பின்பற்றுபவர்கள்

திங்கள், 25 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 2

நிகழ்ச்சி தொடர்கிறது.....

முதலில் இருந்து படிக்க ..


ஓரங்க நாடகங்கள், குழு நடனங்கள், தனி திரள்காண் நிகழ்வுகள்   என பஞ்சமில்லா பஞ்சு  மிட்டாய் நிகழ்ச்சிகள்.

அடுத்து வருவது பாடல் மற்றும் கதை நேரம்.

காக்கா , நரி, பாட்டி கதை ..."பாப்பா பாப்பா கதை கேளு"...... சுவாரசியமான பல புதிய திருப்பங்களும் திகைப்புகளும் நிறைந்திருந்த அந்த கதையின் போக்கில் அந்த கதை சொல்லிய  அல்ல அல்ல பாடிய பாப்பா கடைசியாக கதையை முடிக்கும் போது சொல்லிய சொற்றொடர் அரங்கத்தில் தொடர் சிரிப்பை விதைத்து சென்றது,  அப்படி என்ன  சொற்றொடர்?

"அட...... வட போச்சே"!!!!

அதை தொடர்ந்து, நாம்  இந்தியாவில் பயன்படுத்திய காய்கறிகளின் பெயர்களை கடுகளவும் பிழை இன்றி, வெள்ளரி பழ வெள்ளை சிரிப்புடன் அனாயசியமாக பட்டியலிட்டு சொல்லிய பெயர்களுள் குறைந்த பட்சம் இருபது காய்கறிகள் பழங்களாவது  இருந்திருக்கும் , எண்ணிக்கையில் தவறிருக்கலாம் எனக்கு கணக்கு கொஞ்சம் பிணக்கு.

பின்னர் "தாகம் கொண்ட காகம்"  பானையின் அடியில் இருந்த தண்ணீரை தனது யுக்த்தியால் எப்படி பருகி தாகம் தீர்ந்து - சோகம் தீர்ந்து வேகமாக பறந்து சென்றது என்பதை சுவைபட  விவரித்து கதை சொன்னது  ஒரு "சிட்டு குருவி".    
தமிழ் என்று மேடை முழங்கும் பலரும் அநேகமாக மறந்து விட்ட அவ்வை பாட்டியின் மூதுரை மீண்டும் இந்த பூமி பந்தின்  மீது ஒலித்தது; அதை குழந்தை மூலம் கேட்டதும் கேட்போரின் உள்ளம் சிலிர்த்தது, இனியேனும் "அறம் செய்ய விரும்பு" என ஆணை இட்டது அவ்வையின் பொக்கை வாய். 

 அவ்வையின் ஆணை வந்த  பின்னர், மேடைக்கு யானை  வந்தது கூடவே, நரி, கரடி சிங்கம், புலி, மான்....முயல்  ...சிறுத்தை . என அத்தனை விலங்குகளின் பெயர்களையும் பட்டியலிட்டு அணி வகுத்து மேடைக்கு அழைத்து வந்தனர் தங்கள் செவ்விதழ் பவள வாயுதிர்த்த  பாடலின் வாயிலாக. 

பாரதியாரின் பாடல்களை தங்கு தடையின்றி அப்பியாசம் செய்து காட்டினர், அதை தொடர்ந்து,ஒரு குயில் வந்து பாடியது:

," மயில் போல ....பொண்ணு ஒன்னு..... " 

இப்படியாக, வள்ளுவனை, இளங்கோவை, பாரதியை, கம்பனை,அவ்வையை,பாரதிதாசனை,மனோன் மணியம் சுந்தரம்பிள்ளையை, மாயூரம் வேதநாயகனை,கணியன் பூங்குன்றனாரை போற்றும் விதங்களில் அவர்களது படைபிலக்கியங்களின் பல பகுதிகளை இந்த இரண்டு வயது முதல் அதிகபட்சம் பத்து வயதிற்குள் இருந்த பத்து சிறுவர் சிறுமியர் பத்துப்பாட்டு, எட்டுத்தொகைகளாக மேடை பந்தியில் பரிமாறி பாராட்டு பெற்றதன் பின்னணியில் இருந்த அந்த நான்கு ஆசிரியைகளை பாராட்ட பொருத்தமான வார்த்தைகளை இந்த பதிவின் ஆரம்பத்திலிருந்து இதுவரை தேடிக்கொண்டிருக்கின்றேன்.

