங்கியே போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி இந்நாள் வரை எத்தனையோ நாடுகளில் எந்தனையோ சூழ்நிலைகளில் எத்தனையோ  விதவிதமான தேநீர்களை பருகி இருந்தாலும்  மாணவ பருவத்தில் ,பரீட்ச்சை நாட்களின் இரவு வேளைகளிலும் படிப்பின் இடையில் அருகிலிருந்த இரவு தேநீர்க்கடையில் நண்பர்களோடு சென்று தேநீர் பருகிவிட்டு மீண்டும் படிப்பை தொடர்ந்து , காலை தயாராகி பரீட்சைக்கு போகுமுன் சூடாக சுவையாக பருகிய அந்த காலைநேரத்து உட்லண்ட் தேநீர் கடையின் தேநீர் சுவை  என் கல்லூரி  .வாழ்வோடு கலந்த ஒரு அத்தியாயம்.

இந்த தேநீர் என்பது சாதாரண பானமல்ல, பலருக்கு பல வேளைகளில் உணவாகவே அமைந்த கதை பலர் சொல்ல கேட்டிருப்போம். 

இப்படி எத்தனையோ தேநீரின் சுவையும் அதன் நினைவுகளும் என் அடி மனதின்மேல் மட்டத்தில் குடியிருந்தாலும், என் தந்தையார் இறந்த நாள் இரவு எங்கள் அயலகத்தார் தயாரித்து எங்களுக்கு அன்போடும், பரிவோடும், கருணையோடும், கரிசனையோடும் கொடுத்த தேநீரில் சுவை மிகுந்திருந்தாலும் சுவை உணராமல்  கட்டாயத்தின் பேரில் கண்ணீரோடு கலந்து ஓரிரு முடக்குகள் பருகிய அந்த தேநீரின் நினைவு என் அடி மனதின் ஆழத்தில் சுனை எனவே சுழன்றுகொண்டிருக்கின்றது. 

தேநீர் அருந்துவது நல்லதா கெட்டதா என்பதை பற்றி பிறகு சிந்திப்போம்.

சரி தேநீர் என்பது திரவ பொருள்தானே, பின்னே ஏன் நம்மில் பெரும்பாலோர், " வாங்க டீ சாப்பிடலாம்" என்று சொல்கிறார்கள்?

சரி அதை பற்றி யோசிக்கும் முன் கொஞ்சம் இருங்க நானும் ஒரு டீ "சாப்டுட்டு" வந்துடறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ



5 கருத்துகள்:

  1. தேநீரின் நினைவுகளில் கூட மகிழ்ச்சியும் துக்கமும் கலந்தே இருக்கிறதே நண்பரே

    பதிலளிநீக்கு
  2. வுட்லண்ட்ஸ் தேநீரை மறக்க தான் இயலுமா? அதுவும் கணக்கு வைத்து குடித்த நாட்கள் அல்லவா அவை ?
    இதை படிக்கும் போதே .... மனதில் என்னால் மறக்க முடியாத தேநீர் சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றது.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10 மே, 2015 அன்று AM 4:41

    தாங்கள் எழுதிய சிட்டு குருவி டீ பாக்கெட் ஒரு நாற்பது வருடம் முன்னே என்னை இழுத்து சென்று விட்டது. இன்று எங்கும் காண கிடைப்பதில்லை. தேநீர் குடிப்பதால் பயன் ஒன்றும் இல்லை என்று ஒருவர் சொன்னார். ஓரளவிற்கு பயன் க்ரீன் டீ மட்டுமே என்றும் சொன்னார். உண்மையா என்று தெரியாது.

    பதிலளிநீக்கு
  4. இந்த குமாரு "டீயா" வேலைசெஞ்சு பல நாடுகளைச் சுற்றி சுற்றி "டீ" குடித்திருக்கிறார் போல...நல்லது.

    "டீ சாப்பிடலாம்" என்று சொல்றது கூட ஓகே, ஆனா சிலபேரு "சிகரெட் சாப்பிடலாம் வாங்க" என்று (என்னை யாரும் கேட்டகவில்லை) சொல்வதை என்ன சொல்வது ?!

    நல்லா... தமிழ் பேசுறாங்கையா.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி,

    ரெண்டுமே சூடா இருப்பதனால் இருக்குமோ?

    பீடி வலிகிக்கலாம்னு சொன்னதகூட கேட்டிருக்கேன். அது என்ன வலியோ?

    சரி டீசாப்படலாம் வாங்க சாயந்திரமா?

    கோ

    பதிலளிநீக்கு