பின்பற்றுபவர்கள்

சனி, 4 ஜூன், 2022

ஒய்யார வாகனம்!!

ஒப்பில்லா சீதனம்!!. 

நண்பர்களே ,

முந்தய பதிவின் தொடர்ச்சியாக இந்த மேலதிக  பயண அனுபவ பதிவினை வாசிப்பதற்குமுன்னால் எமது முந்தைய பதிவினை வாசிக்க வேண்டுகிறேன்; தொடர அனுகூலமாக இருக்கும்..

 கிளாஸ்(ஸோட)கோ!!! (koilpillaiyin.blogspot.com)   

கடந்த இரவு கண்னுக்கு குளிரூட்டிய  வண்ண காட்சிகள் என் விழிகளில்  நிரம்பி வழிந்துகொண்டிருந்ததால்   இமைகள் மூட முடியாமல் உறக்கம் வர வழக்கத்தைவிட சற்று  கூடுதல் நேரமானது. 

எனினும் அடுத்தநாள் காலை சுற்றுலா பேருந்தில் சென்று பல இடங்களை பார்க்கவேண்டி இருந்ததால் அந்த இடங்களின் சிறப்பு குறித்து சேகரித்து வந்த குறிப்பேடுகளை கொஞ்சம் மேலோட்டமாக பார்த்துவிட்டு வலுக்கட்டாயமாக உறங்க சென்றேன்.

அடுத்தநாள் காலை தயாராகி, தங்கி இருந்த ஓட்டலிலேயே (buffet) காலை உணவினை முடித்துக்கொண்டு( வழி பயணத்தின்போது பயன்படுமே என்று ஒரு வாழைப்பழம் ஒரு ஆரஞ்சு பழத்தை கையில் எடுத்துக்கொண்டு) , அங்கிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் நின்றுகொண்டிருந்த சிறப்பு பேருந்து (City sightseeing HOP on HOP off bus )  நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தேன்.அங்கே  முதலில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் ஓட்டுனரிடம் விசாரித்ததில் இந்த வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் புறப்படும் என்றும் , எந்தெந்த வழி தடங்களில் பயணிக்கும் என்றும் சுருக்கமாக விரித்துவிட்டு கையில் ஒரு map  ஐ கொடுத்தார்.

கட்டணம் £16.00(ருபாய் ஆயிரத்து அறுநூறு) செலுத்திவிட்டு open top பேருந்தில் சரியான view கிடைக்கும்படியான இருக்கையில் அமர்ந்து அவர்கள் கொடுத்த ஒலிவாங்கியை இருக்கையின் முன்னால்  அமைந்திருக்கும் socket ல் இணைத்து  காதில் பொருத்திக்கொண்டேன்.

சுமார் 21 முக்கிய சுற்றுலா இடங்களை சுற்றிக்காட்ட புறப்படும் அந்த வாகன பயணத்தின்போது சாலையின் இரு மருங்கிலும்  -  இடது மற்றும் வலது புறங்களில் அமைத்திருக்கும்  அந்ததந்த இடங்கள், கட்டிடங்கள், சிலைகள், பூங்காக்கள், பாலங்கள், ஆறுகள் பல்கலை;கழகங்கள்,அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள், நூலகங்கள்  குறித்த   சிறப்பு செய்திகளையும் அவரவருக்கு ஏற்றவகையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, ஜெர்மன்  போலந்து(polish) மற்றும் சீன மொழியான Mandarin போன்ற     சுமார் 7 மொழிகளில் வர்ணணனைகளாக பதிவு செய்யப்பட்ட குரல்வழியாக சொல்லிக்கொண்டே வருகிறார்கள்.

இத்தனை இடங்களின் வெளி தோற்றத்தை பேருந்தில் அமர்ந்தவண்ணமே பார்த்து ரசிக்கலாம்.

உள்ளே சென்று பார்த்து, இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள விரும்பு பவர்கள் Mapபுடன் கொடுக்கப்பட்டிருக்கும் கையேட்டில் அடுத்து என்ன வருகின்றது அதற்கடுத்து என்ன பார்க்கப்போகிறோம் என்பதை அறிந்து அதற்கேற்றார்ப்போல அங்கங்கே இறங்கி கொள்ளலாம்.

பார்த்து முடித்ததும் அடுத்து வரும் பேருந்தில் ஏறி அடுத்த இடத்திற்கு செல்லலாம்.

வாங்கப்பட்டிருக்கும் டிக்கட் 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என்பதால் ஒருவர் எத்தனை முறைவேண்டுமானாலும் இறங்கி ஏறலாம்.

முதலில் பேருந்தில் இருந்தபடியே எல்லா இடங்களையும் ஒருமுறை அதன் சிறப்பு விடயங்களை பதிவு குரல் செய்திமூலம் கேட்டுக்கொண்டே சுற்றி வந்தேன்.

பிறகு மீண்டும் அதே பேருந்தில் புதிய சுற்றுலா பயணிகளுடன் பயணித்து, இப்போது ஓரளவிற்கு தெரிந்துகொண்ட சில இடங்களை மட்டுமே இறங்கி பார்ப்பதென்று முடிவு செய்து அதன்படி என் பயணத்தை அமைத்துக்கொண்டேன்.

இந்த பயணப்பாதை   George  Square ல் ஆரம்பித்து  Glasgow Cathedral ,Merchant  Square ,Barras  Market ,Glasgow Green , St. Vincent Place , Central Station, Clyde Arc, Scottish Events Campus ,Riverside Museum ,University of Glasgow , Byres Road , Theatre Royal , Royal  Concert Hall வழி தடங்களில் , தடங்கலின்றி பயணிக்கின்றது.


மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டால்  அங்கிருந்து அருகருகே அமைத்திருக்கும் பல்வேரு சிறப்பு இடங்கள், கட்டிடங்கள், வளாகங்கள், அங்காடிகள் நினைவு தூண்கள், அருங்காட்சியகங்கள், சிலைகள் போன்றவற்றை பார்க்க முடியும்.

சீதோஷணம் அனுகூலமான சுகமாக  இருந்ததால்  காலை முதல்(மத்திய உணவு இடைவேளை தவிர)மாலைவரை இந்த hop on hop off  பேருந்தில் அமர்ந்து கொண்டும் ஆங்காங்கே  இறங்கி   பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு வேறொரு பேருந்தில் ஏறி பயணிப்பதுமாக அந்த நாள் முழுவதும் எனக்கு இனிய  நாளாகவும் புதிய பல செய்திகளை அறிந்துகொள்ளும் நாளாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

அப்படி நான் மிகவும் ரசித்து பார்த்த பல இடங்களுள்:

கிபி 1197 ல் கட்டப்பட்டு இன்றளவும் மக்களின் வழிபாட்டு தலமாக விளங்கும் கிளாஸ்கோ கதீட்ரல்.


அடுத்ததாக நான் பார்த்து பரவாசித்தது; நகரத்தின் மைய பகுதியில் 1778 ஆம் ஆண்டு வில்லியம் கன்னிங்ஹாம் எனும் தனவந்தரின் town house ஆக  கட்டப்பட்ட கட்டிடத்தில் 1996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இன்றைய தேதியில் சுமார் பல மில்லியன் பார்வையாளர்களை வசீகரித்துகொண்டிருக்கும் Gallery of  Modern Art :


அடுத்ததாக என்னை கவர்ந்த இடம்:

1450 ஆம் ஆண்டு  Glasgow வின் மத தலைவராக - (பேராயர்) -  விளங்கிய Bishop Turnbull  என்பவருக்கு (தேவபாலய சொத்தாக  இருந்திருக்குமோ?) சொந்தமான 136 ஏக்கர் பரப்பளவுள்ள பூங்காவை மக்களின் பயன்பாட்டிற்காக  அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட Glasgow  Green.


அடுத்ததாக 1888 ல் நிறுவபட்ட , முற்றிலும் டெரகோட்டா(Terracotta ) மூலப்பொருள் கொண்டு கட்டப்பட்ட , 46 அடி  உயரமும்  70 அடி  சுற்றளவும்  உள்ள  - உலகிலேயே மிக பெரிய  நீரூற்று(Fountain) -Doulton Fountain .

இரண்டு முறை அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு வேறு வேறு இடங்களில் நிறுவி கடைசியாக 2004 ல் மக்கள் அரண்மனை (People 's  palace) ன் முகப்பில் நிறுவப்பட்டிருக்கின்றது.அடுத்து அருகில் சென்று அண்ணாந்து பார்த்து வியந்த ஒன்று, Clyde Arc என்று அழைக்கப்படும் Clyde ஆற்றின் மீது அரைவட்ட வடிவில் தாங்கிப்பிடிக்கும் இரும்பு  கம்பிகளால்  இணைத்து  கட்டப்பட்டிருக்கும்  பாலம்.அடுத்து பார்த்து ரசித்தது , Riverside Museum :

கெல்வின் ஆறும்  கிளைட் ஆறும் சந்திக்கும் இடத்தின் கரையில் 21 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்டமான அருங்காட்சியகம். 2011 ல் திறக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு இலவசமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சி அகத்தில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட வாகனம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு அந்த நகரத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் அதன் தொழில் நுட்பம் போன்றவற்றின் தொகுப்பு அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை பார்த்த இடங்களிலேயே நான் அதிக நேரம் செலவழித்த இடம் இந்த riverside அருங்காட்சியகம்தான்.


இத்தகைய பயணமும்  பார்த்து அனுபவித்த காட்சிகளும் இடங்களும் எனக்கு கிடைத்த பெரும் சீதனமாக கருதுகிறேன்.

செய்திகளும் காட்சிகளும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

நினைவிலிருக்கும் மற்ற செய்திகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்துகொள்கிறேன் , அதுவரை ...

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

4 கருத்துகள்:

 1. அழகான இடங்களை நீங்கள் பகிர்ந்த படங்கள் வழி நாங்களும் பார்த்து ரசித்தோம். நன்றி கோ.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் தேர்வு சரியே. நீங்கள் சொல்லி வரும் போதே அட! ஒரு ரவுன்ட் வந்துவிட்டு அடுத்து இடங்களைத் தேர்வு செய்துகொண்டு ஆங்காங்கே இறங்கிப் பார்க்கலாம் போல!! என்று நினைக்கத் தோன்றியது...

  நீங்கள் தேர்ந்தெடுத்து பார்த்த இடங்கள் எல்லாம் அருமை. அழகாக இருக்கின்றன. படங்களும் விவரங்களும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. ரசனையான படங்கள். சிறப்பான பதிவு.
  ஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.

  பதிலளிநீக்கு