அவர்களுக்கு  இந்த ஊர்  பாணியில் என் தொப்பியை கழற்றி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Image result for pictures of hats off

ஒவ்வொரு ஆசிரியையும் அவர்களின் பங்குகளை நேர்த்தியான பாங்குடன் நிறைவேற்றினர்.

அவர்களின் தமிழ் ஆர்வத்திற்கும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பொருட்டு பல வேலை சுமைகளுக்கும் குடும்ப சூழ்நிலைகளுக்கும் மத்தில் தாய்மொழி காக்கும் இந்த உன்னத பணியில் தங்களை அற்பணித்துகொண்டு , செய்யும் பணியை சீரோடும் சிறப்போடும் செவ்வனே செய்து வருவதன் ஒரு சிறிய   உதாரணத்தை இன்று  மாணவ மாணவியர்மூலம் மேடை ஏற்றி வெளிச்சம் வீசிய அவர்களுக்கு, என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பாராட்டுக்கள்.

இத்தனைக்கும் அந்த நால்வரும் மருத்துவம் மற்றும் கணணி துறையில் பாண்டித்தியம் பெற்றவர்களே அன்றி தமிழ் புலமையோ தனி பயிற்ச்சியும் பெற்றவர்கள் அல்ல  எனினும் தமிழின் பாலுள்ள தணியாத பற்று இந்த அரும் பணியில் அவர்களை பாசத்துடன் பற்று கொள்ள  செய்துள்ளதும் குறிப்பிட்டு பாராட்டபடதக்கது.

நிகழ்ச்சியின் இடை இடையில் பார்வை யாளர்களின் சிந்தைகள் சிலிர்த்தெழும் வண்ணம் நண்பர் ஒருவர் நம்ம ஊர் பழமொழிகளையும் விடுகதைகளையும் கேட்டும் விடைகளை விடுவித்தும் நிகழ்ச்சியை மேலும் கலகலபூட்டினார்.

அதை தொடர்ந்து வந்த ஒரு நிகழ்ச்சியின் போது அரங்கத்தில் திடீரென தீ பிடித்த வாசனை.... எங்கும் உஷ்ண உணர்வு ....அதை பற்றி நாளை சொல்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

பின் குறிப்பு:
இது எனது நூறாவது பதிவு!!!



4 கருத்துகள்:

  1. பூமி பந்தில் ஒலித்த எம் ஆசிரியர்களின் பாடலை அம் மழலைகளுக்கு கற்பித்த அந்த நான்கு உள்ளங்களுக்கும் உங்களைப் போல் நான் தேடிய வார்த்தை, என் சிரம் தாழ்த்திய வணக்கத்துடன் கூடிய நன்றிகள். வாழ்க அவர்கள், வளர்க அவர்கள் பணி. இந்நிகழ்வினைப் பதிவில் வைத்த உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் அந்த நான்குபேர்களுக்கும் போய் சேரும். உங்கள் ஊக்கம் அவர்கள் பணி சிறக்க நிச்சயம் உதவும்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. அவர்களின் பணி மேலும் சிறக்கட்டும்...

    திகிலுடன் காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் அந்த நான்குபேர்களுக்கும் போய் சேரும். உங்கள் ஊக்கம் அவர்கள் பணி சிறக்க நிச்சயம் உதவும்.

    திகில் .... திகில்... விரைவில்.......

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு